அறியப்படாத அற்புதக் கவிஞர்

அறியப்படாத அற்புதக் கவிஞர்

இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் உள்ளது கரிவலம்வந்தநல்லூர். இது வரலாற்றுச் சிறப்புடைய சிற்றூர்.

இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் உள்ளது கரிவலம்வந்தநல்லூர். இது வரலாற்றுச் சிறப்புடைய சிற்றூர். இந்த வட்டாரத்தில் தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் சி.ஆ.ராமசாமிபிள்ளை. இவர் 1898-ஆம் ஆண்டு ஆடி மாதம் 14-ஆம் தேதி பிறந்தவர். சேத்தூர் அரசவைக் கவிஞர் அப்பாவுக் கவிராயரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்.

 இராமசாமிபிள்ளை பஞ்சு வியாபாரம் செய்து வந்துள்ளார். அத்தொழில் சரியாக நடக்காமையால் வறுமையில் சிரமப்பட்டுள்ளார். அந்நிலையிலும் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு பல சிறு பிரபந்த நூல்களைப் படைத்துள்ளார். தாம் வாழ்ந்த கரிவலம்வந்தநல்லூர் கோயில் பால்வண்ணநாதர் மீது அந்தாதி, கலிவெண்பா, மாலை முதலிய பிரபந்த நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய நூல்கள் மரபிலக்கிய அமைப்பில் கவித்துவம் மிக்கவை.

இவர் இயற்றிய நூல்களாகக் கிடைப்பவை: திருக்கருவை முகலிங்க வெண்பா அந்தாதி, திருக்கருவை பால்வண்ணத்தந்தாதி, திருக்கருவை நீரோட்டக வெண்பா அந்தாதி, கருவை நாயகமாலை, திருக்கருவை வருக்கமாலை, திருக்கருவை இரட்டை மணிமாலை, திருக்கருவை பால்வண்ணப்பத்து, திருக்கருவை ஒப்பனையம்மன் வருகைப்பத்து, திருக்கருவை ஒப்பிலா வல்லியம்மன் பத்து, திருக்கருவை முப்பிடாதியம்மன் பத்து, திருக்கருவை வீரசண்முகர் வருக்கச் சமயமாலை, திருக்கருவை வீரசண்முகர் வாழ்த்துப் பாமாலை, திருக்கருவை தலபுராண போற்றிக் கலிவெண்பா.

சொல்நயமும், நடையழகும் மிக்க பாடல்களைப் பாடியவர் ராமசாமிபிள்ளை. இவர் இயற்றிய முகலிங்க வெண்பா அந்தாதி பாடல் ஒன்று.

""கண்ணே கருத்தே கதிகாணு மெய்த்தவத்தோர்

எண்ணே எழுத்தே யிறைவனே - நண்ணுந்

தவத்தால் உடல்வருந்தேன் சத்கருமஞ் செய்யேன்

அவத்தானே னுய்யு வதெவ் வாறு?''

என்று பாடியுள்ளார். இவர் 1968-ஆம் ஆண்டு தம் 70ஆவது வயதில் காலமானார். இலக்கிய உலகம் கண்டுகொள்ளாத இனிய கவிஞரான சி.ஆ.ராமசாமிபிள்ளை பக்தி இலக்கியத்திற்கும் பிரபந்த இலக்கியத்திற்கும் வழங்கிய கொடை அளப்பரியது. இப்புலவரின் குடும்பத்தார் இன்றும் கரிவலம் வந்தநல்லூரில் வாழ்ந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com