கற்பனை சிறக்கும் தூது!

96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று தூது இலக்கியம். பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் "திருவரங்க மாலை'யில் தூது அனுப்பவது போல அமைந்த பாடல் ஒன்று கற்பனை அழகுடனும், நகைச்சுவை உணர்வுடனும் திகழ்கிறது.

96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று தூது இலக்கியம். பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் "திருவரங்க மாலை'யில் தூது அனுப்பவது போல அமைந்த பாடல் ஒன்று கற்பனை அழகுடனும், நகைச்சுவை உணர்வுடனும் திகழ்கிறது.

மன்னர்கள் இருவர் போரிடுகின்றனர். வென்ற மன்னன் தன் இளவரசனுக்குப் பெண் எடுக்க விரும்புகிறான். அதனால், தோற்ற மன்னன் நாட்டு மறவர் குடியில் பெண்ணெடுக்கத் திருமுகம் கொடுத்துத் தூது அனுப்புகிறான்.

திருமுகத்தைப் பெற்ற மறவன், ""தூதுவனே! முகம் இல்லாத அந்தக் குறையுடலுக்காக என் மகளை மணம் முடிக்க வந்துள்ளாய். எங்கள் குலத்தின் அருமை தெரியாமல் இச்சிறுமையைச் செய்யத் துணிந்தாய். திருவரங்கப் பெருமாளால் "தோழன்' என அழைக்கப்பட்ட வேடுவனாகிய குகன் தோன்றிய குலம், எங்கள் குலம். நீ கொணர்ந்த மடல், "திருமுகம்' என்றால், அந்த முகத்தில் பொருந்தி இருக்கும் வாய், கண், காது, மூக்கு இவையெல்லாம் எங்கே? உன் மன்னரின் மகன் "இளவரசு' என்றால், அவனுக்கு ஆலமரத்தை அல்லவா திருமணம் செய்ய வேண்டும்?'' என்று கேட்பதாகக் கற்பனை நயத்துடனும் நகைச்சுவை தரும் வகையிலும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடியுள்ள பாடல் வருமாறு:

"கொற்றவன்தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!

குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்?

அற்றவர்சேர் திருவரங்கப் பெருமாள் தோழன்

அவதரித்த திருக்குலம் என்றறியாய் போலும்;

மற்றதுதான் திருமுகமே ஆனால் அந்த

வாய் செவி கண் மூக்கெங்கே? மன்னர் மன்னன்

பெற்ற இளவரசு ஆனால் ஆலின் கொம்பைப்

பிறந்த குலத்துக் கேற்பப் பேசுவாயே!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com