செந்தமிழ்க் காவலர்

விருதுநகர் மாவட்டத்தின் தென்திசைக்கண் "சேத்தூர்' எனும் ஊர் உள்ளது. ""சேற்றூரை அடைவோர் சோற்றுக்கு அலையார்'' எனும் முதுமொழி அப்பகுதியின் வளத்தையும், ஈகைப் பண்பையும் பறைசாற்றும்.
செந்தமிழ்க் காவலர்

விருதுநகர் மாவட்டத்தின் தென்திசைக்கண் "சேத்தூர்' எனும் ஊர் உள்ளது. ""சேற்றூரை அடைவோர் சோற்றுக்கு அலையார்'' எனும் முதுமொழி அப்பகுதியின் வளத்தையும், ஈகைப் பண்பையும் பறைசாற்றும்.

செல்வமும் செல்வாக்கும்மிக்க முத்துச்சாமித் தேவர் என்பவர் கி.பி.1847 முதல் 1875 வரை சேத்தூர் ஜமீனை ஆட்சி புரிந்துள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு அவர்தம் புதல்வர் சுந்தரராஜத் தேவர் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தார். இவரும் தந்தையைப் போன்றே தமிழன்னையின் மீது தணியாக் காதல் பூண்டொழுகியவர். இவர், எண்ணற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்து, அரவணைத்துத் தமிழ் நூல்களைப் பற்றி உரையாடியும், ஆராய்ச்சி செய்தும் வந்துள்ளார். புலவர் பெருமக்களுக்கு வரையாது வாரி வழங்கி "வள்ளல் பெருந்தகை' என அனைவராலும் போற்றிப் புகழப்பட்டுள்ளார்.

 "காவடிச்சிந்து' அண்ணாமலை ரெட்டியாரை தம் அரண்மனையில் தங்கவைத்து, ஆதரித்து, இலக்கணப் பயிற்சி தரச்செய்து அவைக்களப் புலவராக வைத்திருந்தவர்.

ஜமீன்தார் சுந்தரராஜத் தேவர் கவி இயற்றுவதில் வல்லவர். வேட்டையாடுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர். இவர்தம் பாக்கள் பல "தனி செய்யுட் சிந்தாமணி' எனும் நூலில் காணப்பெறுகின்றன. இவர், தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்த ஈசனார் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். தேவதானம் பெரியகோயில், கோயில் திருவிழா, திருவாதிரைத் திருவிழா மற்றும் பல ஆலயங்கள் பற்றியும் கவிதைகள் புனைந்துள்ளார். "சேறைத் தலபுராணம்' என்ற நூலின் மறுபதிப்பைத் தம் சொந்த செலவில் 1893-இல் செய்துள்ளார்.

துறைக்கோவை, பதிகப்பாமாலை, திருவாங்கூர் மன்னர் இராசவர்மா மீது பாடிய வண்ணம் ஆகியவை இவரால் யாக்கப்பெற்ற புகழ்மிகு நூல்களாகும். இவர் யாத்த வண்ண நூலுக்குத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிறப்புப் பாயிரம் நல்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரால், ஆதரிக்கப்பெற்ற புலவர்களுள் முகவூர் இராமசாமிக் கவிராயர், மீனாட்சிசுந்தரக் கவிராயர், எட்டிச்சேரி திருமலைவேலுக் கவிராயர், வேம்பத்தூர் பிச்சுவையர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழன்னைக்கும் புலவர்களுக்கும் செந்தமிழ்க் காவலராகவும் விளங்கி, புவியரசராக மட்டுமன்றிக் கவியரசராகவும், வீரத்துடனும் தீரத்துடனும் திகழ்ந்த சுந்தரராஜத் தேவர் 1896-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 24-ஆம் நாள் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார். செந்தமிழ்க் காவலரான இவர், அமரருலகில் உறைந்திடினும் நம் நெஞ்சங்களில் என்றென்றும் நீங்காமல் நிறைந்திருப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com