கடன் சுமை கழிப்போம்

எழுதப்படுவது எழுத்து; எழுப்பப்படுவதும் எழுத்து; முன்னது மொழியின் வரி வடிவம்; பின்னது ஒலி வடிவம். இவ்விரண்டு வடிவங்களும் தமிழில் இயல்பாய் அமைந்திருப்பதால் அது இயல் தமிழ் என வழங்கப்படுகிறது.

எழுதப்படுவது எழுத்து; எழுப்பப்படுவதும் எழுத்து; முன்னது மொழியின் வரி வடிவம்; பின்னது ஒலி வடிவம். இவ்விரண்டு வடிவங்களும் தமிழில் இயல்பாய் அமைந்திருப்பதால் அது இயல் தமிழ் என வழங்கப்படுகிறது.

மக்கள் பெருக்கமே புதிய நிலம் நாடிப் போகவும், நீர் நில வாழ் வாணிக ஊட்டத்தில் நகரவும் செய்யும். அதனால் அந்தந்த நிலத்து மக்களின் ஒலிப்பைக் கடன் வாங்கிக்கொண்டு, அதைத் தம் மொழியில் செலாவணி செய்து கொண்டனர். அமெரிக்க டாலரை, ஐரோப்பியரின் யூரோவை, சீனரின் யென்னை கடன் வாங்கலாம். ஆனால், அவற்றை நம் நாட்டுப் பணமாக மாற்றித்தானே பொருள்களை வாங்கவும் விற்கவும் முடிகிறது.

இதைப் போலவே ஸ, ஜ, க்ஷ, ஹ, ஷ எனும் வட எழுத்துகளை நாமும் கடனாக வாங்கலாம். ஆனால், அவற்றை நம்மொழி இயல்புக்கு ஏற்ப - ஒலியியல் மரபுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளத்தானே வேண்டும்?

ஏதும் படிக்காமல், உழைப்பு ஒன்றே உயிர் என வாழும் பட்டிப்பெண், "ராஜா' என்று தன் குழந்தையைக் கொஞ்சாமல் "ராசா' என்றும், "ராசாத்தி' என்றும் கொஞ்சுகிறாளே! நாம் மட்டும் வாய்கூசாமல் ஜுவரம், ஜுரம் என வழங்குகிறாமே...

அதை அவள் காய்ச்சல் என்கிறாள்; வாந்தி பேதியைக் கக்கல் கழிசல் என்கிறாள். அவளுக்குத் தெரிந்த மொழி மாற்ற விதி, மெத்தப் படித்த மேன்மையர் அறியவும் மறுப்பது ஏன்? தம்முடைய பன்மொழி அறிவைப் புலப்படுத்த வேண்டித் தாய்மொழியைக் குழி தோண்டிப் புதைக்கலாமா?

கடன் வாங்குவதும் பயன்படுத்துவதும், பயன்படுத்தியபின் அக்கடனை அசலோடு திருப்பித் தருவதும் பொருளாதாரத்தின் அரிச்சுவடி. பிழைப்பதற்குக் கடன் வாங்கலாம்; ஆனால் கடன் வாங்குவதற்கே பிழைக்கலாமா? அப்படிப் பிழைப்பது - பிழை செய்து வாழ்வது - ஒரு வாழ்வாகுமா? இந்த மொழிக் கடன் சுமை, மேலும் மேலும் வாங்கிய மொழியை அழுத்தி வட்டியோடும் - திமிர்வட்டியோடும் பெரிய சுமையாகி மொழியின் மூலத்தையே அழித்துவிடாதா? இதை நன்கு உணர்ந்த தொல்காப்பியர்,

""வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே''

எனும் சல்லடை தந்தார் சொல்லடைத் தேன் பெற!

வட எழுத்தை ஒரீஇ - நீக்கி, நம் எழுத்தோடு இயைந்த சொல்லாக்கிக் கொண்டால், வாங்கிய அயல்மொழிச் சொல்லும் நம்மொழியில் செலாவணியாகும். உரப்பும், உழப்பும் கொண்ட ஜ, ஹ, க்ஷ, ஹ, ஷ என்னும் 5 எழுத்துகளும் இன்றியே தமிழ் தனித்துத் தெளிந்த நீரோடையாய் நடைபயிலும்.

பிராகிருதம், சம்ஸ்கிருதம் என்பவை வேத மொழிகள் என்பதென்னவோ உண்மைதான். அவை முறையே முந்திச் செய்யப்பட்டது, நன்றாகக் செய்யப்பட்டது எனும் பொருளுடையன. இயல்பாய் எழுந்த தமிழ்மொழிச் சொற்கள் வடமொழியில் 5இல் இருபங்காய்க் கலந்திருப்பதை மொழி நூலார் எடுத்துக் காட்டியுள்ளனர். தமிழ்மொழிச் சொற்களை எடுத்தாண்டபோதும் அவர்கள் தம் மொழி ஒலிப்புக்கு ஏற்ப அவற்றை மாற்றி அமைத்தே வழங்கினர்.

