புலி துரத்துகிறது...

புலி துரத்துகிறது...

மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் சங்கர சிந்தாமணி என்கிற புலவர் வாழ்ந்தார். ஆற்று நீர் போல் கவிதை எழுதவல்ல அவர், ஜமீன்தார்களைக் கண்டு பாடிப் பரிசுகள் பெறுவதுண்டு. புலவர் என்றால் அக்காலத்தில் வறியவர் என்பதே உண்மையாக இருந்தது

மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் சங்கர சிந்தாமணி என்கிற புலவர் வாழ்ந்தார். ஆற்று நீர் போல் கவிதை எழுதவல்ல அவர், ஜமீன்தார்களைக் கண்டு பாடிப் பரிசுகள் பெறுவதுண்டு. புலவர் என்றால் அக்காலத்தில் வறியவர் என்பதே உண்மையாக இருந்தது. அத்தகைய வறுமையில் வாடிய சிந்தாமணிப் புலவர், "போடி' ஜமீன்தாரைச் சந்திக்கச் சென்றார். ஜமீன்தாரோ பழனி முருகனை வழிபடப் பரிவாரங்களுடன் சென்றிருந்தார். அவர் தமிழ்ப் புலவர்களை வரவேற்று உதவும் பண்பினர் என்பதைப் புலவரும் அறிவார். அவருக்காகக் காத்திருந்த புலவர், "ஜமீன்தாரை வரும் வழியிலேயே சென்று பார்த்தால் என்ன' என்ற எண்ணம் தோன்றியதும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

தன் பரிவாரங்களுடன் ஜமீன்தார் வருவதை அறிந்து, தமது வறுமையைக் குறிப்பாகத் தெரிவிக்க எண்ணி, "கூ, கூ.. புலி துரத்துகிறது' என்று கூவினார்.

ஜமீன்தார் ""என்ன ஐயா பயமுறுத்துகிறீர்? நீர் யார்? புலி எங்கே?'' என்று கேட்டார்.

புலவர், ""ஐயா! பாழும் புலி என்னைத் துரத்துகிறது. அதைக் கொன்று என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று வேண்டினார். அதை ஒரு பாடலாகவும் பாடினார். அதைக் கேட்ட ஜமீன்தார் ஒரு விநாடி யோசித்தார். தன் பணியாளை அழைத்து ""இவரை ஊருக்கு அழைத்துச் சென்று பாதுகாத்து, பின்னர் என்னிடம் அழைத்து வா' என ஆணையிட்டார். அவ்வாறே போடி அரண்மனையில் தனியிடத்தில் அப்புலவர் தங்கவைக்கப்பட்டார். புலவருக்குக் கலக்கம். "வறுமைக்குப் பயந்து சிறையில் சிக்கிவிட்டோமோ? பாடலைக் கேட்ட ஜமீன்தார் முகத்தில் மலர்ச்சி இல்லையே... என்ன செய்வார்களோ?' என எண்ணி அச்சம் கொண்டார்.

ஜமீன்தார் அரண்மனைக்கு வந்த பின் ஒருநாள் புலவரை அழைத்து வரச்செய்தார். புலவர் கந்தல் துணிகளுடன் வறுமைக் கோலத்தில் வந்தார். மண்டபத்தையும், மீசையை முறுக்கிய வண்ணம் கோபத்துடன் அமர்ந்திருந்த ஜமீன்தாரையும் பார்த்து அஞ்சினார் புலவர்.

""அன்று என்ன சொன்னீர் புலவரே?''

என்று கேட்டார் ஜமீன்தார்.

""நீங்கள் சிறந்த வீரர்; புலவர்களை ஆதரிப்பவர். வறுமையைப் "புலி' என்று உருவகித்தேன். அதுதான் என்னைத் துரத்துகிறது. அதை நீங்கள்தான் துரத்த வேண்டும்'' என்றார்.

புலவருடைய கந்தல் மேலாடையை வாங்கி அங்கிருந்த ஒரு மேசையின் மேல் வைக்க ஆணையிட்டார். துப்பாக்கியை கையில் எடுத்தார். புலவர் தமக்கு ஆயுட்காலம் முடியப்போகிறது என்று கலங்கினார். துப்பாக்கியிலிருந்து வெடிச்சத்தம் கிளம்பியது. கந்தல் துணி எரிந்து சாம்பலானது.

புலவருக்குப் புதிய ஆடைகளை அளித்து, அவரை அருகில் அழைத்து ஆசனத்தில் இருத்தி, வேண்டியன வழங்கி ஜமீன்தார் மகிழ்ந்தார். புலவரது வறுமைப்புலி பிறகு தலைகாட்டவே இல்லை. புலவர் பாடிய அப்பாடல் இதுதான்:

பையா டரவணி சொக்கேசர்

கூடற் பதியை விட்டு

வையா புரிக்கு வரும் வழி

யேவழி தான்ம றித்து

மெய்யா வறுமைப் புலிதான்

மிகவும் வெருட்டு கின்ற

தையாதென் போடை யதிபா

புலவர்க் கருணி தியே!

என்கிற இப்பாடலை, உ.வே.சாமிநாதையரிடம் புளியங்குடி முத்துவீரப்பப் புலவர் என்பர்தான் வழங்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com