பேரொலியலந்தாதி

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். பல்வேறு யாப்புகளில் இலக்கியம் படைத்துள்ளார். "வகுப்பு' என்னும் சிற்றிலக்கிய வகையைப் பாடியவர் இவர் ஒருவரே என்பது அறிஞர்கள் கருத்து.
பேரொலியலந்தாதி

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். பல்வேறு யாப்புகளில் இலக்கியம் படைத்துள்ளார். "வகுப்பு' என்னும் சிற்றிலக்கிய வகையைப் பாடியவர் இவர் ஒருவரே என்பது அறிஞர்கள் கருத்து.

வண்ணச்சரபர் பாடிய தனித்துவச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று "பேரொலியலந்தாதி'. பதினாறு கலை ஓரடியாக வைத்து நாலடிக்கு அறுபத்து நான்கு கலையாக வகுத்துப் பல சந்தமும் வண்ணமும் கலை வைப்பும் தவறாமல், அந்தாதி யாப்பில் முப்பது செய்யுள் பாடும் முறைக்கு "ஒலியந்தாதி' எனப் பெயர். இதற்கு "ஒலியலந்தாதி' என்றும் பெயருண்டு. வண்ணச்சரபர் ஒலியலந்தாதி, பேரொலியலந்தாதி ஆகிய இரண்டையும் பாடியுள்ளார்.

பேரொலியலந்தாதி 1985-ஆம் ஆண்டு முதன்முதல் பதிப்பிக்கப்பெற்றது. "சதுர்வேத சித்தாந்தமாகிய மார்க்கங்களின் பொதுவிற் சிறப்பாகிய பேரொலியலந்தாதிப் பிரபந்தம்' என்று அதன் பெயர் அச்சிடப்பட்டுள்ளது.

புராணக் குறிப்புகளுடன் தம் அனுபவத்தையும் கலந்து இந்நூலைப் படைத்துள்ளார் வண்ணச்சரபம். உயிரிரக்கக் கொள்கையை நூலின் முதல் பகுதியிலேயே கூறிவிடுகிறார். பசு, ஆடு, குதிரை ஆகியவற்றின் குட்டிகளைக் கொன்று வேள்வி நடத்துதல் கூடாது என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

அருள் முகிலை அனைய புனிதர்

அறையு முறையின் வழிசெல்வேன்

அசமும் அயலும் மகவும் வதைசெய்(து)

அழல்முன் நுகரும் மகம் எள்வேன்!

கோயிலுக்குரிய செல்வத்தை - நிலத்தைக் கொள்ளையடிப்பவர்கள் வாழ்க்கை எப்படி முடிவுறும் என்பதை,

""தேவர் தங்குபல கோயிலின் பொருள்கொள்

தீயர் தங்கள் குலம் வேரொடு கெடுமே''

என்கிறார். இன்றைய சமூகம் மன இறுக்கத்திலும் மன அழுத்தத்திலும் ஆட்பட்டு, நல்ல கலை உணர்வுகூட இல்லாமல், அவசர ஆயுள் முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. காரணம், மென்மையும் மேன்மையும் கொண்ட இயல், இசை, நாடகத் தமிழைச் சுவைக்காததும், முத்தமிழ் வித்தகர்களை வாழ்த்தாததும்தான் என்பதை உணர்ந்து வண்ணச்சரபர் பாடிய பாடல் வரிகள் இவை:

மாசில் முத்தமிழ் கற்றும துக்கடல்

போலி னித்தக வித்திரள் செய்யுநர்

மான்மி யத்தை வெறுத்திடு துட்டர்கள் தேயாரோ!

பக்தியைப் பாடும் நேரத்திலும் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளையும் உள்ளடக்கிய பனுவல்களாகப் பேரொலியலந்தாதி நூலை ஆக்கியுள்ளார். மதமாற்றத்தைச் சாடுதல், மது, இறைச்சி உண்ணுவோரைத் திருத்துதல், ஆறு சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தல் எனக் கொள்கைச் சுடராய் வாழ்ந்தவர் வண்ணச்சரபம்.

-குடந்தை பாலு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com