ஈர நாகரிகம்

பொருள்வயிற் பிரிந்த தலைவன், தலைவியின் குணநலன்களை நினைந்து, விரைந்து திரும்பும் காட்சியை ஓதலாந்தையார் எனும் புலவர் கீழ்க்கண்டவாறு இலக்கியமாக்குகிறார்.
ஈர நாகரிகம்

பொருள்வயிற் பிரிந்த தலைவன், தலைவியின் குணநலன்களை நினைந்து, விரைந்து திரும்பும் காட்சியை ஓதலாந்தையார் எனும் புலவர் கீழ்க்கண்டவாறு இலக்கியமாக்குகிறார்.
"தாம் அன்பு வைத்துள்ளாருடைய அரிய பண்புகளை நினைக்குந்தோறும், தலைவனுக்குக் கொடியனவாய்த் தோன்றிய வழிநடைத் துன்பமெல்லாம் குளிர்ந்தனவாய் உள்ளன' என்கிறார்.

"நெடுங்கழை முளிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெய்ய ஆயின, முன்னே, இனியே
ஒள்நுதல் அரிவையை உள்ளுதொறும்
தண்ணிய ஆயின, சுரத்திடை யாறே' (ஐங்-322)

வெயில் மிக்கிருக்கும்போது மூங்கில் தன் பசுமையை இழந்து, உலர்ந்து கெடுவது இயல்பு. ஞாயிற்றின் வெம்மை கற்களும் பிளந்திடுமாறு காய்கிறது. ஆயினும், பண்பின் மிக்காளான ஒளி பொருந்திய நெற்றியை உடைய தலைவியை நினைக்குந்தொறும் இத்தகைய பாலையும்கூட குளிர்ந்தனவாய் உள்ளன என்கிறான் தலைவன்.
மற்றொரு பாடலில், தலைவனின் கடமையுணர்வு கூறப்படுகிறது. பொருள் தேடச்சென்ற தலைவன், தலைவியின் பண்பு நினைந்து மீண்டனன். அவனுக்குத் தலைவியின் நினைவை ஊட்டியது எது?

"ஈர்ம்பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை
மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன் வந்தனரே தெரிஇழை
அரிவை நின்பண்புதர விரைந்தே' (ஐங்-354)

தன்னிடம் சார்ந்த உயிரினம் எதுவாயினும் அதனை வாட்டி வதக்கி உணக்கும் கொடிய பாலையிலே வாழ்கின்ற ஒரு செந்நாய், ஆடவன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய ஈர நாகரிகத்தைத் தலைவனுக்கு நினைவூட்டுகிறது. அச்செந்நாய் தன் துணையுடன் கூடிய பின், தன் வழியே செல்கிறது; வழியில் அழகிய குட்டியையுடைய பெண்மானைப் பார்க்கிறது. அதை அடித்து உண்ணும் இயல்புடைய செந்நாய், மானின் குட்டியைக்கருதி, அச்செயலைத் தவிர்க்கிறது. விலங்கினங்களும் இத்தகைய ஈர நெஞ்சம் இருப்பதைக் கண்ட தலைவனின் நெஞ்சத்திற்குக் காதலியின் குணங்கள் நினைவில் தோன்ற, தலைவன் விரைந்து திரும்புகிறான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com