கவிராயர்கள்

இவர் நெல்லையைச் சேர்ந்த சேற்றூரில் பிறந்தவர். முகவூர் கந்தசாமிக் கவிராயரின் மகன்.
கவிராயர்கள்

மு.இராமசாமிக் கவிராயர்

இவர் நெல்லையைச் சேர்ந்த சேற்றூரில் பிறந்தவர். முகவூர் கந்தசாமிக் கவிராயரின் மகன். இவருடைய பிள்ளைகளே மு.ரா.அருணாசலக் கவிராயர், சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர், மு.ரா.கந்தசாமிக் கவிராயர்கள் ஆவர். இவர், பொம்மு நாயக்கர், பாஸ்கர சேதுபதி, பாண்டித்துரைத் தேவர், ஊற்றுமலை ஜமீன் ஆகியோரால் பாராட்டப் பெற்றவர். நிறைய தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இவரும் இவருடைய மகன் சுப்பிரமணியக் கவிராயரும் சேற்றூர் ஜமீன் முத்துசாமித்துரை மீது குறவஞ்சி பாடியுள்ளனர்.

மு.ரா. அருணாசலக் கவிராயர்

இவர் சேற்றூர் அருகிலுள்ள முகவூரில் பிறந்தவர். மு.இராமசாமிக் கவிராயரின் மகன். வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் உற்ற நண்பராக விளங்கியவர். சேறைத் தவம்பெற்ற நாயகி பிள்ளைத்தமிழ், சிவகாசித் தலபுராணம், பர்வதவர்த்தினியம்மை பிள்ளைத்தமிழ், ஒற்றைக்கடை விநாயகர் அந்தாதி, இரட்டைமணி மாலை, மும்மணிக்கோவை, குற்றாலப்புராணம், வேணுவன புராணம், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களுள் சிலவற்றை இயற்றியும், சிவவற்றை பதிப்பித்தும் உள்ளார்.

சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர்

இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் இரண்டாவது மகன். நமச்சிவாய தேசிகரிடம் கல்வி பயின்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து குறிப்புரைகள் எழுதி பதிப்பித்தவர். இவர் தன் தந்தையுடன் இராயப்பட்டி ராயப்ப உடையாரை சந்திக்கச் சென்றபோது குதிரைக் குட்டியைப் பரிசாகப் பெற்றுள்ளார். இவர், மதுரை மீனாட்சியம்மை கொம்பைத் தமிழ் நூலையும் பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

மு.ரா.கந்தசாமிக் கவிராயர்

இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மகன். துறைசை ஆதீனம் நமச்சிவாயத்திடம் கல்வி பயின்றவர். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் நட்பு பூண்டிருந்தவர். சிறிது காலம் ஆசிரியராகவும், பின்னர் மதுரையில் விவேக பாநு அச்சகம் தொடங்கி, "விவேக பாநு' என்ற பத்திரிகையையும் நடத்தியவர். திருப்பேரூர் திரிபந்தாதி, குமண சரித்திரம், பவ நிவேத நாயகியம்மை பிள்ளைத்தமிழ், கருமலையாண்டவர் துதி மஞ்சரி, அரிமழத் தலபுராணம், வியாசர் திரட்டு (இரண்டு பாகம்), தனி செய்யுள் சிந்தாமணி முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com