ஒட்டவே... ஒட்டாது!

96-வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி. அந்தத்தை ஆதியாக உடையது. இது அன்மொழித் தொகை. இவ்வாறு நூலின் ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமையப்பாடுவதை 'மண்டலித்தல்' எனக் கூறுவர்.

96-வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி. அந்தத்தை ஆதியாக உடையது. இது அன்மொழித் தொகை. இவ்வாறு நூலின் ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமையப்பாடுவதை "மண்டலித்தல்' எனக் கூறுவர். அந்தாதியில் யமக அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, சிலேடை அந்தாதி, திரிபந்தாதி, நூற்றந்தாதி, இருசொல் யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, திரிபுவெண்பா அந்தாதி, இதழகலந்தாதி(நீரோட்டக யமகவந்தாதி), ஏகபாத அந்தாதி, சந்தக் கலித்துறை அந்தாதி, கலிவிருந்த அந்தாதி, சதகத்தந்தாதி முதலிய பல வகைகள் உள்ளன.

நாம் காண இருப்பது இதழகலந்தாதி. இதை "நீரோட்டகயமக அந்தாதி' என்றும் கூறுவர். நீரோட்டகம் என்பது, நிர் ஓட்டகம் - உதடுகள் ஒட்டாமல் பாடுவது; ""மீ கீழ் இதழுறப் ப, ம பிறக்கும்'' என்பது இலக்கண விதி. பகரம், மகரம் கலவாது பாடுவது நீரோட்டகப் பாடலாகும். இது மிறைக்கவி இனத்தைச் சேர்ந்தது. பல அடிகளிலாயினும் ஓரடியில் பல இடங்களிலாயினும், வந்த எழுத்துத் தொடர்களே மீண்டும் வந்து பொருள் வேறுபடுவது யமகம் எனப்படும்.

நீரோட்டக யமக அந்தாதியாவது, நீரோட்டமும் மடக்குமாகப் பாடப்படுவது. இதழகலான நீரோட்டம், மடக்கணியான யமகம் இரண்டையும் இணைத்துப் பாடப்படும் இலக்கிய வகை இது. "கற்பனைக் களஞ்சியம்' துறைமங்கலம் சிவப்பிரகாசர், கட்டளைக் கலித்துறையில் பாடியதுதான் "திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி'. இந்நூலே "நீரோட்டக யமக அந்தாதி'யின் முன்னோடி நூலாகப் போற்றப்படுகிறது. இதிலுள்ள ஒரு பாடலில் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றில் இடம்பெறும் முதலை விழுங்கிய சிறுவனை, சுந்தரர் திருப்பதிகம் பாடி மீட்டுத் தந்தது பேசப்படுகிறது. அப்பாடலைக் காண்போம்.

""சத்திக் கரத்த னகச்சேயங் கத்தினைத் தந்தனனற்

சத்திக் கரத்த னகச்சிலை யாளிதன் றாளிணைநே

சத்திக் கரத்த னகத்தியைந் தேத்தரன் தந்தகதிர்ச்

சத்திக் கரத்த னகசெந்தி லாய்நின் சரண்சரணே! (பா.12)

பதவுரை: சத்திக் கரத் தன்அகச் சேய் அகத்தினைத் தந்தனன் - வலிமையுடைய முதலை தன் வயிற்றுக்குள் விழுங்கி வைத்த அந்தணச் சிறுவன் உடலை (சுந்தரரின் திருப்பதிகத்தின் பொருட்டு) எழுப்பித் தந்தவரும்; நல் சத்திக்கு அரத்தன் - மங்களமான பராசத்திக்குப் பாதித் திருமேனியைப் பகிர்ந்தவரும்; நகச் சிலை ஆளி - மலையை (மேரு) வில்லாக ஆண்டவரும்; தன் தாள் இணை நேசத்து - தனது இரு திருவடிகளில் அன்பு கொண்ட; இக்கர் அத்தன் அகத்து இயைந்து ஏத்து அரன் தந்த - கரும்பு வில்லுடைய காமன் தந்தையான திருமாலின் திருவுள்ளத்தில் தங்கி, துதிக்கப்பெற்ற சிவனார் அருளிய; கதிர் சத்திக் கரத்து அனக - ஒளியுடைய வேல் ஏந்திய திருக்கரத் தெய்வமே!

செந்திலாய் - திருச்செந்தூரில் எழுந்தருளிய தேவே! நின் சரண் சரணே! - அரிய உமது திருவடிகளுக்கே அடைக்கலம்.

இப்பாடலில் சுந்தரர் தொடர்புடையதாக இடம்பெற்றுள்ள வரலாற்றுத் தகவல்:-

இரு அந்தணச் சிறுவர்கள் பொய்கையில் விளையாடியபோது அவர்களுள் ஒருவனை முதலை விழுங்கிவிடுகிறது. உயிருடன் இருந்த சிறுவன் மூலம் இறந்த சிறுவனின் பெற்றோர் விவரம் அறிந்து, அழுது ஏங்கித் தவித்தனர். இவ்வாறு நாள்கள் பல கடந்தன. ஆண்டுகள் உருண்டோடின. அந்தப் பொய்கையும் வற்றி வறண்டது; அதிலிருந்த முதலையும் இறந்துபோனது; அந்நிலமும் வறண்ட நிலமானது.

