நான்காம் தமிழ்ச் சங்கம் எது?

நம்முடைய வரலாற்று, பண்பாட்டுப் பெருவெளியில் சங்கம் என்னும் நிறுவனம் சிறப்பானதும் இன்றியமையாததுமான இடத்தினை பெற்றுள்ளது. சங்கம் என்ற சொல் சமணம் சார்ந்ததாகத் தெரிகிறது.
நான்காம் தமிழ்ச் சங்கம் எது?

நம்முடைய வரலாற்று, பண்பாட்டுப் பெருவெளியில் சங்கம் என்னும் நிறுவனம் சிறப்பானதும் இன்றியமையாததுமான இடத்தினை பெற்றுள்ளது. சங்கம் என்ற சொல் சமணம் சார்ந்ததாகத் தெரிகிறது. கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் வச்சிரநந்தி என்ற மன்னன் தோற்றுவித்த திறமிள சங்கம் என்று ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. அடுத்து இறையனார் களவியல் உரையாசிரியர் வட மதுரையிலும், கபாடபுரத்திலும், தென்மதுரையிலும்  அமைந்த மூன்று சங்கங்களைப் பற்றி கூறியுள்ளார்.
நம் தமிழ் அறிஞர்கள் பலர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பேராசிரியர் க.சிவத்தம்பி,  வரலாற்றுப் பேராசிரியர்  கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, வரலாற்று ஆய்வாளர் கே.என்.சிவராஜ பிள்ளை, எஸ்.வையாபுரிபிள்ளை அதை ஏற்க மறுக்கின்றனர்.     ஆனால், இலங்கை பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், ""இக்கருத்து முற்றும் முழுதுமாக வரலாற்று மதிப்பு எதுவும் இல்லாத கற்பனையே என்று கூறும் அறிஞர்களின் வாதங்களில் என்னால் முழுதும் இணக்கம் காட்ட முடியவில்லை'' என்று பதிவு  செய்திருக்கிறார்.
தமிழ் அறிஞர்கள் பலர், ""முச்சங்கங்கள் இருத்தமைக்கான முழுமையான விஞ்ஞான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றே கருதுகின்றனர்.
முச்சங்கங்கள் இருந்தமைக்கான குறிப்புகளை இறையனார் களவியல் பாயிர உரையிலும், தொல்காப்பியதற்கு உரை எழுதிய உரையாசிரியர்களது உரைகளிலும், சில சங்க  நூல்களுக்குரிய  உரைகளிலும் நாம் காணக்கூடியதாக உள்ளன.
பக்தி இலக்கியங்களில் கூட சங்கம் பற்றிய குறிப்புகளை நாம் காணலாம். திருநாவுக்கரசுப் பெருமான் பாடிய திருப்புற்றூர் பதிகத்திலே இறைவனை, நல்ல பாடல்களை இயற்றவல்ல புலவனாய் உருவகித்து, "தருமி' என்பவருக்காகச் சங்கம் ஏறினான் என்ற தொடர் வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழ்ப் புலவர்கள் சங்கம் ஏறி தங்கள் படைப்புகளை அரங்கேற்றம் செய்யும் வழமை முற்காலத்தில் இருந்தமை தெரிய வருகிறது.
முதலாவது சங்கமான தலைச் சங்கத்தைத் தென் மதுரையிலே பாண்டியர்கள் நிறுவி, தமிழை வளர்த்துள்ளார்கள். இதனை நிறுவிய பாண்டிய மன்னன் காய்சினவழுதி கடுங்கோன் என்பவனாவான். தலைச்சங்க காலத்தில் எழுதப்பெற்ற அல்லது அரங்கேற்றப்பட்ட எந்த நூலும் முழுமையாக நமக்குக் கிடைத்தபாடில்லை. இருந்தாலும், தலைச்சங்கக் காலத்தில் எழுந்ததாக இன்று வரை கூறப்பட்டு
வரும் நூல் அகத்திய சூத்திரங்கள்  மட்டுமே. அதிலும் கூட ஒரு சில சூத்திரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
தென்மதுரையை கடல்கொண்ட பின் பஃறுளியாறு, குமரியாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கும் இடையே உள்ள நாடான கபாட
புரத்தில் வெண்டேற்செழியன் முடத்திருமாறன் என்பவன் இடைச்சங்கத்தை நிறுவியவனாவான். இடைச்சங்க காலத்தில் எழுந்த நூல்களில் தொல்காப்பியம் மட்டுமே இன்று நமக்குக் கிடைத்துள்ளது.
கபாடரபுரமும் கடல்கோளினால் அழிய, கூடல் என்கிற மதுரை மாநகரைத் தலைநகரமாக அமைத்து மூன்றாவது தமிழ்ச்சங்கமான கடைச்சங்கத்தை மூன்றாம் முடத்திருமாறன் உக்கிரப் பெருவழுதி என்பவன் உருவாக்கினான். கடைச்சங்கத்தில் எழுந்த நூல்களில் நமக்குக் கிடைத்துள்ளது இன்றைய தொகை நூல்களே ஆகும்.
மேற்கூறிய மூன்று சங்கங்களும் கடல்கோள்களால் அழிந்துவிட்டன என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். இறுதியாக இயங்கிய கடைச்சங்கமானது கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே மறைந்துவிட்டதாக தமிழ் இலக்கிய வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறுகின்றனர். தமிழ்கூறும் நல்லுலகில் முச்சங்கங்களைத் தொடர்ந்து "தமிழ்ச் சங்கம்' போன்றதோர் அமைப்பானது நீண்ட காலத்திற்குக் காணப்படவில்லை என்பதாகவே தெரிகின்றன.
