விளையாடத் தம்பியொன்று வேண்டுமென்று அழுதாயோ ?

இனிப்பிலும், இலக்கிய நயத்திலும், கற்பனைத் திறனிலும் நாட்டுப்புறப் பாடலுக்கென்று ஒரு தனியிடமுண்டு. அனைத்திலும் உச்சமிசை வைத்து எண்ணப்படும் இடத்தில் இருப்பது தாலாட்டுப் பாட்டு.
விளையாடத் தம்பியொன்று வேண்டுமென்று அழுதாயோ ?

இனிப்பிலும், இலக்கிய நயத்திலும், கற்பனைத் திறனிலும் நாட்டுப்புறப் பாடலுக்கென்று ஒரு தனியிடமுண்டு. அனைத்திலும் உச்சமிசை வைத்து எண்ணப்படும் இடத்தில் இருப்பது தாலாட்டுப் பாட்டு.

சித்திரைப் பூந்தொட்டிலிலே குழந்தை உறங்குகின்றான். அதைப் பயன்படுத்திக்கொண்டு தாய், வீட்டுப் பணிகளில் ஈடுபடுகின்றாள். எந்த வேலையையும் அவளால் சரியாகச் செய்ய முடியவில்லை. அவள் எண்ணமெல்லாம் பூவைச் சுற்றும் வண்டென குழந்தையைச் சுற்றியே மொய்க்கிறது.

குழந்தை அழவில்லையே! ஏன்? ஏதாவது ஆகியிருக்குமோ? அவள் மனம் தடுமாறுகிறது. கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கின்றாள். அதைக் குவலையில் ஊற்றாமல் தரையில் ஊற்றுகின்றாள். குழந்தை அழும் ஓசை! திடுக்கிடுகின்றாள். அழுகுரல் அவளைப் பிடித்திழுக்கிறது. "முத்தால தொட்டிலிலே மோதியிருப்பானோ? ஏதாவது கடித்திருக்குமோ?  யாராவது அடித்திருப்பாரோ?' என்ற எண்ணவோட்டத்தில் ஓர் அடியைக் கிணற்றிலும் மறு அடியைக் குழந்தையிடமும் வைக்கின்றாள்.

குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகின்றாள்.  குழந்தை அடம் பிடிக்கிறது. "சீச்சி... இப்படி அழுகிறதே!'வீட்டுப் பெரியவர்கள் எரிச்சலில் இரைகின்றார்கள். குழந்தையின் அடம் மற்றவர்களுக்குத் துன்பம். தாய்க்கு மட்டும் குழந்தை எது செய்தாலும் இன்பம். 

குழந்தை அழுதால் தொண்டை வலிக்குமே! நா வரண்டுவிடுமே! இப்படி வம்பு செய்ததில்லையே! இன்று மட்டும் ஏன் இப்படி? யாராவது அடித்திருப்பாரோ? ஆமாம். அடித்துத்தான் இருப்பார்கள். "அடித்தாரை ஆக்கினைகள் செய்ய வேண்டும்' என்று பொய்க்கோவம் காட்டுகின்றாள். அதுவே ஒரு பாட்டாக மலர்ந்து தேனை வாரிவாரி இறைக்கின்றது.

கொம்புக்  கனியே !
கோதுபடா  மாங்கனியே !
வம்புக்   கழுகாதே !  -  கனி
வாயெல்லாம்  தேனூற !

என்று தொடங்குகிறாள். குழந்தை "கொம்புக் கனியாம்!' உச்சியில் பழுத்த பழம். பெறுவதென்றால் முயற்சி வேண்டும். அதைப் போன்று உச்சியில் வைத்து எண்ணத் தகுந்தவன். பெறுவதற்கரிய உயர் நலங்கள் வாய்க்கப் பெற்றவன். அதனால் அவன் கொம்புக்கனி!

"கோதுபடா மாங்கனியே!' என்றது ஏன்? சில கனிகளைக் கடித்து உண்ணும்போது, "நார்' பல்லில்கூட சிக்கிக் கொள்ளும். அந்"நார்' பல்லில் மீசை முளைத்ததுவோ என்ற தோற்றத்தையும் காட்டும். அதில் சுவையும் அதிகம். அதனால் பெருவிருப்பும் அதன்மேல் நமக்கிருக்கும். அதைப் போன்று எண்ணத்தில் இனிப்பும் உள்ளத்தில் பெருவிருப்பும் அவனாகவே இருப்பதால் அவன் "கோதுபடா மாங்கனி.'

