இந்த வார கலாரசிகன்

வாரியங்காவல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஐயா ப. முத்துக்குமரன்.

வாரியங்காவல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஐயா ப. முத்துக்குமரன். வள்ளுவப் பேராசானுக்குச் சிலை வைப்பதை இவர் தனது வாழ்நாள் பணியாக சிரமேற்கொண்டார். இதற்காக இவர் நடந்து, கடந்த தூரமும், அதற்காக அலைந்து திரிந்த காலமும் கணக்கிலடங்கா.
பணி ஓய்வு பெறும்போது தனக்குக் கிடைத்த தொகையையும் தனது ஓய்வுக்கால ஊதியத்தையும் சிலை அமைக்கும் பணிக்குச் செலவழித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, 
அவரிடம் படித்த மாணவர்கள் பலரும்கூட அவரது சிலை அமைக்கும் பெரும் பணிக்கு நன்கொடை அளித்து உதவியிருக்கின்றனர். அகவை 84 கடந்தும்கூட தனது லட்சியவெறியில் துளியும் தளராமல் பெரியவர் முத்துக்குமரன் தொடர்ந்து இயங்குவதைப் பார்த்து நான் பலமுறை மலைத்துப் போயிருக்கிறேன்.
ஜெயங்கொண்டம் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் சிறுகளத்தூர் கிராமத்தில் பெரியவர் ப.முத்துக்குமரனால் அமைக்கப்பட்டுள்ளது, மூன்றரை அடி உயர வள்ளுவப் பேராசானின் சிலை. தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறனால் அக்டோபர் 1-ஆம் தேதி இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சிலை அமைத்து முடித்தாலும், பழ. நெடுமாறனால் சிலை திறப்பைப் பெரிய விழாவாக நடத்தித் தனது குறிக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார் ஐயா முத்துக்குமரன். அவரை "தினமணி' வாசகர்கள் சார்பிலும், தமிழன்பர்கள் சார்பிலும் வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறேன்.
சிலை திறப்பு விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை என்கின்ற வருத்தம் அவருக்கும், கலந்துகொள்ள முடியாமல் போயிற்றே என்கிற ஆதங்கம் எனக்கும் வாழ்நாள் குறையாகத் தொடரும். ஆனாலும், சிறுகளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளுவப் பேராசானின் சிலை இருக்கும் காலம் நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் வாழும்.
சிறுகளத்தூர் கிராமத்திற்கு எப்போது போவது, சிலையை எப்போது காண்பது என்கிற எனது பேராவலுக்கு விரைவில் விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்!

ஆகஸ்ட் மாதம் சொந்தம் கல்விச்சோலை அமைப்பின் நிகழ்ச்சிக்காக நான் கும்மிடிப்பூண்டி சென்றிருந்தேன். அப்போது, "தினமணி' நிருபர் ஜான்பிரான்சிஸ், எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்திருக்கும் "அயலகத் தமிழ் இலக்கியம்' என்கிற புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். இந்தத் தொகுப்பில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள பல படைப்பிலக்கியவாதிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச் சிறுகதைகளும், கவிதைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவுக்கு வெளியே பல நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது. இப்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகின் பெரும்பாலான நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. எழுத்தாளர்கள் பலர் சிறுகதை, கவிதை, நாடகங்கள் என்றெல்லாம் தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு உரம் ஊட்டுகிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் இலக்கியத்துக்கு இலங்கை பெரும் பங்காற்றி வந்திருக்கிறது. பெரும்புலவர் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை போன்றவர்களின் பங்களிப்பு அளப்பரியது. 
கடந்த நூற்றாண்டு முதல் இலங்கையின் நவீன தமிழ்ப் படைப்புகளில் சிறுகதைகள் முன்னிலை வகிக்கின்றன. இலங்கையில் மட்டுமல்லாமல் தமிழ் தேசிய மொழியாகத் திகழும் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் பல தமிழ்க் கவிஞர்களும் எழுத்தாளர்களும் இலக்கிய ஆளுமைகளாக வலம் வருகிறார்கள். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் படைப்பிலக்கியவாதிகள் குறித்து தாய்த் 
தமிழகத்தில் அதிகம் தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இலங்கையைச் சேர்ந்த கே.டேனியல், செ.கணேசலிங்கன், டொமினிக் ஜீவா, மாத்தளை சோமு, ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், அ.முத்துலிங்கம், உமாவரதராஜன், அன்டனிஜீவா ஆகியோர் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான எழுத்தாளர்கள். இதேபோல குறிப்பிடத்தக்க மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் தேர்ந்தெடுத்து "அயலகத் தமிழ் இலக்கியம்' என்கிற புத்தகத்தைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் சா.கந்தசாமி. 
சிறுகதைகள் மட்டுமல்லாமல், இந்த மூன்று நாடுகளிலிருந்து குறிப்பிடத்தக்க கவிஞர்களின் கவிதைகளையும் தொகுத்து வழங்கியிருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு. கடைசிக் கவிதையாகச் சேர்க்கப்பட்டிருப்பது கவிஞர் கனிமொழியுடையது. அப்போது அவர் சிங்கப்பூரில் வாழ்ந்த நேரம். அயலகத் தமிழ் இலக்கியம் தாயகத் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டிய காலம் வந்துவிட்டது.

நேற்று கோவையில் விஜயா பதிப்பகத்துக்குச் சென்றிருந்தேன். புதிய புத்தக வரவுகள் எவை, இன்றைய பதிப்புலகத்தின் போக்கு என்ன, புத்தக வாசகர்களின் தேடலும் விருப்பமும் எப்படி இருக்கிறது என்பன குறித்து விஜயா பதிப்பக அதிபர் வேலாயுதம் அண்ணாச்சியுடன் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. செவிக்குணவு கிடைத்ததால் வயிற்றுக்கும் சற்று ஈய வேண்டும் என்கிற உணர்வே இல்லாமல் நேரம் கடந்தது.
விஜயா பதிப்பகத்தில் கண்ணில்பட்ட கவிதைத் தொகுப்பு செல்வேந்திரன் என்பவருடையது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் செல்வேந்திரனால் தொகுக்கப்பட்ட "முடியலத்துவம்' குறித்து அவர் எழுதியிருக்கும் முன்னுரை சுவாரஸ்யமாக இருக்கிறது. பின் நவீனத்துவ கவிஞர்களைக் கேலி செய்து "முடியலத்துவம்' எழுத ஆரம்பித்ததாகத் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் கவிஞர் செல்வேந்திரன். அந்தத் தொகுப்பில் பல கவிதைகள் என்னைக் கவர்ந்தன. அவற்றில் ஒன்று இது:

யுவான்சுவாங்
வந்துபோனது
எல்லோருக்கும்
தெரிகிறது!
பாட்டன் பெயர்தான்
பல பேருக்குத் தெரிவதில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com