இழந்த கவிச்செல்வம்!

கவிச்செல்வம் என்பது கிடைத்தற்கு அரிய செல்வம். ஆனால், நாம் இழந்துபோன தமிழ்க் கவிச்செல்வத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், எக்களிப்பைவிட ஏக்கமே அதிகமாகும்.
இழந்த கவிச்செல்வம்!

கவிச்செல்வம் என்பது கிடைத்தற்கு அரிய செல்வம். ஆனால், நாம் இழந்துபோன தமிழ்க் கவிச்செல்வத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், எக்களிப்பைவிட ஏக்கமே அதிகமாகும்.
 அரிய பாடல்கள் பல கடல்கோளால் அழிந்தன; சில கரையான்களுக்கு இரையாயின. அவற்றுள் ஒன்று முத்தொள்ளாயிரப் பாடல்கள். சேர, சோழ, பாண்டியர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் பாடப்பெற்றதனால், "முத்தொள்ளாயிரம்' என்று இந்நூலுக்குப் பெயர். மொத்தம் இரண்டாயிரத்து எழுநூறு (2,700) பாடல்கள். ஆனால், நமக்குக் கிடைத்தவையோ வெறும் நூற்றியெட்டு (108).
 "புறத்திரட்டு' என்றொரு நூல். இதைத் தொகுத்தவர் யாரென்று தெரியவில்லை. அந்த நூற்றியெட்டுப் பாடல்களும் இதில்தான் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டாயிரத்து ஐந்நூற்றித் தொண்ணூற்று இரண்டு பாடல்களைக் காணவில்லை. புறத்திரட்டில் சேர்க்கப்படாத செய்யுள் ஒன்று, உரையாசிரியர் இளம்பூரணர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் (ஏற்றூர்தியாயின்ம என்ற முதற் குறிப்புடையது) இடம்பெற்றுள்ளது.
 சேரன் மேல் காதல் கொண்டாள் தலைவி ஒருத்தி. அவனுடைய பேராற்றலையும், புகழையும் தோழியிடம் பெருமிதத்தோடும், நகைச்சுவையோடும் பேசுவதாக ஒரு பாடல்.
 போர்க்களம். மன்னர்கள் பலர் யானைப் படைகளோடு சேரனை எதிர்த்து நிற்கிறார்கள். இன்னும் போர் முரசு கொட்டவில்லை. சேரனுடைய படைத் தலைவன் அவர்களைப் பார்த்து, ""மன்னர்களே! எத்தனை யானைப் படைகளோடு நீங்கள் வந்தாலும், பயனில்லை. நீங்கள் தோல்வியுற்று அழிவது உறுதி. இருந்தாலும் நீங்கள் பிழைக்க ஒரு வழி சொல்கிறேன் கேளுங்கள். எளிமையான வழி. விதிக்கப்பட்ட கப்பத்தைக் கட்டிவிடுங்கள். இப்படியே ஓடிப்போய் உங்களுடைய கோட்டை மதில்களில், நன்றாக வளைந்தது போல் சேரனுடைய வில் ஒன்றை வரைந்து விடுங்கள். நீங்கள் எங்கள் வில் கொடிக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்பது தெரிந்துவிடும். உங்களுக்கு ஒரு சிறு இன்னல்கூட ஏற்படாது. பிழைத்துக் கொள்வீர்கள். வானவில்லைப் பார்த்திருப்பீர்கள். தேவர்கள் சேரனுக்கு அடங்கிச் சுகமாக வாழ்வதற்காகவே அதை வரைந்து போட்டிருக்கிறார்கள்'' என்று கூறுகிறான் தலைவி.
 "பல்யானை மன்னீர்! படுதிறை தந்து உய்ம்மின்
 மல்லல் நெடுமதில் வாங்குவில்ப் பூட்டுமின்;
 வள்ளிதழ் வாடாத வானோரும் - வானவன்
 வில்எழுதி வாழ்வார் விசும்பு'
 முத்தொள்ளாயிரத்தில் வந்துள்ள வர்ணனைகளைத் தனித்துப் பார்த்தாலே மிக அழகாய், சுவை ததும்புவனவாய் இருக்கின்றன. காதல் துறையைக் கொண்டு நோக்கும்போது, வர்ணனைகளுக்கு எத்தனையோ ஒளிப்படலங்களும் தெளிவும் ஏற்படுகின்றன. இந்த முறையிலேயே வர்ணனைப் பகுதிகளையும், வீரப்பகுதிகளையும், ஆராய்ந்து பாடல்களில் அனுபவிக்கலாம். முத்தொள்ளாயிரத்தில் இருந்த கவிச்செல்வத்தின் பெரும்பகுதியை இழந்து நிற்கிறது தமிழ்கூறும் நல்லுலகம்.
 -ஆதீனமிளகி வீரசிகாமணி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com