இந்த வாரம்

"கருப்பு', "கறுப்பு' சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. "பொருத்து', "பொறுத்து' சர்ச்சை போல, இப்படிச் சொன்னால் அப்படி, அப்படிச் சொன்னால் இப்படி என்று வாதப் பிரதிவாதங்கள்

"கருப்பு', "கறுப்பு' சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. "பொருத்து', "பொறுத்து' சர்ச்சை போல, இப்படிச் சொன்னால் அப்படி, அப்படிச் சொன்னால் இப்படி என்று வாதப் பிரதிவாதங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன. போதும், முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று பார்த்தால், பட்டுக்கோட்டையிலிருந்து புலவர் சா. பன்னீர்செல்வம், "என்னுடைய கருத்தைப் பதிவு செய்துவிட்டு முற்றுப்புள்ளி வையுங்கள்' என்று கட்டளை பிறப்பித்துவிட்டார். நான் படித்த விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் தொழிலாளர் நலக் கழக உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்தவராயிற்றே, அவரது ஆணையை மீறுவது மாணாக்கனாகிய எனக்கு அடுக்குமா?

""தமிழ்மணியில் கருப்புப் பணம் - எனும் சொல்லாட்சி பற்றிய குறிப்புரை கண்டேன்.  தமிழாசிரியர் பலரும் வழக்கமாகச் செய்கின்ற தவறுகளையே ஞானச்செல்வனும் செய்திருந்தார்.

கருப்புப் பணம் என்பது பணத்தின் நிறம் பற்றியதல்ல; பெறப்படும் முறைமை பற்றியது. மறைவாக நடந்த செயல் வெளிப்படையாகி விட்டது - என்பதை இருட்டில் நடந்தது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என்று குறிப்பிடுகிறோம். இருளை, காரிருள், கரிய இருள், கருமையான இருள் என்றுதான் எழுதுகிறோம். காறிருள், கறிய இருள், கறுமையான இருள் எனவும், கறிய நிறம், கறிய மேனி, நிலக்கறி, அடுப்புக்கறி எனவும் எழுதுவாரில்லை. கரி - என்பதன் பகுதி கருமையாவதன்றிக் கறுமையாகாது. கரிய இருளில் - மறைவில் சட்டத்திற்குப் புறம்பாகப் பெறப்படும் பணம் கருப்புப் பணமாகாது கறுப்புப் பணமாதல் எங்ஙனம்?

÷வெண்மை - வெளுப்பு, வெண்டாமரை; செம்மை - சிவப்பு, செந்தாமரை, கருமை - கருப்பு, கருவிழி. இவற்றிற்கிடையில் கறுப்பு எங்கிருந்து எப்படி வந்தது?

""கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள

நிறத்துரு உணர்த்துதற்கும் உரிய என்ப''

(தொல். 855, 856)

என்னும் தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரையாளர் தரும் விளக்கங்களும், சான்றுகளும் நிறைவாகவில்லை. கறுப்பு - வெகுளிப் பொருளாதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டு. கறுப்பு - நிறப் பெயராதற்கு இலக்கியச் சான்று ஏதுமில்லை.''

புலவர் சா.பன்னீர்செல்வத்தின் கருத்தையும் வாசகர்கள் பார்வைக்கு வைத்துவிட்டேன். இத்துடன் இந்த விவாதம் இங்கே முற்றுப்பெறுகிறது. ஆங்காங்கே உள்ள இலக்கிய அமைப்புகளும், பள்ளி, கல்லூரிகளும் இனி இந்த சர்ச்சையை மேலெடுத்துச் சென்று ஒரு முடிவான முடிவை எட்டுவதுதான் தமிழுக்கு நன்மை பயக்கும்!

குறுகத்தரித்த குறள்; மலையைப் பிளக்கும் சிற்றுளி; கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது - அஃதேபோல, பக்கங்கள் 32 தான் என்றாலும், முனைவர் பட்ட ஆய்வுக்கு ஒப்பானது "தமிழின் சிறப்பு' என்கிற மறைமலை அடிகளாரின் சொற்பொழிவுப் புத்தகம்.

சென்னை சைதாப்பேட்டை திருவள்ளுவர் செந்தமிழ்ச் சிவநெறிக் கழகத்தின் சார்பில் 1949-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் நாள், பல்லாவரம் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளார், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் "தமிழின் தனிச்சிறப்புகளும், தமிழர் கடமைகளும்' என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

இப்படியெல்லாம் சொற்பொழிவுகளும், தமிழாய்வுகளும் நடந்த இடம்தான் சென்னை மாநகரம். அப்போது, இன்றைக்கு இருப்பதுபோல போக்குவரத்து வசதிகள் கிடையாது. ஆனால், தமிழுணர்வு இருந்தது. நல்லதைக் கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. குடும்ப அமைப்புகளைச் சிதைக்கும், பண்பாட்டைக் குலைக்கும் தொலைக்காட்சிகளின் மீதான மோகம் இல்லாதிருந்த பொற்காலம் அது.

