அன்னையைப் போற்றிய அருளாளர்கள்!

தாயுள்ளம் வேண்டும், தாயுள்ளம் வேண்டும்' என்னும் குரலை அடிக்கடி கேட்கிறோம். அது என்ன தாயுள்ளம்? பக்தி இலக்கியங்களில் அது எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.
அன்னையைப் போற்றிய அருளாளர்கள்!

தாயுள்ளம் வேண்டும், தாயுள்ளம் வேண்டும்' என்னும் குரலை அடிக்கடி கேட்கிறோம். அது என்ன தாயுள்ளம்? பக்தி இலக்கியங்களில் அது எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காண்போம். அருளாளர்கள் பலர் தம்முடைய பாக்களில் பல இடங்களில் தாய்மையைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். இறைவனை அம்மையப்பராகவே கண்டு களித்துள்ளனர். இறைவனின் பெருங்கருணையாகிய திருவருளே தாயாக (அம்மை) நம்மைத் தாங்குகிறது என்பது தோத்திர, சாத்திரக் கருத்துகள் கூறும் உண்மை.
முனிவர்கள், துறவிகள், ஞானிகள், சித்தர்கள் எனப் பலரும் முற்றும் துறந்த முனிவர்களாகத் திகழ்ந்தாலும், அவர்களால் தாய்ப் பாசத்தை மட்டும் துறக்க முடியாமல் தவித்திருக்கின்றனர் என்பதைப் பாடல்கள் பல எடுத்துரைக்கின்றன. 
தாய் என்றால் "முதன்மை', தாயகம் என்றால் "அடைக்கலம்', தாயம் என்றால் "மேன்மை' எனப் பொருள்கள் உண்டு.

"தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே!
தாயவன் உலகுக்குத்தன் ஒப்பில்லாத தூயவன்'

என்கிறார் திருஞானசம்பந்தர்.

"தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்ப்
பேயேனையும் ஆண்ட பெருந்தகை'

என்று பெருமிதத்துடன் கூறுகிறார் திருநாவுக்கரசர். 

"தாயவனாய்த் தந்தையாகிச் சாதல் 
பிறத்தல் இன்றிப்
போயகலா மைந்தன் பொன்னடிக்கு 
என்னைப் பொருந்தவைத்த
வேயவனார் வெண்ணெய்நல்லூர் வைத்து 
என்னை ஆளுங்கொண்ட
நாயகனார்க் கிடமாவது நம் திருநாவலூரே!'

என்று, திருவெண்ணெய் நல்லூரில் தம்மை ஆட்கொண்ட இறைவனின் திருவருளை (அம்மை) எண்ணியபோது, சுந்தரரின் மனம் இப்படிப் பாடுகிறது.
உயிரும் இறைவனும் தம்மை மறந்த நிலையில், தாயும் சேயுமாகக் கலந்து கூடிச் சிறக்கின்றன என்பதை நெஞ்சம் நெகிழ்ந்து பாடியுள்ளார் மாணிக்கவாசகர். ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் அம்மையின் திருவருளைப் போற்றிப் பாடியுள்ளார்.

"தாயிற் சிறந்த தயாவான தத்துவனே' 
"தாதாய் மூவேழ் உலகுக்கும் தாயே'
"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே'
"அம்மை எனக்கருளியவாறு யார்பெறுவார் அச்சோவே!'

பட்டினத்தார், தாயுமானவர் போன்ற அருளாளர்களும் தாய்மையைப் போற்றியுள்ளனர்.
"தாமரைக்கண் கொண்டவனே.. தளிர் நடை பயின்று, மண்ணில் செம்பொடி ஆடி விளையாடி என் மார்பில் தவழும் பேறு எனக்குக் கிட்டிலை அந்தோ!' என்று உருகும் தாயுள்ளத்தைக் குலசேகர ஆழ்வார் பாசுரத்தில் காணலாம்.

"தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா
தவழ்ந்தெழுந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணில் செம்பொடியாடி வந்து என்றன்
மார்பில் மன்றிடப் பெற்றிலேன் அந்தோ!'

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'
"தாயிற் சிறந்த கோயிலும் இல்லை'
"தேரோடு போச்சுது திருநாள்
தாயோடு போச்சுது பிறந்த வீடு'

என்பன போன்ற பழமொழிகள் அனைத்தும் தாயின் பெருமை பேசும் மொழிகளாகும்.
தாம் பட்டினி கிடந்தாலும் தம் குழந்தைகளின் பசியை ஆற்றும் தாய்மையின் ஒளிக்கீற்றைத் திருக்குறளில் பல அதிகாரிங்களில் காணலாம்.
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்தத் "தாய்மை உணர்வு' மேலோங்கினால், தரணியில் நன்மையே விளையும்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com