இந்தவாரம் கலாரசிகன்

இந்தவாரம் கலாரசிகன்

முகவர்கள், நிருபர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை சென்றிருந்தேன். கடல் கொண்ட லெமூரியாக் கண்டக் காலத்துக்கும் முற்பட்டது திருவண்ணாமலைக் குன்றம் என்பது அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் முடிவு. அக்னிப் பிழம்பு குன்றமாகி இருக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள்.

திருவண்ணாமலைக்கு நிகழ்கால சரித்திர முக்கியத்துவமும் ஒன்று உண்டு. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இருந்த தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ப.உ. சண்முகத்தை சந்திக்க நான் திருவண்ணாமலை சென்றிருந்தபோது, அவர் சொல்லித்தான் அந்த நிகழ்வு பற்றித் தெரிந்து கொண்டேன்.

அப்போது சுதந்திர இந்தியாவின் இரண்டாவது கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த, ராஜாஜி என்று பரவலாக அழைக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் பயணிக்கும் சிறப்புக் "கூபே' ரயில் பெட்டி திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அவர் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்.

திருவண்ணாமலைக்கு வந்திருந்த, பெரியார் என்று பரவலாக அழைக்கப்பட்ட ஈ.வெ. ராமசாமி நாயக்கர் காரில் போய், "கூபே'யில் இருந்த தன் நண்பர் ராஜாஜியைத் தனிமையில் சந்தித்தார். அப்போது இளைஞரான ப.உ. சண்முகமும் இன்னும் சிலரும் வெளியே காத்திருந்தனர்.

நண்பர்களான ராஜாஜியும், பெரியாரும் சந்தித்ததில் என்ன வியப்பு என்று கேட்காதீர்கள். அரசியல் நாகரிகம் கருதி அவர்கள் சந்தித்திருந்தால் அதற்கு சரித்திர முக்கியத்துவம் எதுவும் இருக்காது. அவர்கள் சந்திப்புக்கான காரணம், பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்து கொள்வது தொடர்பானது.

மணியம்மையைத் திருமணம் செய்து கொள்ளும் தனது முடிவு பற்றி ராஜாஜியுடன் கலந்தாலோசிப்பதற்குத்தான் பெரியார் திருவண்ணாமலை வந்திருந்தார் என்பதும், அந்தத் திருமணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய பூகம்பத்தைக் கிளப்பி, தி.மு.க. என்கிற அரசியல் கட்சி உதயமாவதற்குக் காரணமாயிற்று என்பதும் சரித்திரம். அப்படிப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருவண்ணாமலை இப்போது ஆன்மிக, இலக்கிய கேந்திரமாகத் திகழ்கிறது.

திருவண்ணாமலை வரை சென்றுவிட்டு, அங்கிருந்த இலக்கிய அமைப்புகளின் உறுப்பினர்கள் சிலரையாவது சந்திக்காமல் திரும்ப முடியுமா? குறிப்பாக, இந்திரராஜன், குப்பன் போன்றவர்கள் ஆற்றி வரும் தமிழ்ப் பணியைச் சொல்லி மாளாது. திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் கடந்த எட்டு ஆண்டுகளாக, ஒவ்வொரு வாரத்தின் முதல் ஞாயிறன்று திருக்குறள் ஓதியபடி கிரிவலம் நடத்துகிறது. பல வீடுகளின் சுற்றுச் சுவர்களில் திருக்குறள் எழுத ஊக்குவிக்கிறது.

ப.உ. சண்முகத்தின் மருமகன் ப. கண்ணன், ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் திருவள்ளுவர் விழா நடத்துகிறார். முத்தமிழ் மன்றம் சார்பில் பெளர்ணமி தோறும் இலக்கியச் சொற்பொழிவு நடத்துகிறார். இந்திரராஜன், குப்பன், ப. கண்ணன் மட்டுமல்லாமல் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளும் தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தின் இலக்கியப்பணி பற்றித் தனியாகவே எழுத வேண்டும்.

