காஞ்சி தந்த செந்தமிழ்க் களஞ்சியம்!

பல்லவ சாம்ராஜியத்தின் தலைநகராக மிளிர்ந்து தமிழ்ப் பண்பாட்டினைப் பாரெங்கும் பறைசாற்றியது காஞ்சி மாநகர். இந்நகரின்கண் வாழ்ந்த அரங்கசாமி முதலியார், கமலாம்பாள் தம்பதியர் 31.10.1874-இல் ஈன்றெடுத்த நன்முத்தே கா.ர.கோவிந்தராஜர் ஆவார்.
காஞ்சி தந்த செந்தமிழ்க் களஞ்சியம்!

பல்லவ சாம்ராஜியத்தின் தலைநகராக மிளிர்ந்து தமிழ்ப் பண்பாட்டினைப் பாரெங்கும் பறைசாற்றியது காஞ்சி மாநகர். இந்நகரின்கண் வாழ்ந்த அரங்கசாமி முதலியார், கமலாம்பாள் தம்பதியர் 31.10.1874-இல் ஈன்றெடுத்த நன்முத்தே கா.ர.கோவிந்தராஜர் ஆவார்.

இவர்தம் இளம் பிராயத்திலே "செங்கல்வராயர் இலவசப் பள்ளியில்' நன்கு கல்வி பயின்று நன் மாணாக்கராய்த் திகழ்ந்தார். நேர்மை, உண்மை, ஒழுக்கம் ஆகிய உயர் குணங்கட்கு உறைவிடமாய்த் திகழ்ந்தார். காஞ்சியில் நடைபெற்ற சைவ சமய சொற்பொழிவுகள் அனைத்திலும் ஆர்வமுடன் பங்கேற்றுச் செவிச்சுவை நுகர்ந்தார். இதனால் இவருக்குத் தமிழன்னையின்பால் தணியாக் காதல் மேலோங்கியது. இதனை நன்குணர்ந்த இராமலிங்கத் தம்பிரான் என்பவர், இவரைத் தமிழறிஞர் பசுபதி நாயக்கரிடம் ஒப்படைத்தார். அவரிடம் "திருவேங்கட மாலை' போன்ற இலக்கிய நூல்களைக் கேட்டறிந்தார். இதன் பயனாய் இவரது தமிழறிவு மென்மேலும் மெருகேறியது.

இலக்கணத்தை முறையாகக் கற்கும் பொருட்டு அப்பன் செட்டியார் எனும் பேரறிஞரை அணுகி, அவரிடம் நன்னூலை நன்கு கற்றுத் தெளிந்தார். பின்னர் காஞ்சிபுரம் மகாவித்வான் இராமசாமி நாயுடுவை நாடி, தஞ்சைவாணன் கோவை, நாற்கவிராச நம்பி அகப்பொருள், திருக்குறள், கம்பராமாயணம் முதலியனவற்றை நன்கு பயின்றார். பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் இவரது ஒரு சாலை மாணாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வமயம் "தியாசிக்கல் உயர்நிலைப் பள்ளி'யில் பெரும்புலவர் கோ.வடிவேலு செட்டியார் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். இலக்கண இலக்கியங்களிலே ஆழ்ந்த புலமை மிக்க வித்தகர். இவரைக் குருவாக ஏற்று நன்னூல், இராமானுஜக் கவிராயர் விருத்தியுரை, தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களை நன்கு பாடங்கேட்டார். வேதாந்த நூல்கள் அனைத்தையும் அவர் வாயிலாக அறிந்து விற்பன்னராக விளங்கினார்.

