எட்டப்பன் இருக்க ஏன் கவலை?

எட்டயபுரம் அரண்மனையில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர், கடிகைமுத்துப் புலவர். தமிழ்ப் புலமை மிக்க மன்னர் எட்டப்பருக்கு மிகவும் நெருக்கமானவர்.

எட்டயபுரம் அரண்மனையில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர், கடிகைமுத்துப் புலவர். தமிழ்ப் புலமை மிக்க மன்னர் எட்டப்பருக்கு மிகவும் நெருக்கமானவர். அரண்மனையிலிருந்து அவரை அழைத்துவர நித்தமும் அரசர் பல்லக்கு அனுப்புவார். எல்லா வசதிகளையும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்த புலவர், முதுமையில் நோய்வாய்ப்பட்டார். "நாலு வைத்தியரும் நம்புதற்கு இல்லை' என்று கூறிவிட்டனர்.

இச்செய்தி கேட்ட மன்னர், புலவரைப் பார்க்க வந்தார். அவரைப் பார்த்து மனம் வருந்தினார். புலவரின் ஒரே மகளும் அழுது புலம்பினாள். அந்த நேரமும் நெருங்கியது. உறவினர்கள், புலவரின் மகளை நோக்கி, ""அம்மா! பஞ்சைப் பச்சைப் பாலில் நனைத்து அப்பாவின் வாயில் பிழி'' என்று கூறினார்.

அப்போது பஞ்சு அங்கு இல்லாததால், பழைய வெள்ளைத் துணியை அதற்குப் பயன்படுத்தினாள் மகள். புலவர், வாயில் பால் விழுந்ததும் முகம் மாறினார். ""அப்பா! பாலும் கசக்கிறதோ?'' என அவள் கேட்க, அவர், ""பாலும் கசக்கவில்லை; பாலைப் பிழிந்த துணியும் கசக்க (துவைக்க) வில்லை'' எனத் தான் இறக்கும் தருவாயிலும் தமிழில் விளையாடினார்.

""அப்பா அப்பா'' என மகள் அழ, ""அழாதே அம்மா! இந்த ஓர் அப்பன் போனால் என்ன? உன்னைக் காப்பாற்ற எட்டு அப்பன் (எட்டப்பன்) இருக்கிறான்; ஏன் கவலைப்படுகிறாய்?'' என்று கூறிக் கண் மூடினார்.

மன்னர் மகளது கரம் பற்றி, "நானிருக்கிறேன் உன் தந்தையாக'' என்று ஆறுதல் கூறினார். புலவர்கள் வாழ்வில் தமிழ் எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறது பாருங்களேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com