ஒளவையின் பெட்டகம்!

காவிரிக் கரையோரம் அமைந்துள்ள உறையூரில், வீரகோபாலன் என்பவன், தன் மனைவி பூங்கோதையை உயிராய்ப் போற்றி இல்லறம் நடத்தி வந்தான். பூங்கோதையோ நல்லறம் காக்கும் இல்லத்தரசியாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்டு விளங்கினாள். கட்டிய

காவிரிக் கரையோரம் அமைந்துள்ள உறையூரில், வீரகோபாலன் என்பவன், தன் மனைவி பூங்கோதையை உயிராய்ப் போற்றி இல்லறம் நடத்தி வந்தான். பூங்கோதையோ நல்லறம் காக்கும் இல்லத்தரசியாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்டு விளங்கினாள். கட்டிய கணவனுக்கு துரோகம் இழைத்து, அவளது ஆசை நாயகனுடன் (கள்ளக் காதலன்) கூடும் மோகத்தால் "தீராத்தலைவலி' எனத் துடிக்கிறாள். இதைக் கண்ட கணவன், "இதற்கு மருந்து என்ன?' என்கிறான். ""கங்கைக் கரை முதலைக் குழி மண்ணும், வேங்கைப்புதர் மண்ணும் கலந்து பத்துப் போட்டால் தீரும்'' என்று மனைவி கூறியுவுடன் அவற்றைக் கொண்டுவர புறப்படுகிறான் வீரகோபலான்.

சேர நாட்டுச் சத்திரத்திலே இரவு நேர ஓய்விலே இருந்த ஒளவையார், அவனது யாத்திரைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்து, ""உன் மனைவி பற்றி உன் எண்ணம் என்ன?'' என்கிறார். அதற்கு அவன், ""அவள் ஓர் "அருந்ததி'' என்றதும், அப்பெண்ணின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ஒளவை, அப்பெண்ணுக்குப் பாடம் புகட்டி வீரகோபாலனைக் காப்பாற்ற வேண்டும், தன் மனைவியின் நடத்தையை அறிந்துகொள்ள வேண்டும் என, அவனோடு உறையூர் திரும்புகிறார். ஓர் ஓலைப் பெட்டகத்துள் அவனை மறைத்து வைத்து, பூங்கோதையை அழைத்து, ""உலக அதிசயம், இந்தப் பெட்டக ஜோதிடம்'' என அவளது பூர்வீக நிகழ்வுகளைப் பாடுகிறார். அதை உண்மை என்று நம்பிய அவள் தனது ""ஆசை நாயகனோடு சேரப்போகும் சல்லாப வேளைக்கு ஓர் உல்லாசப் பாட்டுப் பாடேன் பாட்டி'' என்கிறாள்.

வீட்டின் நடுவிலே பெட்டகத்தை வைத்துவிட்டுத் தகாத உறவு கொள்ள நினைத்த இருவரையும் (பூங்கோதையும், அவன் ஆசை நாயகனும்) ஒளவையார் திருத்திய ஒழுக்க நிலையின் விரிவாக்கமே ஒளவையார் அருளிய "பெட்டகம்' ஆகிய இல்லற இலக்கியம். இல்லறத்துள் ஒழுக்கம் நிலைக்க ஒளவையாரால் இயற்றப்பட்டதுதான் இப்பெட்டக இலக்கியம் என்கிறது இப்பெட்டகம் தோன்றிய வரலாறு பற்றிய சிறு குறிப்பு. மொத்தம் 79 பாடல்களைக்

கொண்டது ஒளவையின் இந்தப் பெட்டக அற இலக்கியம்.

இப்பெட்டகத்தில் உள்ளிருக்கும் எழுபத்து ஒன்பது பாடல்களிலும் புராண, இதிகாச, அறநெறிக் கதைகளில் வரும் சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பெட்டகத்துக்குக் கூறுவதுபோல ஒளவையார், அதனுள் ஒளிந்திருக்கும் வீரகோபாலனுக்குக் கூறி எச்சரிப்பதாக அமைந்துள்ளது.