அகம் - அஹம், மாது - மாத்ரு மெது - ம்ருது; வதுவை - வது, யுகம் - யுக, அம்மை - அம்பா, நாவாய் - நெள, வலி - பல, சுவணம் -சுபர்ண, மீன் - மீன, முகம் - முக என்பவை அவர்தம் ஒலிப்பு முறைக்கேற்பவே அங்கே அவர்கள் வழங்கினார்கள். அத்தகைய வழக்கை நாம் ஏன் பின்பற்றக் கூடாது?

வான்மீகி இராமாயணத்துக்கு மூலம் வடமொழி. அதைத் தமிழில் செய்த கம்பநாடர், நம் செந்தமிழ் நாடர் என்பதால், ராமனை இராமன் என்றும், லக்ஷ்மணை - இலக்குவன் எனவும், வசிஷ்டரை - வசிட்டர் எனவும், குஹனை - குகன் எனவும் வழங்கி வடவெழுத்து ஓரீஇ, நம்மொழியாக ஆக்கி வழங்கியுள்ளார்.

ஆங்கில மொழி வல்லார், தமிழில் கடன் பெற்ற சொற்களை அப்படியேவா வழங்கினர்? இல்லையே! தம்மொழி ஒலிப்புக்கேற்பத் திரித்து வழங்கினரே! தேக்கு - Teak,, கட்டுமரம்-Catamaran தரங்கம்பாடி-Tranquabar, தூத்துக்குடி-Tuticorin,, காளிகட்டம்-Calcutta,, என அவர்கள் ஒலிப்புக்கு ஏற்ற வண்ணம் மாற்றியமைத்ததைப் போல் நாம் ஏன் வழங்கக் கூடாது?

நம் அரசன் வடமொழியில் ராஜா ஆகிவிட்டான்; அரங்கம் ரங்கா ஆகிவிட்டது; அம்பரம் (உயர்ச்சி) - அம்பர ஆகிவிட்டது; அந்தி - சந்தியாகிவிட்டது; அரத்தம் - ரத்தம் ஆகிவிட்டது; அரன் - ஹரன் ஆகிவிட்டான். இப்படி அவர்கள் நம் சொல்லைத் தம்மொழி ஒலிப்புக்கு ஏற்பத் திருத்தி வழங்குவதை ஏற்றுப் போற்றும் நாம், அவர்களின் சொற்களை நம் ஒலிப்புக்கு ஏற்ப அமைத்துக் கொண்டால் குய்யோ முறையோ என அங்கலாய்ப்பது ஏன்?

ஜடம் - சடம், ஜடை - சடை, ஜாடி - சாடி, ஜல்லடை - சல்லடை, ஜன்னி - சன்னி, ஜல்தி - சடுதி, ஜாதி - சாதி, ஜரிகை - சரிகை, ஜாண் - சாண், ஹரிசந்திரன் - அரிச்சந்திரன், ஹாரம் - ஆரம், அஹம் - அகம், ஹாஹா - ஆகா, க்ருஹம் - கிருகம், ஹரித்துவார் - அரித்துவாரம், குஹா - குகை, ஹரப்பா - அரப்பா, மொஹன்ஜதாரோ - மொகன்சதாரோ, முஹலாயர் - முகலாயர், ஹம்பி - அம்பி, ஹஸ்தினாபுரி - அத்தினாபுரம் என வழங்கினால் புரியாமல் போகுமா என்ன?

அக்ஷய - அட்சய, தக்ஷிண - தட்சிண, க்ஷார - சாரம், பக்ஷம் - பட்சம், பக்ஷி - பட்சி, கக்ஷி - கட்சி, காக்ஷி - காட்சி, காமாக்ஷி - காமாட்சி என வழங்கினால் வெறுப்பாருண்டோ?

ஸம்ஸாரம் - சம்சாரம், ஸ்த்யவான் - சத்தியவான், ஸ்வாமி - சுவாமி, ஸýந்தர் - சுந்தரன், ஸ்வயம் - சுயம், மஸ்யகந்தி - மச்சகந்தி, விஸ்வம் - விசுவம், பஸ்மம் - பசுமம், ஸ்கந்தன் - கந்தன், ஸ்புடம் - புடம் என வழங்கினால் மறுப்பாருண்டோ?

