தமிழ் எழுத்துகள் முப்பத்தொன்றே!

தமிழ் எழுத்துகள் முப்பது மட்டுமே என்பது தொல்காப்பியரின் (தொல்.நூ-1) முடிவு. குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் "எழுத்தோ ரன்ன' (எழுத்துப் போல்வன) என்பதும் அவர் கருத்து.
தமிழ் எழுத்துகள் முப்பத்தொன்றே!

தமிழ் எழுத்துகள் முப்பது மட்டுமே என்பது தொல்காப்பியரின் (தொல்.நூ-1) முடிவு. குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் "எழுத்தோ ரன்ன' (எழுத்துப் போல்வன) என்பதும் அவர் கருத்து. இந்த மூன்று சார்பெழுத்துகளைப் பத்தாக்கினார் பிற்காலத்துப் பவணந்தி முனிவர் நன்னூலில், உயிர்மெய் (18 ல 12 = 216) எழுத்து எல்லாம் ஒன்றாகவே கணக்கீடு செய்தார்.

தமிழ் மொழியின் வளர்ச்சி, தமிழ் கற்பதில் ஆர்வமூட்டுதல் பற்றிய சிந்தனையோடு நாம் கருத்துகளைப் பார்க்க வேண்டும். தமிழ் மொழியா 247 எழுத்துகள்! கற்பது கடினம் என்று இளம்பிள்ளைகள், சிறுவர்கள் அஞ்சி நிற்கக்கூடாது. தமிழில் அடிப்படை எழுத்துகள் உயிர், மெய் என்னும் முப்பது மட்டுமே. ஆய்தம் ஒன்று, சேர்க்க வேண்டிய இன்றியமையாமை இருப்பதால், முப்பத்தொன்று எனக் கொள்வோம். இந்நெறியே மொழிக்கு ஆக்கம் தரும்.

கணினி - தட்டச்சுப் பலகையில் தமிழை 30 எழுத்துகளில் அடக்கியுள்ளனர். கூட்டு ஒலிகளையும், குறைந்த ஓசை, நீண்ட ஓசை கொண்ட எழுத்துகளையும் கணக்கிட்டு 247 என்று கூறுவது வேண்டாத வேலை. எழுத்தோடு எழுத்துக் கூடி உண்டாகும் கூட்டு ஒலிகளையெல்லாம் கணக்கிட்டால் ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கில் விரிந்து பெருகும். நாமும் நன்னூலைக் கற்றோம்; தொல்காப்பியமும் கற்றோம். தொல்காப்பியமே

தமிழில் முதன்மையான நூல். தொல்காப்பியக் கருத்தே இக்காலத்தும் ஏற்புடையதாம்.

ஐந்தெழுத்துகள் பற்றி: ஒவ்வொரு மொழிக்கும் ஓர் இயல்பு, ஒலிப்பு முறையுண்டு. நம் தமிழ்ப் பெயர்களை ஆங்கிலேயர், அவர்கள் மொழி ஒலிப்பு முறையிலேயே சொன்னார்கள், எழுதினார்கள். அதனால்தான், திருவல்லிக்கேணி, "ட்ரிப்ளிக்கேன்' ஆகவும், எழும்பூர் "எக்மோர்' ஆகவும், தரங்கம்பாடி "ட்ராங்பார்' ஆகவும், தூத்துக்குடி "டுட்டிக்கோரின்' ஆகவும், தஞ்சாவூர் டாஞ்சூர் ஆகவும் மாறின.

தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு நேர்ந்தபோது வடதிசைப் பெயர்களைத் தமிழில் எழுத உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்துகள் ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ என்பன ஐந்தும் ஆகும். வடமொழிக் கிளவி (சொல்) வடவெழுத்து ஒரீஇ (நீக்கி) எழுத வேண்டும் என்னும் தொல்காப்பிய நெறியின்படியே சங்கப் புலவர்கள், காப்பியப் புலவர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பர், சேக்கிழார் உள்ளிட்ட புலவோர் இந்த எழுத்துகளை நீக்கித் தமிழ் வடிவத்தில் - தமிழ் ஒலிப்படியே பெயர்களை அமைத்தனர்.

நம் காலத்தில் ஷேக்ஸ்பியரை - செகப்பிரியர் என்றார் மறைமலையடிகள். சாக்ரடீûஸ - சோக்ரதர் என்றார் மூதறிஞர். ஆனால், தம் பெயரை இராஜாஜி என்றே எழுத வேண்டும்; இராசாசி எனக் கூடாது என்றார். வடமொழியோடு மட்டும் உறவு கொண்ட காலத்தில் இந்த ஐந்தெழுத்தின் துணையின்றித் தமிழ் ஒலியில் எழுத முடிந்தது. ஆனால், இன்று உலகம் முழுவதும் தமிழ் பரவியுள்ளது. உலக மக்கள் தொடர்பு தமிழர்க்கு இருப்பதால் பன்னாட்டு, பலமொழிப் பெயர்களைத் தமிழ் ஒலிப்படி எழுதினால் ஏற்புடையதாகுமா? ஜார்ஜ் புஷ் - பெயரை "சார்ச்சு புச்' எனலாமா? "ஆர்ம்ஸ்ட்ராங்' பெயரை "தோள்வலியன்' என மொழிபெயர்க்கலாமா?

"க்ஷ'-வை நீக்கிவிடலாம். கடாக்ஷம் என்பதைக் கடாட்சம் எனலாம். "ஹ'வையும் நீக்கலாம். "ஹமீது' என்பதை "அமீது' ஆக்கிடலாம். ஸ்டாலினை "சுதாலின்' என்போமா? ஏற்கப்படுமா? அறிஞர்களின் சிந்தனைக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com