பறக்காத கொக்கைப் பரிசாகக் கேட்டவர்!

அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்னும் புலவர் காஞ்சிபுரத்தை அடுத்த பொன் விளைந்த களத்தூரில் பிறந்தவர்.
பறக்காத கொக்கைப் பரிசாகக் கேட்டவர்!

அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்னும் புலவர் காஞ்சிபுரத்தை அடுத்த பொன் விளைந்த களத்தூரில் பிறந்தவர். பிறவியிலேயே கண் பார்வை அற்ற அவர் தமது அயராத முயற்சியால் தமிழ் கற்றுப் புலவரானவர். திருக்கழுகுன்ற புராணம், சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் முதலான பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

ஒருமுறை வீரராகவர் "தாகம் தீர்த்த செழியதரையன்' என்ற செல்வந்தருக்குத் தூக்குக்கவி ஒன்று அனுப்புகிறார். அந்தச் தூக்குக்கவியில் பறக்காத கொக்கு ஒன்றினைத் தனக்குப் பரிசாகத் தரவேண்டும் என்று வேண்டினார். அதுமட்டுமா? இன்னும் பலவற்றையும் கேட்கிறார்.

""ஆயிரம், கோடி என ஏடுகள் பலவற்றையும் எழுதிப் படிக்காமல் அனைத்தையும் நெஞ்சத்திலேயே இருத்திக் கற்ற திறமையாளனும், எப்பொருள் பற்றி யார் கேட்பினும் அப்பொருள் நுட்பம் உரைத்திடும் ஆற்றலாளனுமாகிய வீரராகவன் என்னும் இப்புலவன் விடுக்கும் ஓலையை, ஆதிசேடனே சிரமசைத்துப் போற்றும் கலைகளின் அதிபதியும், கங்கைகுலத் தலைவனும், சேலம் மற்றும் தென்திசையில் உள்ள பாலைக்காடு ஆகிய இடங்களில் வெற்றி கொண்டவனும் ஆகிய தாகம் தீர்த்த செழியன் காண்க:

இசைக்காத இசை, எறிந்து விளையாடாத பந்து, கோணல் அற்ற மூலை, வெயில் இல்லாத கோடைக்காலம், ஊறு செய்யாத குந்தம் என்னும் படைக்கருவி, காலில் அணிய முடியாத பாதுகை, பூக்காத மாமரம், தொகுத்துப் பின்னலிடாத சடை, சொன்னதைச் சொல்லாத கிளிப்பிள்ளை ஆகியவற்றை இங்கே அனுப்புக'' என்று பாட்டெழுதி அனுப்பினார். இயற்கைக்கும் இயல்புக்கும் மாறான இத்தனையும் ஏன் புலவர் கேட்டார்? கட்புலன் அற்ற அப்புலவருக்கு, காடும் மேடும் திரிந்து பரிசில் பெற்று வாழ்பவருக்கு இயல்புக்கு மாறான இத்தனை பொருள்களும் ஏன் தேவைப்பட்டன? புலவர் பலவாறாய்க் கேட்டாலும் அவை அனைத்தும் ஒரு பொருளையே குறிக்கும். அவர் வேண்டியது எளிதில் பயணப்பட ஒரு குதிரை. குதிரையைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்தாம், கந்தருவம் (கானம்), கந்துகம் (பந்து), கோணம், கொக்கு, கோடை, குந்தம் (போர்க்கருவி), பாடலம் (காலணி), மா, சடிலம் (சடை), கிள்ளை (கிளி) என்பன. புலவர் அனுப்பிய தூக்குக்கவி இதுதான்:

""ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து

எழுதிப் படித்த விரகன்

எதுகொடுப்பினும் அதுவே எனச்சொலும் கவிவீர

ராகவன் விடுக்கும் ஓலை

சேடாதிபன் சிரமசைக்கும் கலாகரன்

திரிபதகை குல சேகரன்

தென்பாலை சேலம் செயித்த தாகந்தீர்த்த

செழியன் எதிர்கொண்டு காண்க!

பாடாத கந்தருவம் எறியாத கந்துகம்

பத்தி கோணாத கோணம்

பறவாத கொக்கு அனல் பண்ணாத கோடைவெம்

படையாய்த் தொடாத குந்தம்

சூடாத பாடலம் பூவாத மாத்தொடை

தொகுத்து முடியாத சடிலம்

சொன்னசொல் சொல்லாத கிள்ளை ஒனிறெங்கும்

துதிக்க வர விடவேணுமே''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com