நல்வெள்ளியாரின் காதல் நாடகம்!

தினைப் புனத்தையே அழகு செய்யும் தேவதையர் இருவர்! தலைவியும் தோழியும் தனித்துக் குலவி வந்த இனிக்கும் பொழுது! பின்புறம் வந்த தலைவன் தென்பட்டுவிட்டான்
நல்வெள்ளியாரின் காதல் நாடகம்!

தினைப் புனத்தையே அழகு செய்யும் தேவதையர் இருவர்! தலைவியும் தோழியும் தனித்துக் குலவி வந்த இனிக்கும் பொழுது! பின்புறம் வந்த தலைவன் தென்பட்டுவிட்டான் அவர்தம் சேல்விழிக்கும் வேல்விழிக்கும்! தலைவிக்குத் தலைவனை நகையாடிப் பார்க்க வேண்டுமென்ற நல்லாசை வந்தது. அந்த ஆசையை குறிஞ்சித் திணை பாடலில், அற்புதக் காட்சியாக அமைத்துள்ளார் பெண்பாற் புலவர் நல்வெள்ளியார்! அகநானூறு, களிற்று யானை நிரை முப்பத்திரண்டாவது 
பாடலாக தமிழ்ச் சிறப்பை முன் மொழிந்து நிற்கிறது.
நெருநல் எல்லை ஏனல் தோன்றித்,
திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றிச்
சிறுதினைப் படுகிளி கடீஇயர், பல்மாண்
குளிர்கொள் தட்டை மதன் இல புடையாச்
சூரர மகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ? எம் அணங்கியோய், உண்குஎன
சிறுபுறம் கவையினனாக அதற்கொண்டு
இகுபெயல் மண்ணின், அஞர் உற்ற என்
உள்அவன் அறிதல், அஞ்சி உள்இல்
கடிய கூறி கைபிணி விடாஅ
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற
என்உரத் தகைமையில் பெயர்த்து பிறிதுஎன் வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து
இனந்தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ
சாய்இறைப் பணைத்தோள் கிழமை தனக்கே
மாசுஇன் றாதலும் அறியான் ஏசற்று
என்குறைப் புறனிலை முயலும்
அண்கண் ஆளனை நகுகம் யாமே!
தலைவி சொல்கிறாள்: தோழி! நான் சொல்வதைக் கேட்பாயா?
தோழி சொல்கிறாள்: நீ சொல்வதைக் கேட்கத்தானே துணையாக வந்திருக்கிறேன்; சொல்
அணிமணிகளை அவன் அணிந்திருந்தான்; ஓரரசர் செல்வன் போல் உடைகளும் உடுத்தியிருந்தான்! ஆனால், ஓர் ஏழை இரவலன் போல் எளிய சொற்களால் பணிவான தன்மையோடு பக்குவமாகப் பேசினான். நெஞ்சை யள்ளுகின்ற நீங்கள் யாரோ? என்று கேட்டானே நினைவில்லையா உனக்கு?
குளிர் என்னும் கிளிவிரட்டு கருவிகள் வேறு கையிலே வைத்துள்ளீர்கள்! இந்தத் தினைப் புனத்தைக் காவல் செய்யும் சித்திரப் பாவைகளா? இல்லை, வானத்தை விட்டு இறங்கி வந்து வழி தெரியாமல் நின்றிருக்கும் சூரரமகளிரா? (தெய்வப் பெண்கள்) சொல்லுங்கள் என்றான்.
வெல்லச் சிரிப்போடு மெல்ல அருகில் வந்தான். பக்கத்தில் வந்தவன் பக்கென்று கையைப் பிடித்தான்; வெட்கத்தில் தவித்த நான் வெடுக்கென்று விடுபட்டேன். உடன்படும் உள்ளத்தை அவன் அறியக்கூடாதென்று நான் சடக்கென்று தள்ளிவிட்டதை ஏற்காத இதயம் ஏசியது என்னை! நித்தம் மழை பெய்யப்பெற்ற நிலம் போல நெஞ்சம் நெகிழ்ந்தது. அஞ்சிய மான் போல அவன் அணைப்பிலிருந்து விலகிய என் வன்மையைக் கண்டு கூச்சங் கொண்டு ஆர்வத்தை உள்ளடக்கியவனானான்; பிற யானைகளால் ஒதுக்கப்பெற்ற காட்டுக் களிறு போலப் பேதுற்று நின்றான். எப்போது அவன் வந்தாலும் அப்போதும் இந்த நிலைதான் ஏற்படும் என்பதை இப்போதாவது அறிவானோ என்னவோ?
அன்புத் தோழியே! ஒன்றை நீ அறிந்து கொள்வாய். இந்தத் தொடிவளைத் தோளைத் தழுவுகின்ற உரிமை அவன் ஒருவனுக்கே உண்டு! என்னால் பெறவும் தரவும் ஆகும் இன்பத்திற்கு என்னிடம் பிச்சை பெற முயலுதல் போலப் பெரிதும் ஏங்கி நிற்கிறான். அவன் வரட்டும்! பகையோடிப் புறமுதுகு காட்ட வைப்பனை நாம் நகையாடிப் பகடி செய்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com