அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்

மணிவாசகப் பெருந்தகையின், "அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்' என்ற தொடரைப் படித்தபோது, இன்னொரு அருளாளரும் இதே தொடரை வேறொரு நோக்கில் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது.
அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்

மணிவாசகப் பெருந்தகையின், "அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்' என்ற தொடரைப் படித்தபோது, இன்னொரு அருளாளரும் இதே தொடரை வேறொரு நோக்கில் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. மாணிக்கவாசகரின் பாடல் வரிகள் வருமாறு:

"வழங்குகின்றாய்க்கு உன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன்; விக்கினேன், வினையேன் என் விதி இன்மையால்;
தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத்தந்து உய்யக் கொள்ளாய்!
அழுங்குகின்றேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே! (திரு.24: 10)

""என்னை உன் உடைமையாகக் கொண்டவனே! உன்னுடைய திருவருளாகிய அரிய அமுதத்தை இதுகாறும் கண்டறியாத தன்மையினால், அப்படியே இரு கைகளாலும் கிடைக்கும்வரை வாரிக்கொண்டு வாயில் வைத்து விழுங்குகின்றேன்! "ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்னும் பழமொழிக்கு ஏற்ப, என் பக்குவம் இன்மையால் - அவ்வாறு விழுங்கியதால், விக்கல் வந்துவிட்டது! கிடைத்தற்கரிய தேன்போன்ற தண்ணீரைப் பருகித் தந்து நான் தெளிவடையும் பொருட்டு என்னைக் கடைத்தேற்றுவாயாக! மனம் குமைகின்றேன். உன்னை அடைக்கலமாகக் கொண்டேன்; என்னை உய்வித்து அருள்வாயாக!'' என்று சிவபெருமானை வேண்டுகிறார்.
இதேபோன்ற ஒரு கருத்து, சிறிது மாறுபட்டு, ஆனால் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக இருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. நம்மாழ்வார் அருளிய அப்பாசுரம் வருமாறு: 

"வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில்!' என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய, என்னில் முன்னம்
பாரித்து, தான் என்னை முற்றப் பருகினான்;
கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே! (9-6:10)

இதன் பொருளாவது: ""கரிய மேகம் போன்ற காட்கரை என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளிய என் தந்தையே! அடியார் அல்லாதார் நெருங்குதற்கு அரியவனே! "உன்னை நேரில் கண்டால், உன்னை அப்படியே வாரி எடுத்து உன் அழகைப் பருகுவேன்!' என்று பேரார்வம் கொண்ட என்னை, அதற்கும் முன்பாக என்மீது இரக்கம் கொண்டு, என்னை முழுவதும் பருகிவிட்டான் - தன் அடியவனாக ஆக்கிக் கொண்டான்! (திருமால்) என்னே அவன் பெருங்கருணை!''
இவ்விரு பாடல்களையும் ஒப்பிட்டு நோக்கும்பொழுது மணிவாசகர், சிவபெருமானின் திருவருளை விரைவாகப் பருகியதால் விக்கல் ஏற்பட்டு, தான் தடுமாறுவதாகவும், அதனைப் போக்க வேண்டும் என்றும் முறையிடுகின்றார். ஆனால் நம்மாழ்வாரோ, தான் திருமாலை விழுங்க வேண்டும் என்று நினைத்ததற்கு முன்பாகவே, அவன் தன்னை முழுமையாக ஆட்கொண்டு (விழுங்கி விட்டான்) விட்டான்; இஃது எப்படி நிகழ்ந்தது என்று திகைக்கின்றார். இருவரின் பக்தியின் நோக்கும் போக்கும் எண்ணியெண்ணி இன்புறத்தக்கதன்றோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com