1901ஆம் ஆண்டு வைகாசி மாதம் சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் திரு.பாண்டித்துரைத் தேவர் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் பேசிய பாண்டித்துரை தேவர் ""முச்சங்கங்களில் அன்றைய நாளில் தமிழ் வளர்த்தது போல, இன்றைக்கு நம் தாய்த் தமிழ் மொழியாம் தமிழை வளர்க்கவும், இலக்கியங்களை பாதுகாக்கவும் தமிழ்ச் சங்கம் ஒன்று தேவைப்படுகிறது. இதற்குரிய நிதி அனைத்தையும் என் சொந்த பொறுப்பில் வழங்கி மதுரையில் நான்காவது தமிழ்ச் சங்கம் விரைவில் நிறுவ இருக்கிறேன்'' என்று அறிவித்தார்.
இதுகுறித்து பேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார் தனது "தமிழ்ச் சங்க வரலாறு' என்ற நூலில், ""1901ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி மண்டபத்தில் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களையும் தமிழ்ப் புலவர்களையும் அழைத்து, பேரவை ஒன்றைக் கூட்டி, நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார்'' என்ற பதிவை செய்துள்ளார். ஆக, இன்றைக்கும் பரவலாக தமிழ் அறிஞர்கள் பலரிடத்திலும், தமிழ் இலக்கியப் பதிவுகளிலும் கூட திரு.பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கம் "நான்காவது தமிழ்ச்சங்கம்' என்று வழக்கில் உள்ளதைப் பார்க்க முடிகிறது.
அண்மையில் நான் இலங்கை சென்றிருந்தபோது, இலங்கை தமிழ்ச் சங்கத்திலுள்ள நூலகத்தில் மிகப் பழமையான நூல் ஒன்றினை படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்நூலின் தலைப்பு "யாழ்ப்பாண மன்னன் நிறுவிய தமிழ்ச்சங்கம்' என்ற தலைப்பாகும். அந்நூலாசிரியர் ஞானம் பாலச்சந்திரன். பாண்டித்துரை தேவர் அவர்கள் நிறுவிய தமிழ்ச் சங்கம் 5ஆவது தமிழ்ச் சங்கம் என்று தக்க ஆவணங்களோடு ஆய்வு நூல் ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னரே தமிழ்ச் சங்கம் என்கின்ற அமைப்பு யாழ்ப்பாணத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக பழம்பெரும் நூலான "கைலாய மாலை' என்னும் நூலின் பதிவுகள் உள்ளன. மயில்வாகனப் புலவர் என்பவர் இந்நூலின் ஆசிரியர். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் ஏறக்குறைய 350 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இந்நூலின் 210ஆவது பாடலில் யாழ்ப்பாண 
மன்னரால் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டதாக செய்தி உள்ளது.
"புங்கவனைப் போலப் புவிதிருத்தி யாண்டுவைத்த
சங்கச் சமூகத் தமிழாளன்' (210)
என்று வருகிறது. தமிழ்ச் சங்கத்தினை உருவாக்கி அதன் சமூகமான புலவர் சமூகத்தினையும் தமிழ்க் கலைகளையும் பரிபாலனம் செய்பவன் என்று பொருள்படும். எனவே, இதன் வழி யாழ்ப்பாணத்து மன்னர் தமிழ்ச்சங்கம் ஒன்றினை உருவாக்கியதாக உறுதி செய்யப்படுகிறது. இதனையே பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களான ஆனல்ட் சதாசிவம் பிள்ளை வித்வ சிரோன்மணி சி.கணேச ஐயர், கைலாயபிள்ளை போன்றோர் உறுதி செய்துள்ளனர். இதன்வழி 1897, 1900 இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டதாகத் தெரிகிறது. 
மேலும், ஆ.குமாரசுவாமிப் புலவரின் சரித நூலிலிருந்து, யாழ்ப்பாண மன்னர், தமிழ்ச் சங்கத்தின் தலைவராக அ.குமாரசுவாமி புலவரையும்; சங்கக் காரியதரிசியாக சபாரத்தினம் முதலியாரையும்; உறுப்பினர்களாக ஆ. முத்துத்தம்பி பிள்ளை, ஆறுமுக உபாத்தியாயர், கனக சபாபதி ஐயர், க.சரவண முத்து புலவர் போன்றோர்களையும் நியமித்தார் என்ற பதிவும் அந்நூலில் உள்ளது. 
அதோடு மட்டுமல்லாது யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் அறிஞர்களை மதுரையில் தான் தோற்றுவித்த தமிழ்ச் சங்கத்திலும் உறுப்பினராக இருந்து ஆதரவு தருமாறு  பாண்டித்துரை தேவர் 29-11-1902 -இல் எழுதிய கடிதத்தினையும் நூலாசிரியர் ஆதாரமாகப் பதிவு செய்திருக்கிறார். அக்கடிதம் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் தலைவரான ஆ.குமாரசுவாமி புலவருக்கு எழுதிய 
கடிதமாகும்.