தொல்காப்பியத்தை நன்கு கற்றுத் தேர்ந்ததோடு அதனை ஆராயவும் முற்பட்டார். முதுபெரும் புலவர் தி. கனகசுந்தரம் பிள்ளையிடம் கேட்டு அந்நூலில் தமக்கு ஏற்பட்ட ஐயங்கள் நீங்கப் பெற்றார். 1895ஆம் ஆண்டு அரசு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றார். தம் 27ஆவது வயதில் ஜீவரத்தினம் அம்மையாரைத் தம் வாழ்க்கைத் துணைவியராகக் கரம் பற்றினார். நீண்ட காலத்திற்குப் பிறகு கிருஷ்ணவேணி எனும் பெண் மகவுக்குப் பெற்றோராயினர். முதற்கண் திருவள்ளுர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தார். பின்னர் முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றார்.

இவரது நுண்மான் நுழைபுலத்தினை நன்குணர்ந்த பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்தினர், இவரைத் தங்கள் பள்ளியில் 1910ஆம் ஆண்டு துணைத் தமிழாசிரியராக ஏற்றுக் கொண்டனர். அடுத்து இவரது அயரா உழைப்பினாலும், தன்னலமற்ற தமிழ்த் தொண்டினாலும் 1922 முதல் 1936 வரை அங்கு தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.

நன்னூலார் நவின்ற நல்லாசிரியராய்த் திகழ்ந்த இச்சான்றோர் 1936-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் பணி நிறைவுற்றார். பின்னரும் இவரிடம் பாடங்கேட்டோர் எண்ணிலடங்கார். இவர் இயற்கையிலேயே பாப்புனையும் ஆற்றல் கைவரப்பெற்றவர். இவர் யாத்த செய்யுள்கள் ஏராளம்.

நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, நன்னூல் இராமானுஜக் கவிராயர் விருத்தியுரை, இறையனார் அகப்பொருளுரை, நேமிநாதம், தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி, தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணர் உரை, வீரசோழியம் பழைய உரை, நாற்கவிராச நம்பி அகப்பொருள் பழைய உரை முதலிய அரிய நுல்களைத் தெளிந்த குறிப்புரைகளுடன் சிறந்த முறையில் பதிப்பிக்கத் துணை புரிந்துள்ளார். சரஸ்வதி அந்தாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, பன்னிருபாட்டியல், அரங்கசாமி பாட்டியல், அரிசமய தீபம், திரிகடுகம், நான்மணிக்கோவை, ஏலாதி, நளவெண்பா, முல்லைப்பாட்டு முதலிய நூல்களுக்கும் செவ்விய உரை எழுதியுள்ளார்.

கோவலன் சரிதை, சங்க நூல், இந்திய வீரர், ஆழ்வார் வரலாறு, கண்ணன் வரலாறு, ஆழ்வார் வழிக் குரவர் வரலாறு, ஆழ்வார் உயிர்வர்க்க மாலை, மாறன் பஞ்சரத்தினம், திருவேங்கடப் பதிற்றுப்பத்தந்தாதி, திருமகள் வெண்பாப்பத்து, திருமகள் கலித்துறைப்பத்து, சரஸ்வதி வெண்பாப்பத்து, சரஸ்வதி கலிவிருத்தப்பத்து, சரஸ்வதி வஞ்சி விருத்தப்பத்து, சரஸ்வதி சந்திரகலாமாலை, திருப்பாவை ஆராய்ச்சி முதலிய நூல்களையும் யாத்துள்ளார். தம் இளம் பருவத்தில் "அம்பிகாபதியும் இளங்குமரியும்' எனும் நாடக நூலினை எழுதிப் பெரும் புகழ் எய்தினார். 22.5.1949-இல் சென்னைவாழ் தமிழார்வலர்கள் அன்றைய மேயர் எஸ். இராமசாமி நாயுடு தலைமையில் பெருவிழா கண்டு, பொற்கிழி வழங்கி இவரைக் கெüரவித்துப் பெருமைப்படுத்தினர்.

காஞ்சி தந்த செந்தமிழ்க் களஞ்சியமான கா.ர.கோவிந்தராஜ முதலியார், 1952-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 12ஆம் நாள் இயற்கை எய்தினார். இவர்தம் புகழும் இவர் விட்டுச்சென்ற அரிய நூல்களும் காலத்தால் அழியாது என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நின்று, நிலை பெற்றிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com