சேக்கிழாரின் "புண்ணியக் கண் இரண்டு'!

சேக்கிழார் பெருமானின் "கவிவளம்' யாவரும் போற்றற்குரியதே. இங்கு அவருடைய கவி வளத்தின் மேன்மைக்கு ஒரு பாடலைக் காண்போம்.
சேக்கிழாரின் "புண்ணியக் கண் இரண்டு'!

சேக்கிழார் பெருமானின் "கவிவளம்' யாவரும் போற்றற்குரியதே. இங்கு அவருடைய கவி வளத்தின் மேன்மைக்கு ஒரு பாடலைக் காண்போம்.

அருள்பெருகு தனிக்கடலும் உலகுக்கு எல்லாம்

அன்புசெறி கடலுமாம் எனவும் ஓங்கும்

பொருள்சமய முதல்சைவ நெறிதான் பெற்ற

புண்ணியக்கண் இரண்டுஎனவும் புவனம் உய்ய

இருள்கடுஉண் டவர்அருளும் அகிலம் எல்லாம்

ஈன்றாள்தன் திருவருளும் எனவும் கூடித்

தெருள்கலைஞா னக்கன்றும் அரசும் சென்று

செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தார் அன்றே!

(திருநாவுக்கரசு சுவாமிகள்:185)

சைவமும் தமிழும் தழைத்து இனிதே ஓங்கி வளர பன்னிரு திருமுறைகளில் முதல் ஆறு திருமுறைகளை அருளியவர்கள் திருஞானசம்பந்தரும் (1,2,3) அப்பரடிகளும்(4,5,6) ஆவர். அவ்விரு அடியார்களையும் சேக்கிழார், "புண்ணியக் கண் இரண்டு' என்றும் "கன்றும் அரசும்' என்றும் மேற்கண்ட பாடலில் குறிப்பிட்டுள்ளார். கண்ணிற் சிறந்த உறுப்பில்லை.

"காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்

காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்

அயரா அன்பின் அரன்கழல் செலுமே'

(சூத்திரம்-11)

என்கிறது சிவஞான போதம். அச்சிவத்தையே முதற்பொருளாகக் கொண்டது சைவநெறி. அச் சைவநெறியே சமயங்களுள் முதன்மையானது. சமயம் அவை ஆறினுக்கும் தலைவனாக விளங்குபவன் சிவன். அச்சிவனையே தம் வழிபடு கடவுளாகக் கொண்டது சிவநெறி-சைவநெறி. எனவேதான், "சைவத்தின் மேல் சமயம் வேறிலை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்' என்றார் சைவ எல்லப்ப நாவலர். இறைவன் ஒருவனே என்பதும் அவனது அருள் நெறியும் ஒன்றே என்பதும் சைவநெறியாம். இந்நிலையில்தான், உலகில் உள்ள சமயங்கள் அனைத்திற்கும் அருள்பெருகு தனிக் கடலும் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் பொருளாக விளங்கும் சமயத்தின் முதல், சைவநெறி என்கிறார் சேக்கிழார்.

உலகுக்கு எல்லாம் அருள் பெருகு தனிக்கடலாவது சிவம். அன்பு செறி கடலாவது சத்தி. சிவமும் சத்தியும் ஒன்றே. அவ்வொன்றை இரண்டாகக் கூறுவது உபசார வழக்கு. அச்சிவத்தையே முதற்பொருளாகக் கொண்டது சைவநெறி என்பது இதனால் புலனாகிறது.

சைவநெறிக்கு அடைமொழியாக விளங்குவதே, "அருள் பெருகு ....... சமய முதல்' என்னும் தொடராகும். அச்சைவநெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு - கன்றும் அரசும் ஆவர்.

இங்குக் கன்றாக திருஞானசம்பந்தரும், அரசாகத் திருநாவுக்கரசரும் குறிக்கப்படுகின்றனர். கன்று என்னும் சொல்லுக்கு அடைமொழியாகத் "தெருள் கலைஞான' என்கிறார் சேக்கிழார். தெளிந்த கலை ஞானத்தைப் பெற்றவரின் சிறப்பினை, "விடையின்மேல் வருவார் தம்மை அழுது அழைத்துக் கொண்டவர்' (மேற்படி,182) என்றும், "அம்பிகை செம்பொற்கிண்ணத்து அமுதஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த செம்பவள வாய்ப்பிள்ளை' (மேற்படி,183) என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால், திருஞானசம்பந்தரின் அறிவுநலம் மிகுந்த இளமை அறியலாகிறது.

 மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்திற்குரிய இரு தொடர்களும் வரும் பகுதி, திருநாவுக்கரசர் பற்றிய பாடலில் இருத்தலின் அரசின் சிறப்பினை இங்குக் குறிப்பிடப்படாமல், திருஞானசம்பந்தர் பற்றிய பாடல்களில் ஒன்றில்,

சிந்தை இடையறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்

கந்தம் மிகைஆம் கருத்தும் கை உழவாரப் படையும்

வந்துஇழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும்

அந்தம் இலாத் திருவேடத்து அரசும் (270)

என்றும் தடுத்தாட்கொண்டார் புராணத்தில் "உழவாரப் படையாளி' (83) என்றும் தெரிவிக்கின்றார். இதனால், திருநாவுக்கரசரின் உழைப்புடைய சிவவேட முதுமை புலனாகிறது. இவ்விரு அடியார்கள் பற்றிய சேக்கிழாரின் இக்கருத்துகள் அவ்வடியார்களின் முதல் சந்திப்பின்பொழுது இயம்பப்படுவனவாம்.

இவ்வுலகம் உய்வு பெறுதலின் பொருட்டுக் கரிய விடத்தை உண்ட சிவனது அருளும் இப்பூமியைப் படைத்த சத்தியின் திருவருளும் எனவும் கூடிய அடியார்கள் இருவரும் சேர்ந்து திருத்தோணிபுரத் தலத்து இறைவனைக் காணச் சென்றனர். இவ்விருவரையும் சிவமும் சத்தியும் போல எனக் கூறிய பாங்கும், இருவரும் உடலால் வேறுபட்டிருப்பினும் இறையருளால் ஒருவரேயாவர் என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

"புண்ணியக் கண்கள் இரண்டு' என்று கூறாமல், புண்ணியக் கண் இரண்டு என்று கூறியிருப்பதும், கண்கள் இரண்டும் ஒரு நேரத்தில் வெவ்வேறு பொருள்களைக் காணாது ஒரு பொருளையே நோக்கும் கண்ணின் இயல்பு போன்ற கருத்துடையவர்களாய்ச் சிவனை வழிபடும் கருத்துடன் கோயிலுள் அவர்கள் இருவரும் சந்தித்த அன்றே சென்றனர் என்பதும் அறியத்தக்கது. இப்பாடல், சேக்கிழாரின் செழுந்தமிழ்க் கவிதை வள நடைக்குச் சான்றாக அமைகிறது.

-முனைவர் சிவ. சண்முகசுந்தரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com