மதுரைத் தமிழ்ச் சங்கம்
29-11-1902

ஐயா,

தாங்கள்  மதுரைச் சங்கத்தின் கல்வியங்கத்தவருள் ஒருவராக அமர்ந்து செந்தமிழ்ப் பாஷாவிருத்திக்கு வேண்டுமெனவற்றைப் புரிவதற்கு மனமுவந்து வரவிடுத்த சம்மதப் பத்திரிகையைக் கண்ணுற்றுப் பெருமகிழ்ச்சி யடைந்தேன். இவ்வாறு அன்புகூர்ந்து மனமுவந்து வாக்குதவிய தங்கட்கு அநேக வந்தனம் அளிக்கின்றேன்.

இங்ஙனம்
பொ.பாண்டித்துரை

யாழ்ப்பாண இராச்சியம், யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளியீடு, பக்கம் 276, பதிப்பாசிரியர் சி.கா.சிற்றம்பலம் என்ற வெளியீட்டில் கீழ்க்காணுமாறு பதிவு உள. 
""குறிப்பாக தமிழை மேலும் அபிவிருத்தி செய்ய முச்சங்கங்கள் அமைத்த தமிழக மூவேந்தர்களுக்குப் பிறகு சுமார் 1010 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரான நல்லூரில் தமிழ்ச் சங்கம் ஒன்று அமைத்து உள்ளூர், வெளியூர் தமிழகப் புலவர்களையும் அறிஞர்களையும் இங்கு அழைத்ததின் விளைவாக இங்கு கல்வி அறிவு பரவிற்று, பல நூல்கள் எழுந்தன. யாழ்ப்பாண மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ச் சங்கமே, மூன்றாவது சங்கமான கடைச்சங்கம் மறைந்தபின் தோன்றிய நான்காவது தமிழ்ச்சங்கம் ஆகும்'' என்ற ஆய்வுக் குறிப்பும் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது.
யாழ்ப்பாண மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் புலவர்கள் பலர் தமிழகத்திலிருந்து ஈழ நாட்டுக்கு வருகை தந்து அங்கேயே தங்கி தமிழ் வளர்த்துள்ளனர். யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் மூத்தத் தமிழ்ச்சங்கம் என்பதும், பல அரிய தமிழ் ஆய்வுகளை அச்சங்கம் நடத்தியிருக்கிறது என்பதும் நிரூபணமான உண்மையாகும்.
4-4-1913-இல் சென்னை அரசாங்கம் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்திடம் ஓர் அகராதியை தொகுத்து வழங்க கேட்டுக் கொண்டது. அந்தக் கடிதத்தில் எஸ்.எஸ்.சாண்ட்லர் என்ற கையொப்பம் உள்ளது. அதன்வழி தமிழக அரசு அ.குமாரசுவாமி புலவர் அவர்கள் மேற்பார்வையிட்டுப் பதிப்பித்த அகராதியினை அரசு ஏற்றுக் கொண்டதாக 7-2-1914-இல் சாண்ட்லர் அவர்களின் ஏற்பு கடிதத்தினை சான்றாகப் பதிவு செய்துள்ளதையும் பார்க்க முடிகிறது.
பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்ச்சங்கத்தை நான்காவது தமிழ்ச் சங்கமாகக் கொள்வதா, இல்லை யாழ்ப்பாணத்தில் மன்னரால் நிறுவப்பட்டதுதான் நான்காம் தமிழ்ச் சங்கம் என்று கொள்வதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com