அறிவாளர் எல்லாம் அறவாணரல்லர்!

உயர்ந்த ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஓம்பிய காலம் தலைசிறந்த சங்க காலம்.
அறிவாளர் எல்லாம் அறவாணரல்லர்!

உயர்ந்த ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஓம்பிய காலம் தலைசிறந்த சங்க காலம். ஆண்களும் பெண்களும் அறநெறி திறம்பாத அரிய வாழ்வு நடத்தி நலம் பெற்றனர். சங்க காலத்தை அடுத்துவந்த பிற்பட்ட காலத்தில்,

"தொட்டவனை விட்டுவிடும் தோதிருந்தும் மாதவியாள்
கட்டழகை ஒருவற்கே காணிக்கை ஆக்கி நின்றாள்'

என்பதை இன்றும் பேசி இறுமாப்பு கொள்ளும்படியான அக்காலத்தில், களவொழுக்க நெறி கற்பு நெறியாகவே கருதப்பட்டது. அவ்வகையில் இயற்றப்பெற்ற பாடல் நற்றிணை 227ஆவது (நெய்தல்திணை) பாடல். இதை இயற்றியவர் புலவர் தேவனார்.

மணத்தை நீட்டிக்கும் தலைமகனின் மனத்தைத் தூண்டும்படியான தோழியின் கூற்றாகப் புனையப்பெற்ற பாடல் இது.

"புன்னை மரங்கள் பூத்துக் குலுங்கிக் கண்ணைக் கவரும் கடற்கரைச் சோலை. நின்னைக் காணும் பொருட்டே தன்னை அழகு செய்து கொண்டிடுவாள் தலைவி! மின்னலை வெளியிடும் மேகக் கூந்தலைப் பின்னலிட்டுக் கொள்ளும் பெருமாட்டி,  உன்னைக் கண்டிடுவாள்... உனக்கின்பம் தந்திடுவாள். ஆனால், அந்தக் கடற்கரைச் சோலை இப்போது அவளுக்குக் களையிழந்ததாகி விட்டது.
மணியொலிக்க வரும் மால் யானையையும், மாற்றுயர்ந்த பொன்னணிகளையும் கொண்டிருப்பவர் கோவேந்தர் சோழர். அவர் தமக்குரிய அழகிய கொடிகள் அசைந்தாடிக் கொண்டிருக்கும் தெருக்களைக் கொண்ட ஊர் ஆர்க்காடு. அப்பேரூரிலே "ஈ' மொய்க்கும் "கள்' கொண்ட குடங்கள் எப்பொழுதும் நிரம்பிக் கொண்டேயிருக்கும். தேர்கள் ஓடிக்கொண்டேயிருக்கும் அந்தத் தெருக்களில் பேரொலி. அந்தப் பேரொலி போல நின்னால் என் தலைவிக்கு "அலர்' என்னும் பழிச் சொல்லாகிய ஆரவாரம் அதிகமாகிவிட்டதையா!

"அறிவுமிக்கவர் எல்லாம் அறநெறியில் தக்கவர் அல்லர்' என்பது ஆன்றோர் முதுமொழியாகும். 

அந்தப் பழமொழிக்கு நீ ஆளாக நேர்ந்தால், என் அருமைத் தலைவி ஆவி தரிக்கமாட்டாள். அவள் ஆவி துறந்தால், அவள் ஆன்ற குடிக்கும் அகலாத பழி நேரிடும்.  ஐயனே! உனக்கும் நீங்காப் பழி நேரும். நீ பழி தராமலும், பெறாமலும் விரைந்து மணமுடித்துச் சிறந்தென்றும் வாழவேண்டுகிறேன்' என்கிறாள் தோழி.

"அறிந்தோர் அறனிலர் என்றலின் சிறந்த
இன்உயிர் கழியினும் நனியின் னாதே!
புன்னை அம்கானல் புணர்குறி வாய்த்த
பின்ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ!
படுமணி யானைப் பசும்பூண் சோழர்
கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள்ளுடைத் தடவில் புள்ளொலித்து ஓவாத்
தேர்வழங்கு தெருவின் அன்ன
கௌவையா கின்றது ஐயநின் அருளே!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com