ஒருநாள் உயிருடன் இருக்கும் அச்சிறுவனுக்கு உபநயனம் நடந்தது. "இப்போது நம் மகனும் உயிருடன் இருந்திருந்தால், நாமும் அவனுக்கு உபநயனம் நடத்திப் பார்த்திருப்போமே' என மகனை இழந்த பெற்றோர் கதறி அழுதனர்.

அந்தச் சமயத்தில் சுந்தரர், அவிநாசி என்ற திருத்தலத்துக்கு வந்தார். அந்த அந்தணர் வீதியில், ஒரு வீட்டில் மங்கல ஒலி; எதிர் வீட்டில் அழுகுரல் ஓசை. இதை அறிந்த சுந்தரரின் உள்ளம் அதிர்ந்தது. அழுபவரை அழைத்து விவரம் அறிந்தார். உடனே வறண்ட நிலமான அப்பொய்கைக் கரைக்குச் சென்றார்.

""அருள் ஓங்கு சடையானே! பொழிலாரும் சோலைப்

புக்கொளியூரிற் குளத்திடை இழியாக் குளித்த

மாணி, எனைக் கிரி செய்ததே!''

""உரைப்பார் உரை உகந்து, உள்கவல்லார் தங்கள் உச்சியாய்!

அரைக்காடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!

புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!

கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே!''

என்று அதிகாரத் தோரணையில் சிவபெருமானை நினைத்து ஒரு பதிகம் பாடினார். பாடிய அளவிலேயே வறண்ட பொய்கையில் நீர் சுரந்தது; எமனுக்கும் கட்டளை பிறந்தது; முதலைக்கும் உருவம் கிடைத்தது. அதன் வயிற்றில், அந்தணச் சிறுவன் உருவானான். கரைக்கு வந்த முதலை, பிள்ளையைக் கக்கியது. பதிகம் கேட்ட பரமன், சிறந்த இத்திருவிளையாடலைச் செய்தனன்; சுந்தரமூர்த்தி சுவாமிகள் தலைமையில் அச்சிறுவனுக்கும் அன்றே சிறப்பாக உபநயனம் நடந்தது. இவ்வளவையும் நிகழ்த்தியது நம் செந்தமிழ் மொழி! தமிழ் மொழியால் எதைத்தான் நிகழ்த்திக்காட்ட முடியாது? இவ் வரலாற்றுத் தத்துவத்தை "சைவ சித்தாந்த' அடிப்படையில்,

""வாங்குசிலை புரையும் உடலெனும் குளத்தில், மூல

மலமெனும் ஓர் வெங்கரவின் பகுவாயில் நின்றும்

தீங்கில் உயிர் எனும் பனவக் குலமகனை, ஆதி

திரோதாயி என்னும் ஒரு வெந்திறல் கூற்றுவனால்,

ஓங்குறு நாதாந்தம் எனப் பெயரிய அக் கரையில்

உமிழ்வித்துச் சிவமெனும் ஓர் தந்தையொடும் கூட்டாய்;

கோங்கமுகை கவற்றும் இல முலைப்பரவை மகிழக்

குண்டையூர் நெல்மலை முன்கொண்ட அருட்கடலே!

என்று நால்வர் நான்மணிமாலை விளக்குகிறது.

"பிரார்த்தனைக்கு இரங்கி, இறந்த பிள்ளையை எழுப்பிய பெருமான், தன் உருவப் பாதியில் உமையை வைத்து, கம்பீரமான தெய்வீகம் காட்டுகின்றான். மலையை வில்லாக வளைத்தது, அவன் நெடும் பேராற்றலை நினைவூட்டுகின்றது.

காத்தல் தொழில் திருமால் என்றும் கருதும், "அரன்' எனும் நாமம் தனக்கே உடையவன் அந்தத் தற்பரன். அத்துணைச் சிறந்த சிவனார் அருளிய செல்வமே! ஆணவ இருளை அகற்றி, உத்தம உயிர்களை ஒளிமயமாக்கும் ஞான சக்தியாம் வேல் கரத்து விமலா! திருச்செந்திலில் எழுந்தருளிய தெய்வமே! நின் திருவருட்கே அடைக்கலம் என்றபடி' (உரை விளக்கம்: ஏ.உத்தண்டராம் பிள்ளை)

இதழ் ஒட்டாத பல திருக்குறள்களை வள்ளுவப் பெருமானும் அருளிச்செய்துள்ளார். இதுபோன்று நம் அருளாளர்கள் அருளிச்செய்த இத்தகைய நீரோட்டக (யமக) அந்தாதிப் பாடல்களைப் படிக்கும்போது நம் இதழ்கள் ஒட்டவில்லையாயினும், மனம் இறைவனோடு ஒட்டி - உறவாடி இரண்டறக் கலந்துவிடுவதை ஆழ்ந்து கற்போரால் நன்கு உணரமுடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com