இன்று வம்புக் கழுகின்றான். அழும்போது எச்சில் ஊறும்; அது இயற்கை. மற்றவர்களுக்கு அது எச்சில்; அவளுக்கு அது தேன். உமிழ்நீர் தேனைப் போன்று நலம் சேர்ப்பது; செரிமானத்திற்குரியது. வாய் கனியென்றால் அதில் தேன்தானே சுரக்கும். உமிழ்நீரைத் தேனாக உருவகம் செய்தது நுட்பம்.
குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறது. அடித்தவர்களைத் தண்டித்தால்தான் குழந்தை சமாதானம் ஆகும் போலிருக்கிறது. அதனால், அடித்தவர்கள் யார் யாராக இருப்பர் என்று அவள் பட்டியலிடுகின்றாள். அவர்களே குழந்தையை அடிப்பதற்கு உரிமை உடையவர்கள் என்ற உண்மையும் இதன்வழி உணர்த்தப்படுகிறது.

பாட்டி  அடிச்சாரோ?
என்னம்மா  -  உன்
பாட்டி  அடிச்சாரோ?
பால்வார்க்கும்  சங்காலே!
பாட்டி  அடிச்சாரோ?
அப்பம்மா  - உன்
பாட்டி  அடிச்சாரோ?
பால்கடையும்  மத்தாலே !

அம்மாவைப் பெற்ற அம்மா (பாட்டி) அடித்தால், அது பால் வார்க்கும் சங்கு. உருவில் சிறியது; மெதுவாகத்தான் அடிப்பார்; அது வலிக்காது. நாள்தோறும் பால் வார்ப்பவர். அந்த உரிமையும் அன்பும் தன் தாய்க்கே உரியது என்பதை அவள் சொல்லும் வகை அழகு.

அப்பாவின் அம்மா எதனால் அடித்திருப்பார்? பால் கடையும் மத்து. மத்தால் அடித்தால் வலிக்குமா? வலிக்காதா? வலிக்கும்; மத்தால் அடித்தால் அடி வேகமாகவும் விழும். அதனால்தான் குழந்தை இப்படி அழுகிறதோ? தன் தாய் அடித்தால் பால் வார்க்கும் சங்கு; மாமி அடித்தால் பால் கடையும் மத்து. மாமியைவிடத் தன் தாய்க்கே குழந்தையிடத்து அன்பும், பற்றும் அதிகம் என்பதன் வேறுபாடு மிக நுட்பமாகக் கையாளப் பட்டிருப்பதைப் பாராட்டலாம்.
அன்னகாமு தொகுத்த நூலில் மேற்கண்ட பதிவுக்குப் பதிலாக, " பாட்டி அடிச்சாரோ?/ பால் வார்க்கும்  கையாலே! என்று மட்டும் பொதுவாகக் காட்டப்பட்டிருக்கிறது. இரண்டு பாட்டிகளுக்கும் உரிய வேறுபாட்டைக் காட்டும் வரிகள் செவி வழியாகச் சேர்ந்தவையாக இருந்தாலும் இனிக்கிறது.

மேலும்,  "மாமன் அடிச்சாரோ, அத்தை அடிச்சாரோ,  அண்ணன் அடிச்சாரோ என்று குற்றால அருவியெனக் குதித்துவரும் தாலாட்டைத் தொடர்கின்றாள்.

தாலாட்டுப் பாடிக் கொண்டிருக்கும்பொழுதே, வெளியில் சென்ற கணவன் வீட்டுக்கு வந்துவிடுகிறான். அவள் பாடலின் உட்பொருளை அவனால் உணர முடிகிறது. தன் உறவு பழிக்கப்படுவதும், மனைவி உறவு போற்றப்படுவதும் கண்டு, அவனது முகத்தில் ஒருவித இறுக்கம். அதையும் அவள் கவனித்து விடுகின்றாள். மடைமாற்றம் செய்ய பாடலின் திசையை மாற்றுகின்றாள். அவள் அறிவுக்கூர்மை அன்பிற்கு வழிகாட்டுகிறது.

"விளையாடத்  தம்பியொன்று
வேண்டுமென்று அழுதாயோ?'

என்ற வரிகளைப் பாடிக்கொண்டே கணவனைப் பார்க்கின்றாள்; அவனும் பார்க்கின்றான். அவளது அறிவும் அன்பும் கூடலுக்கான நாளைக் குறிக்க அனுமதிக்கின்றன. கணவனின் மன இறுக்கம் காற்றில் கலந்த கற்பூரமெனக் கரைக்கின்றது. அவனையும் சேர்த்துக் கரைத்தது அவளின் அன்பாற்றல்.

நாட்டுப்புறப் பாடலின் ஒவ்வொரு சொல்லும் சிலம்புக்குள் உறையும் மாணிக்கப்பரல்கள். ஆழ்ந்து அறியும் திறனுக்கேற்ப "முத்துக் குளிக்கலாம்' என்பது மட்டும் உறுதி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com