ஊருக்குள் இளைத்தவர்கள்

பொதுவாகக் கிராமங்களில் சாகுபடித் தொழில் செய்வோரும் அவர்களுக்குத் துணையாகப் பிற தொழில் செய்வோரும் வாழ்வார்கள். பார்ப்பனர், வாணிபம் செய்வோர், வண்ணார், முடி திருத்துவோர், குயவர், தச்சர், கொல்லர்
ஊருக்குள் இளைத்தவர்கள்

பொதுவாகக் கிராமங்களில் சாகுபடித் தொழில் செய்வோரும் அவர்களுக்குத் துணையாகப் பிற தொழில் செய்வோரும் வாழ்வார்கள். பார்ப்பனர், வாணிபம் செய்வோர், வண்ணார், முடி திருத்துவோர், குயவர், தச்சர், கொல்லர், குடிவேலை செய்வோர் எனப் பலரும் சாகுபடித் தொழில் செய்வோரைச் சார்ந்தே இருப்பார்கள். இணக்கமாக வாழ்ந்தாலும் முரண்பாடும் வந்துபோகும்.
இன வேறுபாடு இல்லாமல் சகுனம் பார்த்துக் கொள்வார்கள். "எனக்கு முன்னால் வந்தே; போன காரியம் கெட்டுப்போச்சு' என்பார் நிலக்கிழார். "ஒங்க நேரம் என்னக் கொண்டாந்து இங்க விட்டிருக்கு' என்பார் தொழிலாளி. இப்படிப் பதில் கூறுவதை ஏழைக் குறும்பு என்பார்கள்.
மாடு வாங்கி, விற்று வாணிபம் செய்யும் ஒருவர் பல எருமை மாடுகளை வாங்கித் தம் ஊருக்கு ஓட்டிப்போகிறார். நீண்ட தூரம் செல்லவேண்டி இருப்பதால் மேய்த்தும், ஓய்வு கொடுத்தும்  ஓட்டிக்கொண்டு போகிறார்.
ஓய்வெடுத்த மாடுகளை ஒரு பெரிய ஆற்றின் குறுக்காக ஓட்டிச் செல்லும்போது, எங்கோ பெய்த மழை வெள்ளத்தால் மாடுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன. மாட்டு வாணிபம் செய்பவர் தப்பிப் பிழைத்து, சோகத்தோடு தன் ஊருக்குப் போய்விட்டார்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எருமைகள் அனைத்தும் செத்து,  நாறி,  ஓர் ஊரின் ஓரமாக ஒதுங்கிவிட்டன. தண்ணீர் தேங்கும் பகுதி என்பதால், ஒதுங்கிய இடத்தைவிட்டு மிதந்து ஆற்றோடு போக முடியவில்லை.
ஊருக்குள் நாற்றம் தாங்க முடியவில்லை. மூக்கைப் பிடித்துக் கொண்டு மிதக்கும் எருமைகளைப் பார்க்கின்றார்களே தவிர, அவற்றை ஆற்றின் போக்கில் தள்ளிவிடவோ, எடுத்து அடக்கம் செய்யவோ யாரும் முன்வரவில்லை.
"ஊரில் எந்தெந்த காரியத்தை யார் யார் செய்ய வேண்டும் என்பதை முன்னோர் எழுதிவைத்துள்ள அடங்கலைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்' என ஊர்ப் பெரியவர் ஒருவர் கூறுகின்றார்.
ஊôர்க் கணக்கரை அழைத்து வர ஆள் அனுப்புகின்றார்கள். அவரும் உடனடியாக ஊர்ச்சபைக்கு வருகின்றார். பெரியோர்கள் கணக்கரிடம் செய்தியைக் கூறுகின்றனர். செய்தியை அறிந்த கணக்கரும் தாமதம் செய்யாமல் தன் இல்லத்திற்குச் செல்கின்றார்.
ஊர் தொடர்பாக எழுதி வைக்கப்பட்டுள்ள சுவடியை எடுத்துக் கொண்டு கணக்கார் ஊர்ச் சபைக்கு வருகின்றார். ஒவ்வொன்றாகப் புரட்டுகின்றார். ஓர் ஏட்டை எடுக்கின்றார். "கவனமாகக் கூறுகின்றேன்' என்னும் பொருள்பட,  "கண்ணுறீஇக் கழறுகின்றேன்' என்று ஓலைச் சுவடியைப் படிக்கின்றார்.
"காட்டு எருமுட்டை பொறுக்கி
    மட்கலஞ் சுட்ட புகையான்
மேற்கே மேகந் தோன்றி
    மின்னி இடித்து மழை பொழிந்து
யாற்றில் நீத்தம் பெருகி
    அடித்துக் கொல்லும் எருமைகளை
ஈர்த்துக் கொணர்ந்து கரையேற்றல்
    இவ்வூர்க் குயவர்க்கு என்றம் கடனே'
"மாடுகள் மேயும் காட்டில் காய்ந்து கிடக்கும் எரு முட்டைப் பொறுக்கி வந்து, சூளையில் வைத்து, மட்பாண்டங்களைச் சுட்டபோது புகை எழுந்தது. அப்புகையால் மேற்கே மேகம் தோன்றி, இடியிடித்து, மின்னி, மழை பொழிந்தது. அம்மழையால் வந்த வெள்ளத்தில் எருமைகள் அடித்துச் செல்லப்பட்டு இறந்தன. அவற்றைக் கரை ஏற்றி அடக்கம் செய்வது எப்போதும் ஊர்க் குயவரின் 
கடமையாகும்' என்பது பாடலின் பொருள்.
தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில், "தொன்னெறி மொழிவயின் ஆகுநவும்' (449:3) என்னும் அடிக்கு, பண்டைய வழக்கொன்று சுட்டப்பட்டுள்ளது. இந்த அடிக்கு, "முதுசொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன இயைந்தனவாய் வருவனவும் என்றவாறு. அவை யாற்றுள் செத்த எருமை ஈர்த்தல் ஊர்க் 
குயவர்க்குக் கடன் என்பது முதலாயின' எனச் சேனாவரையர் உரை 
எழுதுகின்றார். தொல்காப்பியச் சொல்லதிகாரம் சேனாவரையர் உரைக்குப் புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையரின் குறிப்புரையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
"முன்னோர் எவ்வளவு நுட்பமாக ஒவ்வொருவரின் கடமையை எழுதி வைத்திருக்கிறார்கள்' என்று வியந்தபடியே, குயவர் ஒருவர் செத்து நாற்றமடிக்கும் எருமைகளைக் கரையேற்றப் போகிறார்.
ஊரிலுள்ள மக்கள் ஆண்டுதோறும் கணக்கருக்குப் பொருள் கொடுக்க வேண்டும். யாது காரணத்தாலோ குயவரால் கணக்கருக்குப் பொருள் கொடுக்க முடியவில்லை. குயவரைக் குறி வைத்திருந்த கணக்கருக்குத் தக்க சமயம் கிடைத்தது.
பழைய பனை ஓலையில் பாடல் புனைந்து, இடைச்செருகலாக வைத்துப் படித்துக்காட்டிவிட்டார். "ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே' எனத் தொடங்கும் (புறநானூறு-312) பாடலைக் கணக்கர் படித்திருப்பார் போலும்.
தொடர்பில்லாத ஒன்றைத் தொடர்புடையதாகக் காட்டும் 
மரபிற்கு இத்தொன்னெறிக் கதை சிறந்த எடுத்துக்காட்டாகும். "வல்லான் வகுத்ததே வாழ்க்கை' என்னும் மரபில்தானே உலகமும் 
இயங்கிக் கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com