ஈசனின் இன்ப அன்பு

திருவெம்பாவையின் முதல் எட்டுப்பாடல்கள் உரையாடற் போக்கில் அமைந்தன. அவற்றுள் சில பாடல்களில் எது உள்ளே இருப்பவள் பேச்சு, எது வெளியே இருப்பவர்கள் பேச்சு என்பதில் அறிஞர்கள் மாறுபடுகிறார்கள். அத்தகைய பாடல்களுள் "பாசம் பரஞ்சோதியும்' ஒன்று.

திருவெம்பாவையின் முதல் எட்டுப்பாடல்கள் உரையாடற் போக்கில் அமைந்தன. அவற்றுள் சில பாடல்களில் எது உள்ளே இருப்பவள் பேச்சு, எது வெளியே இருப்பவர்கள் பேச்சு என்பதில் அறிஞர்கள் மாறுபடுகிறார்கள். அத்தகைய பாடல்களுள் "பாசம் பரஞ்சோதியும்' ஒன்று.

""பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்

பேசும்போது எப்போது இப்போதுஆர் அமளிக்கே

நேசம் வைத்தனையோ நேரிழையாய்''

என்பது வெளியே இருப்பவர்கள் பேச்சு. இதனை அடுத்து வரும் பகுதி உள்ளே இருப்பவள், வெளியே இருப்பவர்கள் ஆகிய இருவர் பேச்சா? அன்றி உள்ளே இருக்கும் ஒருத்தி பேச்சா? பண்டிதமணி கதிரேசச் செட்டியார், ரா. சண்முகசுந்தரஞ் செட்டியார், பி.ஸ்ரீ. போன்றோர் இருவர் பேச்சாகக் கொண்டுள்ளனர்.

""நேரிழையீர்

சீசி இவையும் சிலவோ விளையாடி

ஏசுமிடம் ஈதோ?''

என்பதை உள்ளிருப்பவள் பேச்சாகவும்,

""விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

ஈசனார்க்கு அன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்''

என்பதை வெளியில் இருப்பவர்கள் பேச்சாகவும் கொண்டுள்ளார்கள். மேலும், ""ஈசனார்க்கு அன்பார் யாம் ஆர்'' என்பதற்கு, ""தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்? அயலவர் அல்லவே'' என்று பண்டிதமணியும், ""பெருமானுக்கு நாம் யாவரும் அன்புடையவர் அல்லவா என்று நல்லுரை பகர்ந்தனர்'' என்று ரா. சண்முகஞ் செட்டியாரும், ""வெளியே இருப்பவர்களுள் ஒருத்தி, பெருமானுக்குச் செலுத்த வேண்டிய அன்பு என்றால் அது சாமானியமா? அந்த அன்பின் தன்மை என்ன? எங்கள் தன்மை என்ன?'' என்கிறாள் என்று பி.ஸ்ரீ.யும் விளக்கம் அளித்துள்ளனர். இவ்விளக்கங்களில் ஈசனார்க்கு அன்பு என்பது பெண்கள் இறைவன்மீது செலுத்துதற்குரிய அன்பினைச் சுட்டுகிறது.

"வாகீச கலாநிதி' கி.வா.ஜ. மட்டும் இப்பகுதி முழுவதையும் உள்ளே இருப்பவள் பேச்சாகக் கொண்டு, ""நேரிழை அணிந்த பெண்களே, இப்படி விளையாட்டாகப் பேசி ஏசும் இடம் இதுதானா? ஆண்டவனுடைய மலர்ப்பாதம் தேவர்களால் துதிப்பதற்கு அடங்காமல் அவர்களுடைய வாயைக் கூசச் செய்கிறது. நாமாக முயன்று அந்தப் பாதத்தைப் பற்றிவிட முடியாது. இறைவனாக அருள்செய்து தன் திருவடியை நமக்குத் தந்தருள வந்தருளுவான். அவன் தெய்விக தேஜஸ் உடையவன். சிவலோகத்தில் இருக்கிறான். அடியார்களுக்கு அருள் செய்வதற்காகத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து நடனம் ஆடுகிறான். அத்தகைய பெருமானிடத்துள்ள அன்புக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம்மிடத்தில் சிறிதும் அன்பு இல்லையே என்கிறாள்'' என்று விளக்கியுள்ளார். இவ்விளக்கத்தில் ஈசனார்க்கு அன்பு என்பது இறைவனிடத்தில் உள்ள அன்பைச் சுட்டுகிறது.

இவற்றுள் எப்பகுப்பு தக்கது? இதனை அறிவதற்கு "ஈசனார்க்கு அன்பார் யாம் ஆர்' என்பதன் பொருளைத் தெளிதல் வேண்டும். பண்டிதமணி உள்ளிட்டோர், ஈசனார்க்கு என்பதில் உள்ள நான்காம் வேற்றுமைக்குக் கொடைப் பொருளையே கொண்டுள்ளனர். நான்காம் வேற்றுமை இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய பிற வேற்றுமைப் பொருள்களிலும் மயங்கி வரும். (தொல்.சொல், வேற்றுமை மயங்கியல், நூற்பா.27) "இப்பெருமை அவனுக்குச் சேரும் என்றால் அவனைச் சேரும் என்றும், இது அவனுக்கு முடியும் என்றால் அவனால் முடியும் என்றும், அவனுக்கு இவன் நல்லவன் என்றால் அவனைவிட இவன் நல்லவன் என்றும், அவனுக்கு அறிவு நுட்பம் என்றால், அவனுடைய அறிவு நுட்பம் என்றும், கோடைக்கு வருவான் என்றால் கோடையில் வருவான் என்றும் பொருள்படும்.

இந்த அடிப்படையில், "ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர்' என்பதற்கு ""ஈசனாருடைய அன்பு எத்தன்மைத்து? நாம் எத்தன்மையோம்?'' என்று பொருள்கொள்வதே தகும். இங்கு நான்காம் வேற்றுமை ஆறாம் வேற்றுமை உடைமைப்பொருளில் வந்துள்ளது. அன்பு ஓர் உடைமைப்பொருள் என்பதனை அன்புடைமை என்னும் திருக்குறள் அதிகாரப்பெயரே காட்டும். "ஆர்' என்பதற்கு எத்தன்மைத்து என்பது பொருள். ""நான் ஆர் என் உள்ளம் ஆர்'' (திருக்கோத்தும்பி,பா.2) என்பது "நான் எத்தன்மையேன்? என் உள்ளம் எத்தன்மைத்து?' என்று பொருள்படுவதே சான்று.

இப்படிப் பிற்பகுதி முழுவதையும் உள்ளிருப்பவள் பேச்சாகக் கொள்ளும்போது, வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவளிடம் படுக்கையின்மீது நேசம் வந்துவிட்டதா என்று வினவ, அவள், மலர்ப்பாதம் தந்தருள வந்தருளுகிற சிவபெருமானுடைய இன்ப அன்பினைக் கூறி அவனது எளிவந்த தன்மையையும் அதனை அறியாமல் விளையாடிக் கொண்டிருக்கிற தங்களுடைய தன்மையையும் உறழ்ந்து காட்டுவதாகவும், ஈசனார்க்கு அன்பு என்பது இறைவனது அன்பைச் சுட்டுவதாகவும் அமைந்து இன்பம் பயக்கும் என்பது ஒருதலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com