குளிரடிக்கும் கோடை!

வடமொழியில் குறிப்பிடத்தகுந்த பெரும் புலவர் காளியின் அருள் பெற்ற காளிதாசர்.
குளிரடிக்கும் கோடை!

வடமொழியில் குறிப்பிடத்தகுந்த பெரும் புலவர் காளியின் அருள் பெற்ற காளிதாசர். இவர் வடமொழி இலக்கியத்தின் கவிச்சக்கரவர்த்தி. "சாகுந்தலம்' என்னும் சாகாவரம் பெற்ற இலக்கியத்தின் தந்தை. அறிவை வில்லென வளைத்துத் தேனை அம்பெனப் பாய்ச்சுவதில் வல்லவர். அதனால் கோடையும் குளிர்கிறது அவரது படைப்பில்.
கோடைகாலம் பொதுவாகவே நெருப்பின் செல்லக் குழந்தை. தனக்கே உரிய படைப்பாற்றலால் கோடையை குளிர வைக்கிறார் காளிதாசர். நிலத்தைப் பாளம் பாளமாகப் பிளந்து வைக்கிறது கோடை. இத்தகைய கொடிய கோடையைப் படம் பிடித்துக்காட்டும் போது காளிதாசரின் இலக்கியப் பேருருவம் அழகிலும் அழகு.
வெய்யிலில் சிக்கிக்கொண்டது நல்ல பாம்பு. தத்தளிக்கிறது; ஓர் அங்குலம் கூட நகர முடியவில்லை; தவிக்கிறது. தன் வாலின் அடிப்பகுதியை ஊன்றி உடல் முழுவதையும் உயர்த்தி படம் எடுத்து நிற்கிறது. நில வெடிப்பின் இடுக்கில் ஒரு தவளை. வெளியேயும் வரமுடியவில்லை;
உள்ளேயும் இருக்க முடியவில்லை. புழுக்கம், மூச்சு முட்டுகிறது.
இந்த வேளையில் படம் எடுத்தாடும் பாம்பின் நிழல்கண்டு வெளியே தாவுகிறது தவளை. நிழலில் அமர்ந்து மகிழ்வுறும் தவளைக்கு அது பாம்பின் நிழலென்று தெரியவில்லை. புழுக்கத்தில் இருந்து விடுபட்டோம் என்று தவளை கண்ணை மூடிக்கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறது.
பாம்பு தவளையைப் பார்க்கிறது. "என்ன துணிச்சல்? என் முன்னே வர அஞ்சும் தவளை என் நிழலில் நிற்கிறதே! வெய்யிலல்லவா என்னை விலங்கிட்டு இருக்கிறது' இந்த எண்ண வோட்டம் பாம்புக்கு.
நிழலில் இன்புற்ற தவளை கண் விழிக்கிறது. எதிரே பாம்பு; உடலெங்கும் நடுக்கம்; வியர்த்துக் கொட்டுகிறது. "ஐய்யய்யோ இவ்வளவு நேரமும் பாம்பின் நிழலிலா நின்றோம்' என்று தவளை அச்சப்படுகிறது. நுணுகிப் பார்க்கின் வேறொரு நுட்பமும் இதனுள்ளே தேனாய்ச் சுரக்கிறது.
தவளை நினைக்கிறது, "எப்படி இருப்பினும் நாம் சாகத்தான் போகிறோம். ஒன்று தீயாய்த் தீண்டும் வெய்யிலால் வருவது; மற்றொன்று பாம்பால் வருவது. எப்படியிருப்பினும் இறப்பு உறுதி. வெய்யிலால் வெந்து சாவதைவிட பாம்பிற்கு இரையாவது மேல். சாகும்போது பிறர்க்குப் பயன்பட்டோம் என்ற மன நிறைவே துறக்கம்' என்ற மன உறுதியோடு "என்னை உணவாக்கிக்கொள்' என்பது போல பாம்பின் கண்களை உற்று நோக்குகிறது தவளை.
பாம்பும் பார்க்கிறது. பாம்பின் கண்களும் தவளையின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கின்றன. பாம்பு தவளையைப் போன்றே நினைக்கிறது. "கண் முன்னே இரை இருக்கிறது. வெளியே வெய்யிலின் வெப்பம்; உள்ளே பசியின் வெப்பம்; இரண்டும் சுடுகின்றன. இப்பொழுது பசியிலிருந்து விடுபட்டு விடலாம். ஆனால், வெய்யில் தன் கொடிய பற்களால் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மென்று தின்று கொண்டிருக்கிறதே! என்ன செய்ய? மரணம் கண்ணெதிரே; பின் எதற்குத் தவளையைக் கொல்ல வேண்டும்; அது போகட்டும் போ. சாகும்போது உயிரைக் கொன்ற பழி நமக்கெதற்கு?' என்ற எண்ணம் பாம்பிற்கு. இப்படி காளிதாசரின் படைப்பை ஆய்ந்து ஆய்ந்து பார்க்க, புதிய புதிய நுட்பங்களை அது தரும் என்பது உறுதி.
காளிதாசர் பெரும்புலவர். அவர் சிந்தனையில் ஊறிய இந்த இலக்கியத் தேன், எளிய பாமர மக்களின் பாடல்களிலும் காணப்படுவதுதான் வியப்பினும் வியப்பு! ஏட்டில் எழுதாக் கவிதைகள் நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பு. தொகுத்தவர் அன்னகாமு. மேலே கண்ட கோடைக்கால வருணனை, இதில் ஒரு கதையோடு பின்னிப் பிணைந்து வருகிறது.
தலைவி, தலைவனோடு உடன்போக்கு மேற்கொள்கிறாள். செல்வந்தர் வீட்டுப் பெண். தாயத்தார் தேடுகிறார்கள். செவிலித்தாய் வழிநெடுக புலம்பிக் கொண்டும், வினவிக் கொண்டும் ஓடுகிறாள். புலம்பும்போதுகூட புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசுகிறாள். வெட்டின பஞ்சை மிதிக்கக் கூசுவாள் என் மகள். அப்படிப்பட்டவள் இந்தப் பாலையை எப்படிக் கடந்தாள்? அன்பானவளாயிற்றே! பண்பு அவள் உடன் பிறப்பாயிற்றே! எப்படி இப்படி வேறு ஒருவனுடன் எங்களை மறந்து ஓடத்துணிந்தாள்? இந்த உலகத்திலேயே பெரிய கள்ளத்தனம் உடையவள் இவள்தானோ? என்றாலும் அவள் என் மகளாயிற்றே! எங்கு சென்றாளோ? என்ன ஆனாளோ? கண்ணீரும் கம்பலையுமாய், வருவோர் போவோரை எல்லாம் வழி
மறித்து அடையாளம் சொல்லிக் கேட்கிறாள்.
ஒரு குழு மட்டும், "நீ சொல்லும் அடையாளம் உள்ள பெண்ணைக் கண்டோம். அவள் ஓர் ஆற்றல்மிக்க மறவனின் கையைப் பிடித்துக்கொண்டு சென்றாள்' என்பதைக் கேட்டு, "எங்கே எங்கே?' துடிக்கிறாள் செவிலித்தாய்.
""கொடிய பாலை நிலம். கோடையின் கொடுமை தாளாமல் பாம்பொன்று வாலை ஊன்றி படமெடுத்து நிற்கிறது. அந்த நிழலிலே எலி வந்து இளைப்பாறுகிறது. அக்காட்சியைப் பாருங்கள், பாருங்கள் என்று தன் காதலனிடம் காட்டிக் காட்டிச் சென்றாள். அதை நாங்கள் கண்டோம். நீங்கள் தேடிச் செல்வதில் பயனில்லை. அவர்கள் சேரிடம் சேர்ந்திருப்பார்கள்.
ஒன்று மட்டும் சொல்வோம். அவர்களை வாழவிடுங்கள். அவளுக்கு அவன் பொருத்தமானவன். அவனது மிடுக்கும் துடிப்பும் அவன் திறமையானவன் என்பதைப் பறைசாற்றின. உன் மகளை வாழ வைப்பான்; கவலையை விடுங்கள்'' என்கின்றனர். இதனைப் பின்வரும் நாட்டுப் புறப்பாடல் படம் பிடித்துக்காட்டுகிறது.