ஷண்முகம் - சண்முகம், சஷ்டி - சட்டி, வேஷ்டி - வேட்டி, முஷ்டி - முட்டி, கஷ்கம் - கட்கம், விஷ்ணு - விட்டுனு, விஷம் - விடம், கஷாயம் - கசாயம், குஷ்டம் - குட்டம், இஷ்டம் - இட்டம், கோஷ்டி - கோட்டி என வழங்கினால் பொருள் புரியாமல் போகுமா என்ன?

நேரொலி கொண்டவற்றை அவை எம்மொழி ஒலிப்பு வழங்கினவோ அப்படியே எடுத்தாளலாம். குங்குமம் - குங்குமம், சாந்து - சாந்து என வழங்குவது மரபு காக்கும் மொழி நெறி. பங்கஜம் - பங்கயம், ஹிதம் - இதம், காக்ஷி - காட்சி, ஸ்ம்பத் - சம்பத்து, முஷ்டி - முட்டி என வழங்குவதே தெளிதமிழ் காக்கும் இயல் நெறி.

இந்நெறியை இத்தாலி நாட்டு பெஸ்கி, தமிழ்நாட்டு வீரமாமுனிவராகித் தேம்பாவணி காப்பியத்தை ஆக்கியபோது முற்றிலும் பின்பற்றியதைப் பன்மொழி வல்லோர் மறந்திருக்க முடியுமா?

ஜோசப் - சூசையப்பர், ஜான் - யோவான், ஜீசஸ் - ஏசு - இயேசு, மேரி - மரியாள், கோலியாஹ் - கோலியாத்து, டேவிட் - தாவீது, பைபிள் - விவிலியம் என வழங்கிய ஐரோப்பியர்தம் மொழி நெறியை நாம் பின்பற்றத் தயங்கலாமா?

அறிஞர் பெருந்தகை அண்ணா காட்டிய வழியே நடைபயின்ற அன்றைய அரசு மெட்ராஸ் ஸ்டேட் எனும் பெயரைத் தமிழில் மாற்ற முனைந்தபோது எழுந்த எதிர்ப்பலையில் பஹம்ண்ப்சஹக் எனலாம் என்றே அன்று முன்மொழியப்பட்டது. டகரம் மொழி முதலிலோ கடையிலோ வரலாகாது என்பதை எடுத்துக்காட்டித் தமிழ்நாடு எனத் தமிழ் மொழிக்கு ஏற்பக் குற்றியலுகரத்தில் முடித்த அண்ணாவின் மொழித் திறம் தமிழகத்தில் கருகிப் போய்விட்டதா என்ன?

இம்மொழி மரபு பற்றியே கருநாடகம், பெங்களூர் என்பதை பெங்களூரு என மாற்றியது; மகாராட்டிரம், பம்பாய் என்பதை மும்பை என மாற்றிக் கொண்டது. நடுவண் அரசும் டில்லியை - தில்லி என மாற்றிக் கொண்டது.

எண்ணற்ற வேற்று மொழிச் சொற்களை அப்படியே ஏற்றுப்போற்றிய தமிழுக்கு தமிழருக்கு ஏற்பட்ட இழப்பு மிகப்பெரியது. 25 வடமொழி தமிழில் கலந்ததால் தெலுங்கும், 50 கலந்ததால் கன்னடமும், 75 கலந்ததால் மலையாளமும் தமிழ் மொழி மூலத்தைவிட்டு வேறு வேறு மொழிகளாய்த் திரிந்தன.

தொலைவில் உள்ளவற்றை நோக்கத் தொலைநோக்காடி தேவைதான். ஆனால், இருக்கும் கண்ணை - தாய்மொழிக் கண்ணை அவித்துவிட்டு, எத்தனை கண்ணாடி கொண்டு பார்த்தாலும் இருட்டைத் தவிர என்ன தெரியும்?

பேரிஸ் கார்னர் - பாரிமுனை ஆகவில்லையா? கெல்லிஸ் - கிள்ளியூர் ஆகவில்லையா? வழங்கிக் கொண்டால் பொருட் பெயரைப் புழங்கிக் கொண்டால் மாறுபாடுகள் மறைந்தே போகும் என்பதை உணர்ந்தேனும், உலக வழக்கும் செய்யுள் வழக்கும் தமிழில் ஒப்ப நடக்க நாம் வழியமைத்துக் கொண்டால், இருக்கும் இன்ப இயல் தமிழையேனும் காத்து, அடுத்தத் தலைமுறைக்கு நன்னெறி காட்டலாம்.

இதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் பணி, நம் குழந்தையர்க்கு இனி இடும் பெயர்களையெல்லாம் தூய தமிழ்ப் பெயர்களாகவே இட்டு வழங்குவோம். இருக்கும் வடமொழிப் பெயர்களைத் தமிழ்ச் சொல்லால் வழங்கிடுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com