பொய்கையார் காட்டும் உவமைகள்!

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று "களவழி நாற்பது'. இது புறப்பொருள் பற்றிய 40 வெண்பாக்களைக் கொண்டது. சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானுடன்
பொய்கையார் காட்டும் உவமைகள்!

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று "களவழி நாற்பது'. இது புறப்பொருள் பற்றிய 40 வெண்பாக்களைக் கொண்டது. சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானுடன், "கழுமலம்' என்னுமிடத்தில் போரிட்டுத் தோற்றபோது, அவனை சிறைமீட்கப் பாடியதே இவ்விலக்கியம். இந்நூலை இயற்றியவர் பொய்கையார். கவிதையின் ஒரு கூறாகிய "உவமை நலன்' இந்நூலில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

குருதி ஏற்படுத்திய குளம்:
சேரனுக்கும் சோழனுக்கும் போர் நடைபெறுகின்றது. வீரர்களுக்கு வீரத்தையும் எழுச்சியையும் தம் ஒலியால் ஏற்படுத்திய முரசங்கள், மேற்போர்வை கிழிந்து ஒரு பக்கமாகக் கிடக்கின்றன. அந்த முரசங்களின் மேல், "பிறை கவ்வி மலை நடந்ததைப் போன்ற' ஒரு யானை, விழுந்து விடுகிறது. போர்க்களம் முழுவதும் குருதியால் நனைந்து, பெருங் குளமாகவே மாறிவிடுகிறது. செங்குருதி, இங்கும் அங்குமென அலை பாய்ந்து, முரசத்தின் வழியாகச் செல்லுகிறது. இக்காட்சி, எப்படி இருக்கிறது தெரியுமா? கார் காலத்தில் மழை பெய்த பிறகு, செங்குளத்தினது கரையின் கீழ் உள்ள மதகுகள், நீர் உமிழ்தலைப்போல இருப்பதாகப் பொய்கையார் உவமைப்படுத்திப் பாடுகின்றார்.

""ஞாட்பினுள் எஞ்சிய, ஞாலஞ்சேர் யானைக் கீழ்
போர்ப்பில், இடி முரசின் ஊடு, போம் ஒண் குருதி,
கார்ப்பெயல் பெய்தபின், செங்குளக் கோட்டுக் கீழ்
நீர்த்தூம்பு நீர் உமிழ்வ போன்ற புனல் நாடன்
ஆர்த்த மரட்ட களத்து.''

பயன் உவமை:
தொல்காப்பியர், உவமையை வினை, பயன், மெய், உரு என நான்காகப் பிரித்துக் கூறினார். தொல்காப்பியர் வழிநின்று, பொய்கையார் படைத்துக் காட்டும் "பயன் உவமை' பற்றிய காட்சி வருமாறு:
போர்க்களம் எங்கும், குருதியானது வெள்ளமெனப் பாய்ந்தது. அது, பெருங்கடலைப் போலத் தோன்றியது. கருங்கடலையே கண்டு பழகிய கண்கள், அந்தச் செங்கடலைக் கண்டு, சிவந்தன.
கடலிலே உள்ள தோணியையும் அலையையும் போல, குருதி வெள்ளத்திலே பிணங்கள் மிதந்தன; அலைகள் பாய்ந்தன. மலைகள் உருட்டுகின்ற வெள்ளத்தைப் போலப் பரந்த குருதி வெள்ளம், கொல்லப்பட்ட யானைகளை இழுத்துச் சென்றன. இப்படிப்பட்ட குருதி வெள்ளத்தில், தளர்ச்சி அடைந்த வீரர்கள் எவ்வாறு எழுந்து நடக்கிறார்கள் என்பதை நுட்பமாக ஒரு உவமை வழி விளக்குகிறார் பொய்கையார்.
போர்க்களத்தில், நடக்கும் இடமெல்லாம் குருதியால் வழுக்குகிறது. வீரர்கள், தம் கையில் வேல் வைத்திருந்தாலாவது அதைக் கொண்டு ஊன்றுகோலாகப் பயன்படுத்துவர். அதுவோ, கையில் இல்லை. வாளாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தலாம்; அதுவும் கரத்தில் இல்லை. எனவே, வீரர்கள் போர்க்களத்தில் இறந்து கிடக்கும், யானைகளின் கொம்புகளை, ஊன்றுகோலாகக் கொண்டு எழுந்தனராம்!

""ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்
இழுக்கும் களிற்றுக் கோடு, ஊன்றி எழுவார்''

வீரர்கள் தளர்ந்து விழும் இடமெல்லாம், யானைகளின் கொம்புகள் கிடந்தன என்றால், போர்க்களத்தில் எத்தனை யானைகள் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று சிந்திக்க வைக்கவும் அல்லவா இந்த உவமை நமக்கு உதவுகிறது.

உரு தரும் உவமை:
"உரு' என்பதன் அடிப்படையிலும், உவமைகள் தோன்றும் எனக்கூறிய தொல்காப்பியத்தின் இலக்கணத்திற்கு, இலக்கியமாகத் திகழ்கிறது "களவழி நாற்பது'. "உரு' பற்றிய ஓர் உவமையைப் பாருங்கள். போர்க்களத்தில், இறந்துபோன வீரர்களின் உடல்கள் விழுந்து கிடக்கின்றன. அந்த உடல்களில், வேல் பாய்ந்த இடங்களில் எல்லாம் குருதி ஒழுகிக் கொண்டிருக்கிறது. அதைக் காகங்கள் உண்டு களிக்கின்றன. இதனால், காகங்கள் தம் இயல்பான நிறத்தை இழந்தனவாம். சிச்சிலிக் குருவி போன்ற வாயினையும், செம்போத்து போன்ற நிறத்தையும் அவை பெற்றதாக, "உரு' பற்றிய
வண்ண உவமையாகப் படைத்துக் காட்டுகிறார் பொய்கையார்.
உவமைகளில் மற்றொரு வகை "இல்பொருள் உவமை' என்பதாகும். உலகில், இல்லாத ஒரு பொருளை உவமையாகக் கூறுவது இவ்வகையைச் சேர்ந்தது. இவ்வகை உவமைகளையும் கூறியுள்ளார். மலை கலங்கப் பாயும் மலை போல், யானைகள் பாய்தலால், அவற்றின் மீது கட்டப்பெற்ற கொடிகள் மேலே எழுந்து வானத்தைத் துடைப்பது போன்ற செய்கையை ஒத்திருந்ததாகப் பாடுகிறார் பொய்கையார். அப்பாடல் வருமாறு:

""மலை கலங்கப் பாயும் மலைபோல் நிலை கொள்ளாக்
குஞ்சரம் பாயக் கொடியெழுந்து - பொங்குடி
வானம் துடைப்பன போன்ற புனல்நாடன்
மேவாரை அட்ட களத்து''
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com