புலமைக்கேற்ப பொருளை விரும்பும் பெருஞ்சித்திரனார்!

இன்றைய காலகட்டத்தில் யாரொருவர் செய்கின்ற வேலையும் அவரவரது தகுதிக்கேற்றவையா என்பது சற்று உற்று நோக்கத்தக்கது. தகுதிக்குரிய வேலையை ஒவ்வொரும் பெற்றால் எவ்வித சீர்கேடுமின்றி சமூகம் சீராகச்
புலமைக்கேற்ப பொருளை விரும்பும் பெருஞ்சித்திரனார்!

இன்றைய காலகட்டத்தில் யாரொருவர் செய்கின்ற வேலையும் அவரவரது தகுதிக்கேற்றவையா என்பது சற்று உற்று நோக்கத்தக்கது. தகுதிக்குரிய வேலையை ஒவ்வொரும் பெற்றால் எவ்வித சீர்கேடுமின்றி சமூகம் சீராகச் செல்லும் என்பதற்கு இச்சங்கத் தமிழ்ப் புலவரின் பாடலே நற்சான்றாகும்.
தம் சிந்தனையில் தோன்றிய கருத்துகளை சித்திரமாகப் பாடலில் வடித்தவர் பெருஞ்சித்திரனார் எனும் புலவர். அவர் தமது வறுமை நீங்க மன்னனைப் பார்த்துப் பாடி பரிசில் பெற விழைந்து, அதியமான் ஆண்ட தகடூரைச் சென்றடைந்தார். புலவர் சென்ற வேளையில் அதியமான முக்கியமான பணியில் இருந்ததால் அமைச்சரிடம், "புலவரை வரவேற்று உபசரித்து, பொன், பொருள் கொடுத்து அனுப்புக' என்றான்.
அமைச்சரும் அவ்வாறே செய்ய, இதனை அறிந்த புலவர், "மன்னனைக் கண்டு பரிசில் பெறக் குன்றும் மலையும் கடந்து வந்தேன். மன்னன் என்னை நேரில் காண விரும்பாது, எனது புலமையை அறியாது தரும் பரிசுப் பொருள்களை நான் ஏற்கமாட்டேன்' என்றார்.
இவ்விடத்தில், வேலை செய்யாமலேயே யாராவது ஊதியம் கொடுக்க மாட்டார்களா? என்று அலைபவர்கள், பெருஞ்சித்திரனார் தமது புலமை மேல் கொண்ட பெருமையையும், அப்பெருமையில் கொண்ட நெஞ்சுரத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டும். தமது புலமையை சோதிக்காமல் கொடுத்த பொருளை அவர் வாங்கினாரில்லை. "என்னைக் கண்டு முகமன் கூறி, என் கல்வித்தகுதி அறிந்து கொடுக்கும் பொருள் இதைவிட அளவில் மிகச் சிறியதென இருந்தாலும் அதுவே எனக்கு இனிமை தருவதாகும்' (புறம்.208) என்றார்.
பின்னர், வெளிமான் என்ற சிற்றரசன், வந்தோர்க்கெல்லாம் வாரிவழங்கும் வள்ளல் என்பதைப் புலவர் கேள்வியுற்று அவனைக் காணச் சென்றார். புலவர் சென்ற வேளையில் வெளிமான் இல்லை. அவனுடைய தம்பி இளவெளிமான் ஆட்சி புரிந்திருந்தான். வெளிமான் இறந்துபட்டான் என்பதைக் கேள்வியுற்ற புலவர் மிகவும் வருந்தினார். பின்னர் இளவெளிமானிடம் சென்று தமது வறுமையை எடுத்துரைத்தார். கொடைக்குணம் சிறிதும் இல்லாத இளவெளிமான், புலவரின் புலமை அறியாது ஏதோ சிறிது பொருளைக் கொடுத்தான். 
இதனைக் கண்ட புலவர் தனது நெஞ்சினை நோக்கி, "மனமே! வெளிமான் சிறந்த வள்ளல், புலவர்களுக்குக் கோடைகாலத்து நிழல் போன்றவன், பொய் அறியாதவன், கேள்விஞானம் கொண்டவன் எனக் கேள்வியுற்று அவனைக் காணும் வேட்கையில், பசியுடன் அவனது வாயிலை அடைந்தோம். ஆனால், சோற்றுப் பானையைத் திறந்து பார்த்தால் உள்ளே சோறு இல்லை; அனல் வீசுகிறது; வீரன் மாய்ந்துவிட்டான்; மலையில் திரியும் புலியின் குறியிலிருந்து யானை தப்பிவிட்டது. அதற்காக அப்புலியானது தன் பசிபோக்க எலியை அடித்து உண்ணாது' என தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்து, மேலும் இங்கிருந்து விரைந்து செல்வோம். கடலில் சென்று கலக்கும் ஆற்று நீரைப்போன்ற நிறைந்த செல்வத்தைப் பரிசிலாகக் கொண்டு வருவோம் மனமே உறுதிகொள்! (புறம்.237) என்றார். 
