நாயகன் முகம் காணா நாயகிகள்!

அவள் ஆவலோடு எதிர்பார்த்த இனிய வாய்ப்பு. பெறற்கரிய அவ்வாய்ப்பைப் பிணக்கிலே வீணாக்கிவிட்டாள்.
நாயகன் முகம் காணா நாயகிகள்!

அவள் ஆவலோடு எதிர்பார்த்த இனிய வாய்ப்பு. பெறற்கரிய அவ்வாய்ப்பைப் பிணக்கிலே வீணாக்கிவிட்டாள். "வருவான் வருவான்' என நங்கை ஆவலோடு எதிர்பார்த்திருந்த நாயகன் நரதுங்கன் (குலோத்துங்க சோழன்) வந்தான். நேரிலா? இல்லை; நித்திரைக் கனவில். ஏங்க வைத்தவன் எதிரே வந்தான் என்றதும் தேங்கி நின்ற காதலை மொத்தமாய் செலவழிப்பது போல தேகத்தைத் தழுவிக்கொண்டாளா?; ஊடினாள். ஊடலிலேயே நிமிடங்கள் நீர்த்துப்போயின. நேசன் கனவிலிருந்து மறைந்துவிட்டான். நேரம் உணராமல் ஊடிய நெஞ்சை நேரிழை நிந்தித்தாள். இப்படியோர் நாயகியைப் படம்பிடிக்கிறது கலிங்கத்துப் பரணியின் கடைதிறப்புக் காதை.

கூடிய இக்கன வதனிலே

கொடைநர துங்கனொடு அணைவுறாது

ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர்

உமது நெடுங்கடை திறமினோ! ( பா. 24)

இதோ இன்னொருத்தி. இவளை விடவும் பரிதாபத்திற்குரியவள். கனவிலே அல்ல; கண்ணெதிரே வந்த செங்கோல் வளவனின் திருமுக அழகை விழிகளால் அள்ளிப் பருக விழைந்தாள். பருகினாளா? இல்லையே! பக்கத்திலேயே இருந்த அவன் முகத்தைப் பாவையால் பார்க்க இயலவில்லை.

ஏனிந்த கொடுமை? அந்தக் கொடுமையை ஆரணங்கே அவதியுற நவில்கிறாள். "விரும்பி வந்த நாயகனை விருட்டென ஓடிப்போய் அணைத்தேனா? இல்லையே; திரும்பி நின்று கொண்டேன். உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே "உம்'மென முகத்தை வைத்துக்கொண்டு ஊடலால் முதுகு காட்டி நின்றேன்.

அரும்பிய காதல் மலர்ந்ததால், நாயகன் அணைத்தானே அப்போதாவது அவன் முகம் கண்டேனா? இல்லையே. நிலைகுலைந்து நாணி தலை குனிந்தேன். நெருங்கினான்; புலன்கள் மயங்கியதால் கண்களிருந்தும் பார்வையில்லை. அவன் முகத்தைக்காண முடியவில்லை. இதுதான் நான் என் நாயகன் முகத்தைக் கண்ணாரக் கண்ட அழகு' என்று ஏக்கத்துடன் முனகினாள் முத்தொள்ளாயிர (பா. 58) நாயகி ஒருத்தி.

புலவி புறக்கொடுப்பன்

புல்லிடின் நாண் நிற்பன்

கலவி களிமயங்கிக்

காணேன்; நிலவியசீர்

மண் ஆளும் செங்கோல்

வளவனை யான் இதன்றோ

கண்ணாரக் கண்டறியா வாறு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com