பெண்பாற் புலவர்கள் ஐவரின் அனுபவ மொழி!

குறுந்தொகை, நானூறு பாடல்களைக் கொண்ட அக நூலாகும். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. பாடியோர் எண்ணிக்கை 205. பெண்பாற் புலவர்கள் 13. இவர்களுள் ஒரு பாடல் மட்டும் பாடிய பெண்பாற் புலவர்கள் ஐவர்.
பெண்பாற் புலவர்கள் ஐவரின் அனுபவ மொழி!

குறுந்தொகை, நானூறு பாடல்களைக் கொண்ட அக நூலாகும். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. பாடியோர் எண்ணிக்கை 205. பெண்பாற் புலவர்கள் 13. இவர்களுள் ஒரு பாடல் மட்டும் பாடிய பெண்பாற் புலவர்கள் ஐவர். ஒரு பாடல் மட்டும் பாடியவர்கள் அப்பாடல்களில் தங்களின் சொந்த அனுபவங்களையே ஏத்திக்கூறுவது மரபு. அந்த வகையில், ஆதிமந்தி, ஊண்பித்தை, வருமுலையாரித்தி, வெண்மணிப் பூதி, பொன்மணியார் ஆகிய ஐவரும் ஒரு பாடல் மட்டும் பாடி, அதில் தன் அனுபவத்தை மொழிந்த பெண் கவிஞர்களாவர். இந்த ஐவரின் பாடல்களைக் காண்போம்.

ஆதிமந்தி

ஆதிமந்தி கரிகாற் சோழனின் மகள்; ஆட்டனத்தியின் மனைவி. அவள் கணவன் காவிரி புனல் விழாவில் காணாமல் போக அவனை, பல இடங்களிலும் தேடுகிறாள். கணவனைப் பிரிந்து மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளான ஆதிமந்தி, மகளிர் தமக்குரிய ஆடவரைத் தழுவி ஆடும் துணங்கைக் கூத்து நடக்கும் இடங்களிலும் சென்று தேடுகிறாள். இவ்வாறு தான் அவ்விடங்களுக்குச் செல்ல நேர்ந்ததை நினைத்து,

யானும் ஓர் ஆடுகள மகளே; என்கைக்

கோடு ஈர் இலங்கை வளை நெகிழ்த்த

பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே! (31: 4-6)

என வருந்திக்கூறி, தானும் ஆடுகள மகள், தன் கணவனும் ஆடுகள மகன் எனும் பொருளில் பாடலமைத்துள்ளார்.

ஊண்பித்தை

தோழி கூற்றாக அமைந்த பாடல் இது. தலைவனைப் பிரிந்த தலைவிக்கு, "தலைவன் வாய்மை உடையவராததால் கட்டாயம் வருவான்; மான், கரடி ஒடித்து உண்டமையால் குறைந்திருந்த "யா' மரநிழலில் படுத்து உறங்குவதைக் காணும் தலைமகன் திரும்பி வருவான்' எனத் தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்துள்ளது.

உள்ளார் கொல்லோ? தோழி! உள்ளியும்

வாய்ப்புணர்வு இன்மையின் வாரார் கொல்லோ?

(232 : 1 -2)

வருமுலையாரித்தி

இது, தோழி கிழத்தியைக் குறைநயப்பக் கூறியது. தேன் எடுப்பவர் தேனடையை எடுத்துச் செல்வது போல் தலைவன் தன் நெஞ்சினை எடுத்துச் சென்றானாம். தேன் அன்பிற்கும், தேனடை நெஞ்சிற்கும் உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது.

வேறுபுலன் நல்நாட்டுப் பெய்து

ஏறுமை மழையின் கலிலும் என் நெஞ்சே! (176:6-7)

தன்னைக் காணாது தன் நெஞ்சு கண்ணீர் விட்டு அழும் என்பதற்கு உவமையாக வேற்று நாட்டின் மழையின் தன்மை சொல்லப்பட்டுள்ளது. "தலைவனால் கொண்டு செல்லப்பட்ட நெஞ்சினைத் திரும்பப் பெறுவதற்கு யாண்டு உளன் கொல்லோ' என்று, பிரிந்து சென்ற தலைமகனை நினைந்து தலைமகளின் உள்ளம் தவிப்பதாகப் பாடல் புனையப்பட்டுள்ளது. தலைவனைத் தன் தந்தை போன்றவன் என்பதை, "ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ' (குறுந்.176:5) என்கிறாள். பெண் பிள்ளை முதலில் காணும் ஆடவன் அவளுடைய தந்தை. ஆகவே, தலைமகனையும் தன் தந்தையாக நினைத்துப் பாடல் பாடியுள்ளார்.

வெண்மணிப்பூதி

பூதன் என்ற ஆண்பாற் பெயரின் பெண்பாற் பெயர் பூதி என்பதாகும். ஆகவே இவர் பெண்கவிஞர் என அறியப்படுகிறார். காண்டல், அவன் பேச்சினைக் கேட்டல் ஆகிய செயல்களைச் செய்யும் கண், காது ஆகியவை எவ்விதக் குறிப்பும் காட்டாமல் இருக்க, தோள் மட்டும் மெலிகின்றதே எனும் பொருளில் பாடியுள்ளார்.

கண்டன மன் அம் கண்ணே; அவள் சொல்

கேட்டன மன் என் செவியே, மற்று அவன்

மணப்பின் மாண் நலம் எய்தி

தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மெந்தோளே!

(299: 5-8)

பிரிவினால் தன் உள்ளம் மட்டுமன்றி உடலும் மெலிவுறுகிறது என்கிறாள். இதனால் விரைவில் திருமணத்தை நிகழ்த்த வேண்டும் என்னும் குறிப்பு தலைவனுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பொன்மணியார்

தனிமைத் துயரோடு இருக்கும் தலைவிக்கு மழை வருவதற்கான அறிகுறிகளாக, இடி இடிக்கும் ஒலியினால் பாம்பு படம் அடங்கியதும், மான்கள் உடலும், உள்ளமும் புழுங்கினதும், மயில்கள் துணையை நாடிக் கூவுகின்றதையும் காண்கிறாள். கார்காலம் வந்துவிட்டது என்று அவள் மனத்திற்கு தெரிந்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள அவள் மனம் ஒப்பவில்லை. ஆகவே, பருவம் அல்லாத காலத்தில் மழையானது மாலைக்காலத்தில் வருகிறது எனவும், அதனால் மயில்கள் கார்ப்பருவம் எனக் கூவினமையால் அவை பேதைமை உடையன என்கிறாள். இதனை,

பூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை

தாஅம்நீர் நனந்தலை புலம்பக்

கூவும் - தோழி பெரும் பேதையவே! (391: 7-9)

என்று தலைவி கூற்றில் பாடல் அமைந்துள்ளது. கார்ப்பருவம் என்று தனக்குத் தெரிந்திருந்தும் அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் மயில்கள் பேதைமை உடையன என்று கூறுமளவிற்கு தலைவியின் உள்ளம் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகிறது.

பெண்பாற் புலவர்கள் ஆணின் பிரிவையே மையமாகக்கொண்டு பாடல்கள் இயற்றியுள்ளனர். குறுந்தொகையில் ஒரு பாடல் மட்டும் பாடிய பெண் கவிஞர்கள் தங்களின் சொந்த அனுபவங்களையே கவிதையில் படைத்துள்ளனர்.

-த. சிவ விவேதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com