எ.டு: சீதை ராமனிடம் "மானைப் பிடித்துத் தா' என்று கேட்க, அவள் பேச்சைக் கேட்டதால் ராமனுக்கு வந்த துன்பங்கள், இந்திரன் அகலிகை மேல் ஆசை கொண்டதால், அவனுக்கு உடலில் ஆயிரம் கண் உண்டானது, தசரதன் கைகேயின் சொல்லைக் கேட்டதால், ராமனை நாட்டை விட்டு அனுப்பியதும், தயரதன் உயிர் துறந்ததும், வாலி தன் தம்பியின் மனைவி மீது ஆசைப்பட்டதனால் மாண்டது, மூவுலகையும் ஆட்சி செலுத்தக்கூடிய வல்லமை படைத்த ராவணன், சீதையின் மீது ஆசைப்பட்டதால் அழிந்தது எனப் பல்வேறு கதைகளை முதல் மூன்று அடிகளில் கூறி, இறுதி அடியில் பெட்டகத்துக்குக் கூறுவதுபோல, கேட்டுக்கொள் பெட்டகமே, அறியாயோ பெட்டகமே, பார்த்துக்கொள் பெட்டகமே, அறிந்துகொள் பெட்டகமே, சொல் பெட்டகமே எனப் பெட்டகத்துள் மறைந்திருக்கும் வீரகோபாலனுக்குக் கூறி, "இதுநாள் வரை உன் மனையைப் பற்றி, அவள் ஒழுக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருந்தாயே, இனியாவது நன்கு அறிந்து நடந்துகொள்' (பா.21) என்று அறிவுறுத்தும் ஒளவை, "பெண்களின் மனத்தை யாராலும் அறிந்துகொள்ள முடியாது' (பா.24) என்ற உண்மையையும் முத்தாய்ப்பாகக் கூறியுள்ளார்.

ஆயிரமோ வொரு பானை நிறைந்த

அமுதுக்கு ஒன்றே பதமாகும்

மாயமதாகத் திறந்து வெளியில்

வரவும் சமயமே பெட்டகமே! (79)

என்ற கடைசி பாடலைப் பாடி முடிந்தவுடன், பெட்டகத்திலிருந்து வீரகோபாலன் வெளியே வருகிறான். இதைக் கண்ட அவன் மனைவி

பூங்கோதை, ""செல்வ வளமுள்ள பிற

ஆடவனது கவர்ச்சியால் முதன் முதலாகத் தவறு செய்ய இருந்தேன், என்னை மன்னித்துவிடுங்கள்'' எனக் கணவனின் காலில் விழுகிறாள்.

""திருந்திய இவளே மிக நல்ல பெண்மணியாவாள்'' எனக்கூறி ஏற்றுக்கொள்கிறான் வீரகோபாலன். இல்லறம் காக்கும் நல்லறம் பாடி அவ்விருவரையும் திருத்திய பெருமிதத்தோடு அவர்களிடம் விடைபெறுகிறார் ஒளவையார்.

பல்லாண்டுகளாகப் பலர் கண்ணிலும் படாமல் மறைந்திருந்த ஒளவையின் இவ்வொழுக்கப் பெட்டகத்தை, "ஒளவைப் பித்தராக'த் திகழும் வேம்பத்தூர் கிருஷ்ணன் தேடிக்கண்டு பிடித்து, "ஒளவையாரின் நூல்கள் அனைத்தும்' என்ற தன் புதிய தொகுப்பில் இணைத்து, வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

நல்லொழுக்கம் குன்றி, அழிந்து, ஒழுக்கக்கேடு மலிந்து வரும் தற்காலத்திற்கு ஏற்ற

பெட்டகமாகத் திகழ்கிறது ஒளவையின் இந்தப் பெட்டகம்!

-மணிவாசகப்பிரியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com