தொட்டிக்கலையின் தமிழ்த் தொண்டு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் வீரநாராயணப் பெருமாள் கோயில் மேல வீதியில் கார்காத்த வேளாளர் குலத்தில் பிறந்தவர் "தொட்டிக்கலை' சுப்பிரமணிய முனிவர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் வீரநாராயணப் பெருமாள் கோயில் மேல வீதியில் கார்காத்த வேளாளர் குலத்தில் பிறந்தவர் "தொட்டிக்கலை' சுப்பிரமணிய முனிவர். தன் வாழ்நாளையே தன் குருநாதருக்காகவும், சிவபெருமானுக்காகவும், முருகப் பெருமானுக்காகவும் அர்ப்பணித்து அருள்பெற்று, பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியவர். இவரே மாதவ சுப்பிரமணியர் என்றும் அழைக்கப்படுகிறார்.

நிலையற்ற உலக வாழ்வில் பற்றேதும் இன்றி, நிலையான பேரின்ப வாழ்வை அடைய விரும்பி பல்வேறு திருத்தலங்களைத் தரிசித்தவர். ஸ்ரீமாதவ சிவஞான முனிவரிடம் தமிழை ஐயமின்றி கற்றுத் தேர்ந்தவர்.

திருவள்ளூர் அருகேயுள்ள "தொட்டிக்கலை' என்ற ஊரில் உள்ள சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் குடிகொண்டிருக்கும் பெருமான் மீது அன்பு கொண்டு அவ்வூரிலேயே வாழ்ந்தவர். இவரை, கேசவ முதலியார், வேதாசல முதலியார் போன்றோர் ஆதரித்து மகிழ, இவரும் அவர்களைப் புகழ்ந்து பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

தொட்டிக்கலையில் உறையும் சிதம்பரேசுவரரைப் போற்றும் வகையில் "கலைசைக் கோவை' என்ற நூல் இயற்றினார். "கலைசை' என்பது தொட்டிக்கலையின் சுருக்கம். இது தவிர, சிலேடை வெண்பா, சந்நிதி முறை, வண்ணம், பஞ்ச ரத்தினம், திருவல்லிக்கேணி, பழனி குழந்தைவேலர் பஞ்சரத்தினமாலை, குற்றால கலைசை உலா, குற்றாலம் சித்திரசபை திருவிருத்தம், ஆவடுதுறை கோவை, தன் குருநாதர் மீது பஞ்சரத்தின மாலை, வண்ணம், ஆனந்தக்கவிதை, ஆயலூர் முருகன் பிள்ளைத்தமிழ், பழனி பதிற்றுப்பத்தந்தாதி, வட திருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி முதலான பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகரின் அருள் பெற்று ஞான உபதேசமும், சந்நியாசமும் பெற்றவர்.

 தொட்டிக்கலை சுப்பிரமணியர் திருவிருத்தம் பாடி, தொழுநோயாளியின் நோய் தீர்த்தும், திருத்தணிகை விருத்தம் பாடி பார்வையற்றோரைப் பார்வை பெறச்செய்தும் தம் வாழ்வில் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தியவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com