நற்றிணை உணர்த்தும் நங்கையர் மாண்பு!

பெற்றோர் உடன்படாததால் பெண்ணவள் பிரியமானவனுடன்  சென்று காதலனின் ஊரார்முன் திருமணம் செய்து கொள்கிறாள்.
நற்றிணை உணர்த்தும் நங்கையர் மாண்பு!

பெற்றோர் உடன்படாததால் பெண்ணவள் பிரியமானவனுடன்  சென்று காதலனின் ஊரார்முன் திருமணம் செய்து கொள்கிறாள். செல்வச் செழிப்பு பொலிந்து கொண்டிருந்த புக்ககத்துள் வறுமை எவ்வாறோ வந்து நுழைந்தது. ஒரு வேளை விட்டு ஒரு வேளை உணவுண்ணும் நிலை உண்டாயிற்று. அப்போதும் அந்த அழகு மகள் விரும்பிய போதெல்லாம் விருந்துண்ணும் தன் தந்தை வீட்டைத் தான் நினைத்தாளில்லை! கணவன் இல்லமே அவளுக்குக் கற்பகச் சோலையாற்று.
விறலி ஒருத்தியின் மூலம் இந்தச் செய்தியை நற்றாய் அறிந்தாள். மகளைக் காணும் ஆசை மண்டியது அவளுக்கு. வண்டியைப் பூட்டச் செய்து மகள் வீட்டுக்கு வந்தாள்! 
பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள் தன் தாயைப் பார்த்தாள்; விழிகள் இரண்டும் வழியும் அருவிகள் ஆயின! தாயோ தத்தளிப்பில் தவித்திருந்தாள். மகளையே பார்த்து மரமான தாய்க்குள் அன்றொரு நாள் நினைவு கண்முன் படமாக 
ஓடியது. பொன்னால் செய்த புதுக்குவளை. அதிலே காய்ச்சிய ஆவின்பால் கமழும் தேன் சேர்ந்த கலவை அமிழ்தம். ஒரு கையில் பாற்குவளை, மற்றொரு கையில் மலர்ச்சரம் நுனியில் சுற்றிய சிறிய கோல் கொண்டு, பால் அருந்துமாறு மகளைப் பலமுறை செவிலி வேண்டினாள். தெளிவான முத்துப் பரல்கள் மோதி ஒலிக்க, அந்தச் சிறுவிளையாட்டி "பால் அருந்தேன்' என்று அங்குமிங்கும் ஓடினாள்.
துள்ளித் துள்ளி ஓடிய புள்ளிமான் குட்டியைத் துரத்தித் தோற்றுப்போனாள் திரைமிகு மேனி செவிலித் தாய்.
தன்னிலைக்கு வந்த 
நற்றாய்  தான் வருந்திய நிலையிலும் மகளின் வல்லமை எண்ணி மனத்தால் அவளைப் பாராட்டினாள்! தாய் கண்ணீர் ததும்ப மகளைத் தழுவினாள். "அம்மா!' என்றழைத்துத் தாயை அணைத்துக் கொண்டாள் ஆசை மகள்.
தாய் பேசினாள். ""மகளே நான் கூறுவதை மறுக்காமல் ஏற்றுக் கொள்வாயா?''
தாயின் முகத்தை மலர்ச் சிரிப்போடு பார்த்தாள் மகள்.
""தாயே! இந்த இடர்வாழ்க்கை ஏன்? என்னோடு வந்துவிடு என்று சொல்லாமல் வேறு எதைக் கூறினாலும் ஏற்றுக் கொள்கிறேன்'' என்றாள் மகள்.
""ஏனம்மா?''  என்றாள் தாய்.
""தந்தையார் வீட்டில் வாழையிலை போட்டு, வகை வகையாய் உண்ணலாம். ஆனால்,  ஊர் "வாழாவெட்டி' என்ற பெயரை அல்லவா வழங்கிவிடும். வேண்டாம் தாயே! இங்கே பசியால் வாடினாலும் பழிப்பில்லாமல் வாழ்கின்றேன். வறுமையோடு வசிக்கவில்லை பெருமையோடு வாழ்கிறேன். கணவனது வருவாய்க்குள் கண்ணியமாக வாழ்வதுதானே காதல் மனைவியின் கடமை என்பதைக் கற்றுக் கொடுத்தது நீங்கள்தனே தாயே! போற்றும் இந்தத் தமிழ் நெறியால் புவியே ஒரு பூஞ்சோலையாகும் என்று போதித்ததும் நீங்களல்லவா? இந்த அறிவையும், ஒழுக்கத்தையும் சிறுவிளையாட்டியாயிருந்த நீ எவ்வாறு பெற்றாய்? என்று கேட்டீர்கள். பாலை மட்டும் ஊட்டி என்னை வளர்க்கவில்லையே... பண்பாட்டையும்தானே சேர்த்துக் கொடுத்து வளர்த்துள்ளீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்'' என்றாள்.
""அருமை மகளே! நீ பிறந்த வீட்டு அடையா நெடுங்கதவம் உன்னை அழைத்துக் கொண்டுதான் ஆவலோடு காத்திருக்கும்,'' என்றுரைத்த தாய் மகளிடம் பிரியா விடை பெற்றாள்.
புலவர் போதனார் இயற்றிய பாடல் இது.
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண் என்று ஓக்குபு பிழைப்பத் தெண்நீர்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரிமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே!     (நற்.110)
பாடல் உணர்த்தும் பண்பாடு:
பூவையர் எல்லாம் போற்ற வேண்டிய பொன்னான கருத்து. வளையில் பாம்பாக வசிப்பவரை வாழ வைக்கும் வளர்தமிழ்த் தத்துவம். வயிற்றுக்குப் போடுவதே வாழ்வென்று நினைப்பவர்க்கு மனித வாழ்வின் மகத்துவத்தை உணர்த்தும் பாடல். காதலைக் காயப் படுத்தும் கயமை ஒழியப்  போதனாரின் போதனை. மானமிகு மங்கையர் வாழ்வின் மாண்புணர்த்தும் மணித்தமிழ்ப் பாடல்.
இப்பாடலில் "சிறுவிளையாட்டி' என்னும் சொல்லைப் புலவர் ஆக்கி அறிமுகப்படுத்துகின்றார். சிறுவிளையாட்டு என்னும் பெயர்ச் சொல்லோடு பெயரீற்று "இகரம்' விகுதி சேர்ந்து பெண்ணுக்குப் பெயராகிப் பேரழகு பெறுகிறது, மதுகை - மனத்தின் பெருமிதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com