இந்த வார கலாரசிகன்

சிலருடைய மறைவு நமக்குள் வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது. நேற்று முன்தினம் இரவு காலமான முன்னாள் மேயரும் தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சா.கணேசனின் மறைவு, அப்படியொரு
இந்த வார கலாரசிகன்

சிலருடைய மறைவு நமக்குள் வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது. நேற்று முன்தினம் இரவு காலமான முன்னாள் மேயரும் தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சா.கணேசனின் மறைவு, அப்படியொரு வெறுமையை எனக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் தூய்மையான பொதுவாழ்க்கையை விரும்புகிற அனைவருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது.
1980-களின் தொடக்கத்தில் எனக்கு அவர் முன்னாள் மேயராக அறிமுகமானார். தோளில் சிவப்பு சால்வையுடன் மிகவும் எளிமையாக சென்னை தி.நகர் பனகல் பார்க்கில் அவரை முதன்முதலில் சந்தித்தது இப்போதும் பசுமையாக நினைவிலிருக்கிறது. 1989-இல் அவர் தி.நகர் சட்டப்பேரவை உறுப்பினரானபோதும் சரி, அதற்குப் பிறகும் சரி, பழகும் அணுகுமுறையிலோ, வாழ்க்கை முறையிலோ எந்தவித மாற்றங்களும் இல்லாமல் தனது இறுதிக் காலம் வரை தூய்மையான அரசியலுக்கு எடுத்துக்காட்டாக அவரால் வாழ முடிந்தது என்பதுதான் சா.கணேசனின் தனிச்சிறப்பு.
அன்பு, பாசம், மரியாதை என்று எந்தவொரு உறவுக்குள்ளும் அடக்கிவிட முடியாத பரஸ்பர நெருக்கம் எங்கள் இருவருக்கிடையேயும் ஏறத்தாழ 40 ஆண்டுகள் தொடர்ந்தது. பெரியார், அண்ணாவின் திராவிடப் பாசறையில் இருந்து உருவானாலும்கூட சா.கணேசனின் செயல்பாடுகளும் அணுகுமுறையும் அண்ணல் காந்தியடிகளின் உண்மையான தொண்டர்களிடம் மட்டுமே காணப்படும் குணாதிசயங்களுடன் இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. தி.மு.க.வில் இருந்த காந்தியவாதி அவர். பொதுவுடைமை சித்தாந்தத்தில் பற்று கொண்டிருந்ததால்தான் சிவப்பு சால்வையுடன் வலம் வந்தவர்.
வயோதிகம்தான் அவரை நம்மிடமிருந்து பிரித்தது என்றாலும்கூட, நல்ல நண்பராக, நல்ல ஆலோசகராக, நல்ல விமர்சகராக எனக்குத் துணைநின்ற ஒருவர் இனி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாகத்தான் இருக்கிறது.
அரசியலில் நேர்மை, கொண்ட கொள்கையில் பிடிப்பு, பொதுவாழ்வில் தூய்மை என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம். ஆனால், நேரில் வாழ்ந்து காட்டியவர் சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயர் சா.கணேசன். கடைசிவரை தான் தலைவனாக ஏற்றுக்கொண்ட, அண்ணாவின் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்பதைத் தனது வாழ்வியல் கோட்பாடாக நடத்திக்காட்டிய அந்த மாமனிதர் குறித்து நான் பதிவு செய்வதன் மூலம் என் இதயத்தின் பாரத்தை சற்று இறக்கி வைக்கிறேன்.