பூ மரம் வச்சவன்
பொன்னாலே சேவகன் பொய்கையிலே
மாமரம் வச்சவன்
தருவான் தருவான் என் மகட்பழியை
வெட்டின பஞ்சை
மிதிக்கக் கூசுவாள் என் மகள்
கல்லாலே கோட்டையும்
காண்டாவனமும் கடந்திட்டாளே!
அருகு புனக்கள்ளி! அன்பா நடக்கள்ளி!
திருகு புனக்கள்ளி! தேசக் கள்ளி
என் மகள் கள்ளி போன திசை காணிகளோ?
.... .... .....
பாம்பு படம் எடுக்க
அந்தப் படத்து நிழலிலே எலி ஒதுங்க
அங்கவ பின்காட்டிப் பின்காட்டிப்
போனதொரு சூட்சமமே!என்ற பாடலைப் பார்க்கும்போது வியப்பும் மகிழ்ச்சியும் மேலிடுகிறது. காளிதாசர் பாம்பு, தவளை என்று சுட்டுகிறார். நாட்டுப்புற பாடல் பாம்பு, எலி என்று படம் பிடிக்கிறது. உணவுப்பொருள் வெவ்வேறு. உண்ணுவது ஒன்றே. இந்த ஒப்பற்ற காட்சியை பாமர மக்களாலும் படம்பிடிக்க முடிந்திருக்கிறதே என்பதுதான் வியப்பு!
காளிதாசர் எழுதிய சாகுந்தலத்திற்குக் காலம் உண்டு. ஆனால், நாட்டுப்புறப்பாடல் வாய்மொழி இலக்கியமாக வழிவழி வருவது. காலம் சுட்ட முடியாது. இப்படப்பிடிப்பு அங்கிருந்து இங்கு வந்ததா? இங்கிருந்து அங்கு சென்றதா? எப்படி இருப்பினும் இனிக்கிறது. கோடைகால வருணனை என்றாலும், உள்ளத்தில் மகிழ்ச்சி குளிரடிக்கிறது. இது இலக்கியக் குளிரடிக்கும் கோடை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com