ஆனைச்சாத்தனும் ஆட்காட்டிப் பறவையும்

ஆண்டாள் அருளிய திருப்பாவை ஏழாம் பாசுரத்தில், ""கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து / பேசின பேச்சரவம் கேட்டிலையோ?'' என்று "ஆனைச் சாத்தன்' என்னும் பறவையைப் பற்றிய சிறு குறிப்புக் காணப்படுகிறது.
ஆட்காட்டிப் பறவை
ஆட்காட்டிப் பறவை

ஆண்டாள் அருளிய திருப்பாவை ஏழாம் பாசுரத்தில், ""கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து / பேசின பேச்சரவம் கேட்டிலையோ?'' என்று "ஆனைச் சாத்தன்' என்னும் பறவையைப் பற்றிய சிறு குறிப்புக் காணப்படுகிறது.
இங்குப் பழைய உரையாசிரியர்கள் (பெரியவாச்சான் பிள்ளை, திருநாராயணபுரத்து ஆய், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் போன்றோர்) மூல நூலில் உள்ளவாறு "ஆனைச்சாத்தன்' என்றே குறிப்பிட்டிருக்க, திருப்பாவை மூவாயிரப்படிக்கான சின்ன அரும்பதம் மட்டும், "பரத்வாஜ பக்ஷி' என்று வடமொழியிலும், "வலியன்' என்று தமிழிலும் பொருள் தருகிறது.
வலியன் என்பது நாட்டார் வழக்கில் "கரிச்சான் குருவி' எனப்படும் "கரிக்கருவி' ஆகும். எனினும் வல்லூறு முதலான வலிமிக்க பறவைகளைக் குறிப்பதாகவும் தமிழ் நூல்களில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. எனவே, ஆனைச்சாத்தன் என்பது கரிக்குருவியைக் காட்டிலும் வேறானது என்று கருதவும் இடமுண்டு.
கி.பி.14ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த பெரியவாச்சான்பிள்ளை (கி.பி.1167-1262) போன்றவர்களும் மூல நூலில் உள்ளவாறு ஆனைச்சாத்தன் என்றே எழுதிச் சென்றனர். காரணம், ஆனைச்சாத்தன் என்ற பெயர் குறிக்கும் பறவை இன்னது என்பது அக்காலத்தவர்க்கு நன்கு தெரிந்திருக்கக்கூடும். எனவே, பழைய உரையாசிரியர்களுக்கு மேலும் விளக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.
காலப்போக்கில் அப்பறவை இன்னது எனத்தெளிவதில் ஐயம் ஏற்பட்டதை அறிய முடிகிறது. மதுரைக் காஞ்சி 674 ஆவது அடியிலும்; குறுந்தொகைப்பாட்டு ஒன்றிலும் (34:4) "யானையங்குருகு' என்னும் தொடர் காணப்படுகிறது. குறுந்தொகையில் வரும் அத்தொடருக்கு ஒப்புமை காட்டி விளக்கம் தரும் டாக்டர் உ.வே. சாமிநாதையர், "குஞ்சரக்குரல குருகு' என ஒரு பறவை அகநானூற்றிலும் (145:15) கூறப்படுகிறது. அக்குருகே யானையங்குருகாயின் யானையைப் போன்ற குரலுடைமை பற்றி இப்பெயர் பெற்றதென்று கொள்வதற்கு இடமுண்டு. ஆனைச்சாத்தன் என்னும் பறவை (திருப்பாவை) இது போலும்'' என்கிறார்.
