சூளுரையில் பிறந்த பாரதியின் காவடிச் சிந்து!

சூளுரையில் பிறந்த பாரதியின் காவடிச் சிந்து!

மகாகவி பாரதி வாழ்ந்த காலத்தில், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப் பாடல்கள் எங்கும் பாடப்பெற்றன. அப்பாடல்கள் மீது பாரதிக்கு மிக்க ஆர்வமேற்பட்டது. தம்மோடு பயிலும் ஒருசாலை மாணாக்கர்களோடு அக்காவடிச் சிந்துப் பாடல்களை இனிய ராகத்தோடு பாடி, தாமும் இன்புற்று அவர்களையும் இன்புறச் செய்வார்.

மகாகவி பாரதி வாழ்ந்த காலத்தில், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப் பாடல்கள் எங்கும் பாடப்பெற்றன. அப்பாடல்கள் மீது பாரதிக்கு மிக்க ஆர்வமேற்பட்டது. தம்மோடு பயிலும் ஒருசாலை மாணாக்கர்களோடு அக்காவடிச் சிந்துப் பாடல்களை இனிய ராகத்தோடு பாடி, தாமும் இன்புற்று அவர்களையும் இன்புறச் செய்வார்.

அவர்தம் புலமையைக் கண்ட எட்டயபுரம் மன்னர் அவரைத் தம் அரசவைக் கவிஞராக ஆக்கிக்கொண்டார். அவ்வகையில் பாரதியைப் பாட வைத்து மன்னரும் புலவர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

ஒரு சமயம் அவ்வரண்மனையில் மன்னரும் புலவர்களும் கூடி இலக்கியச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களோடு பாரதியும் இருந்தார். பாரதியின் புலமைத் திறத்தையும், அரசர் அவருக்கு அளித்து வரும் பெருமதிப்பினையும் காணச் சகிக்காத சிலர், பாரதியிடம் குறை கண்டு அவரை மடக்க நினைத்தனர்.

அவர்கள் மன்னரிடம் ""பாரதி உணர்ச்சிமிகு கவிதைகளை வடிப்பதில் வல்லவராய் இருக்கலாம். ஆனால், இவரால் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து போன்று பாட இயலாது. அவர் மட்டுமன்று எவராலும் இயற்ற இயலாது'' என இறுமாப்புடன் கூறினர். மன்னரும் அப்போது மறுப்பு ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்.

புலவர்களது ஏளனப் பேச்சைக் கேட்ட பாரதிக்கு நகைப்பு மேலிட, உடனே எக்காளமிட்டுச் சிரித்தார். அவரது நகைப்பைக் கண்ட புலவர்கள் ""ஏனையா இப்படிச் சிரிக்கின்றீர்? நும்மால் முடிந்தால் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துப் பாடல் போன்று இயற்றிக் காட்டும் பார்க்கலாம்'' என அறைகூவல் விடுத்தனர்.

மறுநாள் பாடலோடு வருவதாகச் சூளுரைத்துவிட்டு தம் இல்லம் சென்றார். அடுத்த நாள் புலவர் அவை கூடியது. மன்னரும் புலவர்களும் பாரதியின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். "பாரதி என்ன வரவாப் போகிறார்?' என்று ஒருசிலர் அங்கலாய்த்தனர்.

பாரதி, மிடுக்கான நடைபயின்று தாம் இயற்றிய பாடலுடன் அவைக்குள் நுழைந்தார். புலவர்கள் பாரதியைப் பார்த்து, ""ஐயா, நும் காவடிச் சிந்து பாடல் என்னவாயிற்று?'' எனக் கேட்டனர். பாரதியோ சிறிதும் தாமதிக்காது,

""பச்சைத் திருமயில் வீரன் - அலங்காரன்

கெளமாரன் - ஒளிர்

பன்னிரு திண்புயப் பாரன் - அடிபணி சுப்பிர

மணியர்க்கருள் . . .

அணி மிக்குயர் - தமிழைத் தரு பக்தர்க்கெளிய

சிங்காரன் - எழில்

பண்ணு மருணாசலத் தூரன்''

எனும் அடிகள் கொண்ட காவடிச்சிந்துப் பாடலைப் பாடினார். செவிமடுத்த புலவர்கள் வாயடைத்து நின்றனர். மன்னரும் பாரதியின் புலமை கண்டு வியப்பில் ஆழ்ந்தார்!

புலவர்களது சவாலை முறியடித்துத் தம் சூளுரையில் வென்று நின்ற பாரதி, ""எப்புலவரைப் போன்று வேண்டுமாலும் பாடலாம். ஏன், கம்பனைப் போலகூடப் பாடலாம்'' என ஆவேசமாகக் கூறிவிட்டு,

தம் கையிலிருந்த கவிதைத் தாளினைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டுவிட்டு, அரண்மனையை விட்டகன்றார் என்பது அவர்தம் வரலாற்றுத் தகவல்.

என். நவநீதகிருஷ்ண ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com