கா. பாலமுருகன் எழுதிய "நெடுஞ்சாலை வாழ்க்கை' என்கிற புத்தகம் 2016 ஆகஸ்ட் மாதம் விமர்சனத்துக்கு வந்தபோதே அதைப் படிக்க வேண்டும் என்று நான் தனியாக எடுத்து வைத்துவிட்டேன். அதற்குக் காரணம், நெடுஞ்சாலை வாழ்க்கை குறித்து எனக்கும் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது என்பதுதான். கடந்த வாரம் தினமணி கல்விக் கண்காட்சியில் கலந்துகொள்ள ரயிலில் திருச்சி செல்லும்போதுதான் அந்தப் புத்தகத்தைப் படிக்க முடிந்தது.
நெடுஞ்சாலை வாழ்க்கை என்பது ஒருபுறம் சுவாரசியமானது, இன்னொருபுறம் ஆபத்தானது. நெடுஞ்சாலைகளில் மாநிலத்துக்கு மாநிலம் பலநூறு கிலோ மீட்டர்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் வாகன ஓட்டிகளும், அவர்களின் உதவியாளர்களும் (க்ளீனர்கள்) எதிர்கொள்ளும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. 
ஒருபுறம் வழிப்பறிக் கொள்ளையர்கள்; ஊருக்கு ஊர், மாவட்டத்துக்கு மாவட்டம், மாநிலத்துக்கு மாநிலம் மாமூல் வாங்க நெடுஞ்சாலையில் காத்திருக்கும் காவல் துறையினர்; எல்லாவற்றுக்கும் மேலாக ஆங்காங்கே விபத்தில் சிக்கினாலோ, வாகனங்கள் பழுதுபட்டாலோ வனாந்திரத்தில் தவிக்க வேண்டிய நிர்ப்பந்தம். இவற்றுக்கிடையேதான் சரக்கு வாகன ஓட்டிகளின் நெடுஞ்சாலைப் பயணங்கள் தொடர்கின்றன. 
கா.பாலமுருகன் கூறியிருப்பதுபோல, ""நம் நாட்டில் நெடுஞ்சாலையில் கொள்ளைகள் நடப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் கொள்ளை அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் கும்பல்களைத் தடுக்க முடியாத காரணம் என்ன என்பது போலீஸýக்கே வெளிச்சம்.''
"நெடுஞ்சாலை வாழ்க்கை' புத்தகத்தில் இந்தியாவின் முக்கியமான நெடுஞ்சாலைகளில் எல்லாம் சரக்கு வாகனங்களில் பயணித்து அந்த அனுபவங்களைப் புதினம் போல சுவாரசியமாகப் பதிவு செய்திருக்கிறார் கா.பாலமுருகன். ""சொகுசு பஸ்ஸின் இருக்கை, லாரியின் மரப்பலகை அளித்த அந்நியோன்யத்தை அளிக்கவில்லை'' என்கிற பாலமுருகனின் பதிவை நான் மிகவும் ரசித்தேன். புத்தகத்தை அந்த வரிகளுடன் அவர் முடித்திருந்தால் இன்னமும்கூட நன்றாக இருந்திருக்குமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
""உயிருக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லாமல், மொழி தெரியாமல், பிற மாநில நெடுஞ்சாலைகளில் அரை வயிற்றோடு இஞ்சின் மீது அமர்ந்திருக்கும் வெப்ப மனிதர்கள் மீது இருக்கும் வெறுப்பைக் களைவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்'' என்கிறார் கா.பாலமுருகன். அவருடைய நோக்கம் நிச்சயமாக நிறைவேறி இருக்கிறது. 
தேனி மாவட்டம் வட புதுப்பட்டியைச் சேர்ந்த கா.பாலமுருகன் "தீம்தரிகிட', "கணையாழி' ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்து இப்போது மோட்டார் விகடன் இதழில் உதவிப் பொறுப்பாசிரியராக இருக்கிறார் என்று அவரது தன் விவரக்குறிப்பு தெரிவிக்கிறது. அவருடைய எழுத்து நடையும், நேர்த்தியாக சம்பவங்களை முத்துக்கள் கோத்ததுபோல எடுத்துச் செல்லும் உத்தியும், கவனிக்கப்பட வேண்டிய தமிழ் பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.
இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும், இந்தியாவின் எல்லா மாநில முதல்வர்கள், தலைமைச் செயலர்கள், காவல்துறை தலைவர்கள் ஆகியோரையும் படிக்க வைக்க வேண்டும். இது வெறும் நெடுஞ்சாலை வாழ்க்கை குறித்த புத்தகம் அல்ல. இந்திய அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து செய்யப்பட்டிருக்கும் நேரிடைப் பதிவும்கூட!

கிருஷ்ணகிரியில் இருந்து நமது வாசகர் ராஜசிம்மன் என்கிற ராஜகணேசன், "முதியோர் இல்லம்' என்கிற தலைப்பிலான ஒரு கவிதையை அனுப்பித் தந்திருக்கிறார். கடந்த வாரம் கூறியதுபோல, இதுபோன்ற நல்ல கவிதைகளை அனுப்பும்போது அது இன்னாருடைய கவிதை என்பதையும் குறிப்பிட்டு அனுப்பாமல் போவது அந்த எழுத்தாளருக்கு செய்யப்படும் அநீதி. 
இந்தக் கவிதைக்குச் சொந்தக்காரர் இன்னார் என்பதை அவர்கள் கவிதை வெளிவந்த கவிதைத் தொகுப்புடன் அனுப்பித் தந்தால் அதைப் பதிவு செய்து ஆறுதல் அடைவேன். அந்தக் கவிதை இதுதான்:
அது ஒரு மனிதக் காட்சி சாலை
பால் குடித்த மிருகங்கள் வந்து
பார்த்துவிட்டுப் போகின்றன!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com