மறைமலை அடிகளாரின் சொற்பொழிவை கி.ஆ.பெ.விசுவநாதம் அவர் நடந்திவந்த "தமிழர் நாடு' என்கிற இதழில் வெளியிட்டார். அதுவே இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

பிரணவம் என்று சொல்லப்படும் "ஓம்' என்கிற ஓசையிலிருந்துதான் உலகம் பிறந்தது என்பது நம்பிக்கை. "ஓம்' என்கிற ஓசையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் என்பது மறைமலை அடிகளாரின் கருத்து.

""ஓம் தமிழுக்காகவே எழுதப்பட்டது. "ஓம்' என்ற சொல் ஓங்கார வடிவிலே எழுதப்படுகிறது. ஆரிய மொழியிலுங்கூட, தமிழ் வடிவிலேயே "ஓம்' என்ற சொல் எழுதப்படுகிறது. "ஓம்' என்ற ஓசை முதல் முதலில் ஏற்பட்டதற்கும், ஓங்கார வடிவில் "ஓம்' அமைந்திருப்பதற்கும் என்ன காரணமென்று மக்களில் பலரிடம் உசாவியிருக்கிறேன்.

நாளாக நாளாக எனக்கு ஒரு கருத்துப் புலனாயிற்று. அதாவது, நம்முடைய காதின் வடிவத்தைப் பார்த்தால் ஓங்கார வடிவாகவே இருக்கும். பொருத்தமாயிருந்தால் என் கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

÷கூட்டொலி என்றும், பிரிவொலி என்றும் தமிழில் இருவகை உண்டு. இதனைச் "சமஷ்டி' என்றும், "வியஷ்டி' என்றும் வடமொழியில் சொல்வதுண்டு. கூட்டொலி - "ஓம்'; பிரிவொலி - அ, உ, ம்'' என்று கூறுகிறார் மறைமலை அடிகளார்.

÷தனது உரையின் முடிவில், பூண்டி அரங்கநாத முதலியார், மாணிக்கவாசகரின் பாடல் ஒன்றை ஒரு சம்ஸ்கிருதப் புலவரிடம் எப்படி எடுத்துக்காட்டி, தமிழ்மொழி ஆரிய மொழியிலிருந்து வந்ததல்ல என்பதை விவரிக்கிறார்.

""விழியாற் பிணையாம், விளங்கி

   யலான் மயிலா, மிழற்று

மொழியார் கிளியாம், முதுவா

  னவர்தம்   முடித் தொகைகள்

கழியாக் கழற்றில்லைக் கூத்தன்

   கயிலை முத்தம் மலைத்தேன்

கொழியாத் திகழும் பொழிற்

   கெழிலாமெங் குலதெய்வமே''

திருச்சிற்றம்பலக் கோவையில் வரும் இந்த "ழ'கர, "ள'கர ஓசையுடைய பாடல் தமிழின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. அப்படிப்பட்ட தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட நாம் தமிழில் பேசுவதையே கேவலமாகக் கருதுகிறோம். அப்படியே பேசுபவர்களில் பலரும், தமிழைத் "தமில்' என்றும், "டமில்' என்றும், "தமிள்' என்றும் பேசித் திரிகிறோம். இத்தனை எதற்கு? இன்னும் நாம் தமிழ்நாட்டைத் "தமில்நாடு' என்றுதானே அழைத்துக் கொண்டிருக்கிறோம்....

நல்லவேளை, மறைமலை அடிகள் இன்று நம்மிடையே இல்லை. இருந்திருந்தால்...

சின்னமனூர் அ.கற்பூரபூபதி தனது நண்பர் கம்பம் ரவியின் "பிடிமண்' என்கிற ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பை எனக்கு அனுப்பித் தந்திருந்தார். ஆர்.ரவிச்சந்திரன் என்கிற ரவி, கம்பத்தில் "ரவி டிஜிட்டல் ஸ்டூடியோ' நடத்தி வருகிறார் என்பது அவரது முன்னுரையிலிருந்து தெரிகிறது. புகைப்படக் கலைஞர்களும், ஓவியர்களும் கவிஞர்களாகும்போது அவர்களது படைப்புகளில், இயற்கையாகவே அழகும் நளினமும் காணப்படுவது இயல்பு.

÷அணிந்துரை எழுதியிருக்கும் கம்பம் மாயவனைப் போலவே, நானும் ரசித்தேன் ""கோவில் புதுப்பிக்கப்படுமா? அம்மாவின் நரை'' என்கிற கவிதையை.

÷ஆனால், அதைவிட என்னை பாதித்த கவிதை தேசியக்கொடி பற்றியது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, இன்றைய உலகத்துக்கே பொருந்தும். உழைப்பவர் உழைத்துக்கொண்டே இருக்கிறார். உழைக்காதவன் பிழைத்துக்கொண்டே இருக்கிறான். தேசியக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருக்கின்றன.

÷அடுத்த ஆண்டு கம்பம் வழியாக சபரிமலை செல்லும்போது கட்டாயம் ரவி டிஜிட்டல் ஸ்டூடியோவுக்குப் போய் கவிஞர் கம்பம் ரவியை சந்திக்க வேண்டும் என்று குறித்துவைத்துக் கொண்டேன்.

தைப்பவன் தொழிலாளி

விற்பவன் முதலாளி

தேசியக் கொடி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com