இந்தவாரம் கலாரசிகன்

இந்தவாரம் கலாரசிகன்

மதுரைப் புத்தகத் திருவிழா அரங்கில் நுழைந்தவுடன் என்னை வரவேற்றது தமிழ் விக்கிபீடியா அரங்கம். இது பற்றித் தனியாகவே ஒரு கட்டுரை எழுத வேண்டும். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் விக்கிபீடியா தகவல் களஞ்சியம் என்கிற நிலைமையை மாற்றிவிடத் துடிக்கும் பங்களிப்பாளர்களுக்கு நாம் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம். தமிழ் விக்கிபீடியாவின் பங்களிப்பாளர்களை ஒருங்கிணைக்கவும், ஒன்று கூடி மேலும் எப்படி மேம்படுத்தலாம் என்பதை ஆராயவும் "தினமணி' சார்பில் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிற நண்பர் ஸ்ரீதரின் வேண்டுகோள் யோசிக்க வைக்கிறது. நல்லது நினைத்தால் நல்லது நடக்கவே செய்யும்.

புத்தகத் திருவிழாவையொட்டி நடத்தப்படும் நிகழ்ச்சிகள் பற்றி சில புத்தகப் பிரியர்கள் முன்வைத்த கருத்தை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (ஆஅடஅநஐ) கவனத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன். மாலை நேர நிகழ்ச்சிகளில் உரையாற்றும் பேச்சாளர்கள் பலரும், புத்தகங்கள் பற்றிய புதிய தகவல்களைத் தருவதாகவோ, சிந்தனையைத் தூண்டும் வகையில் உரையாற்றுபவர்களாகவோ இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஸ்டாலின் குணசேகரன் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து வரவழைத்து, அவர்களுக்கு தலைப்பைத் கொடுத்துப் பேச வைக்கும் உத்தியை, எல்லாப் புத்தகக் கண்காட்சிகளிலும் பின்பற்ற வேண்டும்.

புத்தகக் கண்காட்சி உரைகள் நகைச்சுவைப் பட்டிமன்றங்களைப் போலப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகிவிடக் கூடாது. புத்தகங்கள் பற்றிய ஆழ்ந்த புரிதலை, நல்ல புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். வாசகர்களை மேம்படுத்தும் சமூக, இலக்கியப் பின்னணியுடன் கூடிய உரைகள்தான் இடம்பெற வேண்டும்.

இந்த ஆண்டு மதுரைப் புத்தகக் கண்காட்சி உரைகளில் பரவலாக வரவேற்புப் பெற்றதாகக் கூறப்படுவது நண்பர் மை.பா. நாராயணனின் உரை. தமிழுக்கு நல்லதொரு புதிய மேடைப் பேச்சாளர் கிடைத்திருக்கிறார். திருமுறையிலும், பிரபந்தத்திலும் அவருக்கிருக்கும் ஆழங்காற்பட்ட புரிதல் மை.பா. நாராயணனின் மிகப்பெரிய பலம். அவரை "ஆழ்வார்க்கடியான்' என்று அழைத்துப் பாராட்டக் கவிஞர் வாலி இல்லாமல் போய்விட்டாரே... இருந்திருந்தால் தன் சீடன் கோடை மழை போல இலக்கிய மேடைகளைக் குளிர்விப்பதைப் பார்த்து சிலேடை நயத்துடன் தமது பாராட்டைப் பாட்டாக்கி இருப்பார்!

உலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நூல்களுள் ஒன்று ஹெர்மான் ஹெஸ் என்பவர் எழுதிய "சித்தார்த்தா'. ஆச்சாரிய ரஜனீஷின் தனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் பட்டியலில் இடம்பெற்ற புத்தகம் இது. 1946-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற படைப்பு. இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டு சர்ச்சைகளைக் கிளப்பியது.

ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 128 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்தப் புத்தகத்திலிருந்து அடிக்கடி "ஓஷோ' மேற்கோள் காட்டுவார் என்றால், இந்தப் புத்தகம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். "சித்தார்த்தா' என்று பெயர் இருப்பதால் இது கெளதம புத்தரைப் பற்றிய வரலாறு என்று நினைத்துவிடக் கூடாது. கெளதம புத்தரை மையமாக வைத்து, சித்தார்த்தன், கோவிந்தன் என்கிற இரண்டு கதாபாத்திரங்கள் எவ்வாறு கெளதம புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்படுகின்றனர் என்பதை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட புதினம்தான் "சித்தார்த்தா'.

கெளதம புத்தர் பற்றிய பல செய்திகள் ஆங்காங்கே "சித்தார்த்தா'வில் கூறப்பட்டுள்ளன. புத்தரே இந்த நாவலில் மையக் கதாபாத்திரம். ""போதி மரத்தடியில் புத்தருக்கு ஞானம் பிறந்தது என்பது ஓர் அருமையான விஷயம். அவர் ஏன் வேறு மரத்தைத் தேடவில்லை? வேறு இடத்தைத் தேடச்சொல்லித் தன் உள் ஒலி கட்டளை இடவில்லை. போதி மரம் அரச மர வகையைச் சார்ந்தது. அரச மரம் ஒன்றுதான் 24 மணி நேரம் ஒளிச்சேர்க்கை செய்து பிராண வாயுவை மட்டும் வெளியிடக் கூடிய மரம். கிருஷ்ணன் கீதையிலே சிறந்தவைகளைப் பற்றிக் கூறும்போது, "மரங்களிலே தான் அரச மரம்' என்று கூறுகிறார். சிந்திக்க வேண்டிய விஷயம்''. இதுபோல, பல இடங்கள், பல செய்திகள், பல சம்பவங்கள்.

ஹெர்மான் ஹெஸ்ஸின் தாத்தா, கேரளத்திலுள்ள தலைச்சேரியில் சில காலம் பாதிரியாராகப் பணியாற்றியவர். பெற்றோர் அரவணைப்பு குறைவு என்பதால், ஹெஸ் சில காலம் தாத்தாவுடன் இந்தியாவில் தங்கி இருந்திருக்கிறார். அவரது இந்தியத் தொடர்பு,புத்தரின் போதனைகள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. புத்தரையே கதாபாத்திரமாக்கி ஓர் அற்புதமான படைப்பை எழுதிவிட்டார்.

சுரானந்தா என்பவர் "சித்தார்த்தா'வை அப்படியே மொழிபெயர்க்காமல், அதை ஓர் ஆய்வாகப் படைத்திருக்கிறார். ஆய்வு நூல் என்றாலும்கூட, சற்றும் தொய்வில்லாமல் கதையையும் கொண்டு போயிருக்கிறார். நல்ல உத்தி.

யார் இந்த சுரானந்தா, அவரது இயற்பெயர் என்ன, என்ன செய்கிறார் என்கிற குறிப்பு எதுவுமே காணப்படவில்லையே, ஏன்?

கடந்த ஆறு ஆண்டுகளாக இர. இரவிச்சந்திரனை ஆசிரியராகவும், சாந்தி ரவிச்சந்திரனை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் கலை, இலக்கிய மாத இதழ் "புதுப்புனல்'. அதில் "சுப்ரா' எழுதியிருந்த கவிதைகள் ஈர்த்தன. அவற்றில் ஒன்று இதோ:

வருத்தப்படாதீர்

விலக்கப்பட்ட கனி

புசிக்கப்பட்டு விட்டதேயென...

ஆதாமும் ஏவாளும் துப்பிய

விதைகளில் முளைத்த மரங்களில்

பழுத்துக் குலுங்குகின்றன

பாவக் கனிகள் நமக்காக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com