திருக்குறள் தொண்டு மையத்திற்குச் சென்றதும், அங்கே திருவண்ணாமலைத் தமிழ் அறிஞர்களையும், அன்பர்களையும் சந்தித்ததும் எனது வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் என்பதைப் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களில் ஒருவர் ஆ. சிவசுப்பிரமணியன். இடதுசாரி சிந்தனையாளர். எந்தவொரு படைப்பையும், நிகழ்வையும் நுணுக்கமாக ஆய்வு செய்பவர். அசாத்தியமான வாசிப்பு இவருடையது. இவரால் எப்படி இத்தனை புத்தகங்களையும், தரவுகளையும் வாசித்து ஆய்வு செய்ய முடிகிறது என்கிற எனது வியப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக "உங்கள் நூலகம்' இதழில் "படித்துப் பாருங்களேன்' என்ற தலைப்பில் நூல்களை அறிமுகம் செய்து விமர்சித்து வருகிறார். கடந்த ஆண்டு அந்தக் கட்டுரைகளின் முதற்பகுதி "புத்தகத்தின் பெருநிலம்' என்ற பெயரில் வெளிவந்தது. இப்போது அதற்குப் பிறகு வெளிவந்த கட்டுரைகள் "தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி' என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது.

மதுரை புத்தகத் திருவிழாவுக்குப் போயிருந்தபோது, நான் வாங்கி வந்த புத்தகங்களில் ஒன்று "தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி'. தரங்கம்பாடியும், அதன் சரித்திரப் பின்புலமும் என்னை மிகவும் வசீகரிக்கும் விஷயங்களில் ஒன்று. புத்தகத்தின் தலைப்புதான் "தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி'யே தவிர, புத்தகம் முழுவதுமே தரங்கம்பாடி பற்றியதல்ல. முதல் மூன்று கட்டுரைகள் 37 பக்கத்தில் தரங்கம்பாடியும் டேனிசிய சரித்திரத்தையும் பதிவு செய்கின்றன. டேனியேல் ஜெயராஜ் 2005-இல் எழுதிய புத்தகத்தின் விமர்சனம் பற்றிய பதிவுதான் இந்தக் கட்டுரைகள்.

பேராயர் கால்டுவெல்லின் திருநெல்வேலி வரலாறு, சித்திரா மாதவன் எழுதிய "தமிழ்நாட்டின் பண்பாடும் வரலாறும்', காலனிய இந்தியாவில் சாதியும் முதலாளித்துவமும், நாட்டார் வழக்காறும் வரலாற்று வரைவியலும், வடலூர் சத்திய ஞானசபை வழக்கு, பெரியாரின் குடியரசு, ஸ்ரீமத் பகவத் கீதா, பெருமாள் முருகனின் மாதொருபாகன் ஆகியவையும்கூட, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் மேனாள் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனின் விமர்சன நுண்ணாடியில் பகுத்தாய்வு செய்யப்பட்டிருக்கின்றன.

"புத்தகம் பேசுது' போலத் தொடர்ந்து "உங்கள் உலகம்' இதழைப் படிக்காத குறையை "தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி' போக்கிவிட்டது.

முசிறியிலிருந்து செண்பகநாதன் என்கிற வாசகர் ஒருவர் தபால் அட்டையில் ஒரு கவிதை எழுதி அனுப்பி இருக்கிறார். இது யார் எழுதிய கவிதை என்கிற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். கவிதை நன்றாகவே இருக்கிறது. சினிமாப் பாடலாக இருக்குமோ என்று எனக்கு சந்தேகம். யார் எழுதியது என்பது எனக்குத் தெரியாது. யாருக்காவது தெரிந்தால் வாசகர் செண்பகநாதனின் ஐயப்பாட்டைத் தீர்த்து வையுங்கள்.

காலொடிந்த ஆட்டுக்காக

கண்ணீர்விட்ட புத்தரும்

கடல்போல் உள்ளம் கொண்ட

காந்தி ஏசுநாதரும்

கழுத்தறுக்கும் கொடுமை கண்டு

திருந்தி வாழச் சொன்னாங்க

காதில் மட்டும் கேட்டு ரசிச்சாங்க

ஆனால் கறிக் கடையின்

கணக்கைப் பெருக்கி வந்தாங்க!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com