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு வள்ளலாகிய குமணன் தங்கியிருந்த முதிரமலை நோக்கிச் சென்றார். குமணன் முகமலர்ந்து வரவேற்று, புலவரின் தகுதியறிந்து உபசரித்தான். அவனது அன்பில் திளைத்த புலவர் குமணனை வாழ்த்தினார். பின் புலவருக்குப் பல பரிசுப் பொருள்களும் ஏராளமாக வழங்கி, அப்பரிசுப் பொருள்களையெல்லாம் யானைமேல் ஏற்றி அனுப்பிவைத்தான்.
இங்ஙனம் தம் மனை நோக்கி களிறுமேல் வந்த புலவருக்கு இடையில் இளவெளிமான் நினைவு வந்தது. அவனது செய்கை இவரது மனத்தை உறுத்தியது. தம்முடைய தகுதியையும் அதற்கேற்ப தான் பெற்ற பொருளையும் அவனுக்குக் காட்ட நினைத்து, யானையை அவனிருந்த நாடு நோக்கி செலுத்தினார். 
இளவெளிமான் அரண்மனை வாயிலை அடைந்து, யானையை வேண்டுமென்றே அங்கிருந்த கவண் மரத்தில் கட்டினார். (முரசு, கொடி போன்று கவண் மரமும் தூய்மையானதாக தெய்வத்தன்மை பொருந்தியதாகக் கருதப்படுவது) பின்னர், இளவெளிமானைப் பார்த்து, ""இரவலரை அளித்துக் காப்பவன் நீ ஒருவனே அல்லன். இரவலரைக் காப்பவர் இந்த உலகத்தில் இல்லாமற் போகவும் இல்லை. இரப்போர்க்கு உள்ள பெருந்தன்மையை என்னைப் பார்த்து அறிந்து கொள். அதேபோல் அவர் தகுதியும் திறமையும் அறிந்து கொடுக்கும் வள்ளல்கள் இவ்வுலகில் உள்ளனர் என்பதையும் நீ அறிந்து கொள். இங்கு உன்னுடைய கவண்மரம் வருந்துமாறு, கட்டியுள்ள களிறு நான் கொண்டுவந்த பரிசிலாகும், நான் வருகிறேன்'' என்று பெருமிதத்துடன் கூறிச் சென்றார்.
தமது தகுதிக்கேற்ற பொருளையும், புலமைக்கேற்ற மரியாதையையும் பெறுவதிலிருந்த உறுதிப்பாட்டினையும் தமிழ் தம்மைக் காக்கும் என்ற நெஞ்சுரத்தையும் சங்கத் தமிழ்ப் புலவர்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
தகுதிக்கு மீறியதும் வேண்டாம்; தகுதிக்குக் கீழானதும் வேண்டாம். தகுதிக்கேற்ற பொருளைப் பெறுவதே ஒருவனை ஆற்றுப்படுத்தும் என்பதை புறநானூற்றுப் பாடல் வாயிலாக எடுத்துரைத்த பெருஞ்சித்திரனார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆகச் சிறந்த முன்னோடி ஆவார்.

"இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவல உண்மையும் காண்இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி; நின் ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடுநல் யானை எம் பரிசில்
கடுமான் தோன்றல்! செல்வல் யானே!' (புறம்.162) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com