"பேசி' வகைகள்

இது பேசி வகைகளின் பொதுப் பெயர் ஆகும். இதன் உண்மை வடிவம் தொலைப்பேசி என்பதே! அதாவது "ப' கர ஒற்றுப் (ப்) போட்டு எழுத வேண்டும் என்பதே சரியான - தெளிவான இலக்கண முறையாகும்.

தொலைப்பேசி

இது பேசி வகைகளின் பொதுப் பெயர் ஆகும். இதன் உண்மை வடிவம் தொலைப்பேசி என்பதே! அதாவது "ப' கர ஒற்றுப் (ப்) போட்டு எழுத வேண்டும் என்பதே சரியான - தெளிவான இலக்கண முறையாகும். எனினும், பெரும்பாலோர் தொலைபேசி என்றே "ப'கர ஒற்றுப் போடாமல் எழுதி வருகிறார்கள். இது தவறான பொருளையே தரும். தொலைபேசி என்பது தொலைந்த பேசி - தொலைகின்ற பேசி - தொலையும் பேசி என முக்காலத்தையும் காட்டும் வினைத்தொகை ஆகிறது. இது தொலைதூரத்தில் உள்ள ஒருவரிடம் நாம் பேசவோ அல்லது தொலைதூரத்தில் உள்ள ஒருவர் நம்மிடம் பேசவோ பயன்படும் கருவி என்ற பொருளில் தொலைப்பேசி என வழங்கப்பட்டது - வழங்கப்படும் - வழங்கப்பட வேண்டும். இதே சொல் அமைப்பில் தொலைப்பயணம், தொலைச்செலவு, தொலைப்பார்வை, தொலைத்திட்டம், தொலைச்சிந்தனை, தொலைக்காட்சி என்றுதானே நாம் வழங்கி வருகிறோம். அப்படியானால் தொலைப்பேசியும் சரிதானே!

நிலைப்பேசி

வீட்டில் ஓரிடத்தில் நிலையாக இருக்கும் பேசி நிலைப்பேசி ஆயிற்று. இது அங்கும் இங்கும் அலையாது - நகராது ஓரிடத்திலேயே நிலைத்து இருப்பதால் இப்பெயர் ஆயிற்று. நிலையான படி நிலைப்படி (வாயிற்படி) ஆனது போல.

கைப்பேசி

கைப்பேசி என்பதே சரியான இலக்கணச் சொல் ஆகும். "ப்' என்னும் "ப'கர ஒற்றுப் போட்டே எழுத வேண்டும். எனினும், பெரும்பாலோர் "ப'கர ஒற்றுப் போடாமல் எழுதி வருகிறார்கள். இது தவறானது. கை பேசி எனில் கை யால் பேசுவது (வாயால் பேசுவது அன்று) என்றும், "கை'யில் பேசுவது என்றும் பொருள் விரியும். கைப்பேசி எனில், கையில் உள்ள அடக்கமான - அதாவது கையடக்கமான சிறிய பேசி என்பதே இதன் பொருள்.

அலைப்பேசி

மிகு பலர் அலைபேசி என்றே "ப'கர ஒற்றுப் போடாமல் எழுதுகிறார்கள். அலைப்பேசி என்றே சரியாக - திருத்தமாக- இலக்கண முறைப்படி எழுத வேண்டும். அலைபேசி எனில், அலையும் பேசி - அலைகின்ற பேசி - அலைந்த பேசி என முக்காலத்துக்குமாகப் பொருள் விரிந்து வினைத்தொகை ஆகும். இது தவறான அணுகுமுறையாகும். இந்தப் பேசி எங்கும் அலையவில்லை. பேசியைக் கையில், மடியில், பையில் வைத்திருக்கும் நாம்தாம் அங்கும் இங்குமாக அலைகிறோம். மேலும், காற்றலையால் - காந்த அலையால் - மின் அலையால் பேசப் பயன்படும் கருவி ஆதலால் இது அலைப்பேசி ஆயிற்று.

உலாப்பேசி

மாத இதழ் ஒன்றில் உலாபேசி என்னும் புதிய சொல் அறிமுகத்தைக் கண்டு மகிழ்ந்தேன். எனினும், இந்த உலாபேசி என்பது தவறான சொல் வடிவம். உலாபேசி என்பது உலாவும் பேசி - உலாவுகின்ற பேசி - உலாவிய பேசி என வினைத்தொகை ஆகும். பேசி எங்கும் - எப்போதும் உலவுவது இல்லை. பேசியைக் கையில், பையில், மடியில் வைத்திருக்கும் நாம்தாம் உலவுகிறோம். நாம் உலவிக் கொண்டே பேசியைப் பயன்படுத்துவதால் அது உலாப்பேசி ஆயிற்று.

செல்ப் பேசி

மிகு பலர் செல்பேசி என்றே வழங்கி வருகிறார்கள். இது ஆங்கிலச் சொல்லான (இஉகக) செல் என்னும் பெயரில் பொருள் கொள்ள இடம் இருக்கிறது. தமிழிலும் செல் என்பதற்குச் செல்லுதல் என்னும் பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது. தமிழில் செல் பேசி எனச் சொல்ல விரும்பினால் இது வினைத்தொகை ஆகி செல்லும் பேசி - செல்கின்ற பேசி - சென்ற பேசி என விரியும். பேசி என்னும் கருவி எங்கும், எப்படியும், எப்போதும் செல்லவில்லை. நாம் வாயால் சொல்லும் சொல்லை அந்தக் கருவி வழி செல்ல வைப்பதால் அது செல்ப்பேசி ஆயிற்று.

ஆம் செல்பேசி - வினைத்தொகை. செல்ப்பேசி நமது சொல்லைக்கொண்டு செல்லும் பேசி. ஆகவே செல்ப்பேசி ஆயிற்று.

இலக்கிய இதழ்கள் மற்றும் சிற்றிதழ்கள் பலவும் தற்போது தொலைப்பேசியையே பயன்படுத்தி வருகின்றன. பேசிகள் குறித்த மேற்கூறப்பட்ட ஆய்வுக் கருத்துகள் அனைத்தும் தமிழ் அறிஞர்கள், புலவர்கள் பலராலும் 100 சதவிகிதம் ஒப்புக்கொள்ளப்பட்ட

உண்மையாகும்.

நம் அன்றாட வாழ்வில் பயன்படும் - பயன்படுத்தும் தொலைக்காட்சி சரி எனில், இதே பாணியை - வழியை - இலக்கணத்தையொட்டி தொலைப்பேசியும் சரிதானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com