வாழ்நாளும் கொண்டு வாழ்க!

சோழப் பேரரசனாகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைச் சிறப்பித்து கோவூர்கிழார், நப்பசலையார், இடைக்காடனார் முதலிய
வாழ்நாளும் கொண்டு வாழ்க!

சோழப் பேரரசனாகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைச் சிறப்பித்து கோவூர்கிழார், நப்பசலையார், இடைக்காடனார் முதலிய பத்துப் புலவர்கள் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. இத்தகு போற்றுதலுக்கும் பெருமைக்கும் உரிய சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சிறுகுடி கிழான் பண்ணன் என்பவனைப் பற்றி ஒரு பாடல் பாடியுள்ளார். இம்மன்னன் பாடிய பாடலாகப் புறநானூற்றில் உள்ள ஒரே ஒரு பாடல் பண்ணனைப் பற்றிப் பாடியதேயாகும். இது நட்பின் ஆழ, அகலத்தைத் தெள்ளிதின் விளக்குவதாய் அமைந்துள்ளது.
 ÷சோழவள நாட்டில் உள்ள ஒரு சிற்றூர் சிறுகுடி. இங்கு வாழ்ந்தவன் வேளாளர் தலைவனாகிய பண்ணன். பண்பிற் சிறந்த இவன் பலராலும் பாராட்டப்பட்டவன். இவனது கொடைச் சிறப்பு கிள்ளி வளவனைப் பெரிதும் கவர்ந்தது. தான் நாட்டின் பேரரசன் என்றும், பண்ணன் எளியவன் என்றும் எண்ணிப் பார்க்காது மன்னன் அவன்பால் மிகுந்த நட்பும் மரியாதையும் கொண்டிருந்தான். இதுவே மன்னனின் உள்ளப் பெருமையை உலகிற்குக் காட்டுவதாகும். பண்ணனைப் பற்றி மன்னன் ஒரு பாடல் செய்தான். அதில், "யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய' என்று மனமார வாழ்த்தியுள்ளான்.
 அக்காலத்தே அரசர்கள் பொன் கொடுத்தனர்; பொருள் கொடுத்தனர்; நிலத்தைத் தந்தனர்; ஆளும் அரச பதவியையும் கொடுத்தனர். ஆனால், கிள்ளிவளவன் ஒருவன்தான் இவையனைத்தையும் விட உயரியதாகிய தன் வாழ்நாளையும் பண்ணனுக்குக் கொடுக்க விழைந்தான். தன் வாழ்நாளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு பண்ணன் நெடுநாள் வாழ வேண்டுமென வாழ்த்தினான் கிள்ளிவளவன். வள்ளன்மைக்கும் நட்பிற்கும் மன்னன் தந்த மாபெரும் பரிசு இது!
 ÷"பழுத்த மரத்திலுள்ள பறவைக் கூட்டத்தின் ஒலியைப் போன்று, உணவு உண்பதால் உண்டாகும் ஆரவாரம் இவன் ஊரில் கேட்டுக்கொண்டே இருக்கும். ஊர்ந்து செல்லும் எறும்புகளின் வரிசைபோல, பிள்ளைகள் சுற்றத்தாருடன் சோற்றுக் கையினராய் செல்வதையும் காணலாம். கேட்ட பொழுதெல்லாம் வாரி வழங்கும் நல்லுள்ளத்தவன் பண்ணன். பசியாகிய நோயை நீக்கும் மருத்துவனாகிய பண்ணனின் இல்லம் அருகில் உள்ளதா? தொலைவில் உள்ளதா கூறுங்கள்?' என்று பாணர் கேட்பதுபோல மன்னன் தன் பாடலில் பண்ணனின் வள்ளன்மையைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
 ÷தகுதி பாராது, மக்களுக்கு உதவும் மனங்கொண்டவரை மதித்துப் போற்றி, வாழ்த்தும் உயரிய பண்பிற்குச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக்காட்டாய் வாழ்ந்திருந்தான். இது கதையாக, வரலாறாக மட்டும் இருந்துவிடாமல், எக்காலத்தும் பின்பற்றத்தக்க நற்பண்பாய் மலர்ந்து சிறக்க வேண்டும் என்பதுதான் மனிதகுலத்தின் எதிர்பார்ப்பு. உள்ளத்தை நிறைக்கும் சங்கப்பாடல் இதோ:
 
 யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய
 பாணர் காண்கஇவன் கடும்பினது இடும்பை
 யாணர் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
 ஊணொலி அரவந் தானும் கேட்கும்
 பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
 முட்டை கொண்டு வற்புலம் சேரும்
 சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
 சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
 இருங்கிளைச் சிறாஅர் காண்டும் கண்டும்
 மற்றும் மற்றும் வினவுதும் தெற்றென
 பசிப்பிணி மருத்துவன் இல்லம்
 அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே. (புறம்-173)
 
 -தமிழ்ப்பெரியசாமி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com