வித்துவான் செ.வேங்கடராமச் செட்டியாரும் "பழந்தமிழ் நூல்களில் உயிர்வகைகள்' என்னும் நூலில் (ப.162) இக்கருத்தையே தெரிவிக்கிறார். இவற்றை நோக்க ஆண்டாள் குறிக்கும் ஆனைச்சாத்தன் கரிக்குருவியினும் வேறானது என்பது புலப்படும். அவரே பாடிய நாச்சியார் திருமொழியில், "கரிய குருவிக்கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் (இந்தளம்) என்னும் பண்ணைப் பாடுவதாக' ஒரு குறிப்புள்ளது. இதனாலும் அப்பறவைகள் வெவ்வேறு வகையின என்று அறியலாம். அன்றியும் மலையாளத்தில் "ஆனைஇறாஞ்சி' என்று ஒரு பறவைக்குப் பெயர் வழங்குவதாகத் தெரிகிறது.
இறாஞ்சுதல் என்பதற்குப் "பட்சி அறைதல்' என்று யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையின் தமிழ் அகராதி பொருள் தருகிறது. ஆனையிறாஞ்சிப் புள் என்பதற்கு, "ஆனையைத் தாக்கும் பழம்புகழ் உடைய பெரும் பறவை' (A fabulous bird, reputed to be able to devour an elephant)  என்று தமிழ்ப் பேரகராதியில் (Tamil Lexicon) பொருள் காணப்படுகிறது.
எனவே, ஆண்டாள் குறிக்கும் ஆனைச்சாத்தனும் கரிய குருவிக்கணங்களும் வெவ்வேறானவை எனலாம். அதே சமயம் ஆனைச்சாத்தன் என்பது, ஆனையை அறையும் (இறாஞ்சும்) அதன் திறன் கண்டு அதற்கு வழங்கிய பெயராகக் கொள்ளலாம்.
இவ்வாறே நீர் நிலைகளிலும் வயல் வெளிகளிலும் காணப்படும் ஒரு பறவை, வேட்டைக்காரர்கள் வந்தால் வட்டமிட்டுப் பறந்து உரத்த குரல் எழுப்பி மற்ற விலங்குகளையும் பறவைகளையும் எச்சரிப்பதுண்டாம். இப்படி ஆளின் வருகையை முன் உணர்த்தும் அதன் இயல்பு கண்டு, அதற்கு "ஆட்காட்டிப்பறவை' என்று ஒரு பெயர் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் அதற்கு வழங்கும் பெயர் Lapwing என்பதாகும்.
இத்தகைய எச்சரிக்கையுடைய ஆட்காட்டிப்பறவை - கூட்டிலிருக்கும் போதே அதற்குத் தெரியாமல் எத்தன் ஒருவன் அதன் முட்டையை எடுத்து விடுகிறானாம். அப்படி எடுத்தவனின் காற்செருப்பையே வேறொருவன் களவாடிச் சென்று விடுகிறானாம். இது என்ன புதுக்கதை என்கிறீர்களா?
லேவாதேவித் தொழில் செய்து ஏழைகளிடம் பணம் பறிக்கும் ஏமாற்றுக்காரன் ஒருவனை மற்றொரு ஏமாற்றுப் பேர்வழி வஞ்சித்ததற்குப் பிற்காலத்துப் புலவர் ஒருவர் சொன்ன வேடிக்கையான உவமை இது. ஆட்காட்டிப் பறவையின் எச்சரிக்கை உணர்வைப் பயன்படுத்தி - இப்படி எத்திப் பிழைப்பவர்களை ஏளனம் செய்த புலவரின் பெயர் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை. தாது வருஷப் பஞ்சம் (1876) பற்றி 1899ஆம் ஆண்டு அவர் பாடிய நையாண்டி இலக்கியத்தில் (க.1622) இது, இடம் பெற்றுள்ளது. நூற்பெயர், "பஞ்சலட்சணத் திருமுக விலாசம்'.
ஆனைச்சாத்தனையும் ஆட்காட்டிப் பறவையையும் பற்றி இன்று நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றை அறியாதவர்களும் கூடத் தமிழ் இலக்கிய வானில் அவை உயரப் பறப்பதைப் படித்து மகிழலாம் அல்லவா?
- முனைவர் ம.பெ. சீனிவாசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com