கறக்கின்ற எருமை பாலோ? சினையோ?

"இலக்கணம்' என்பது மக்கள் பேசும் மொழியை வரையறை செய்வது. அவ்வாறு எழுதப்படும் இலக்கணங்கள், அவற்றுக்கு எழுதப்படும் உரைகள் போன்றவற்றில் சில பழக்க வழக்கங்கள்,  நடைமுறைகள் நினைத்துப்
கறக்கின்ற எருமை பாலோ? சினையோ?

"இலக்கணம்' என்பது மக்கள் பேசும் மொழியை வரையறை செய்வது. அவ்வாறு எழுதப்படும் இலக்கணங்கள், அவற்றுக்கு எழுதப்படும் உரைகள் போன்றவற்றில் சில பழக்க வழக்கங்கள்,  நடைமுறைகள் நினைத்துப் பார்க்கும் வகையில் பதிவாகியுள்ளன. 
"செப்பும் வினாவும் வழாஅது ஓம்பல்'(தொல்.சொல்.13) என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் கேட்கக்கூடிய  கேள்வியாகிய வினாவும் சொல்லக்கூடிய விடையாகிய பதிலும் தவறில்லாமல் இருக்க வேண்டும் என்கிறார். செப்பு, வினாக்களை மேலும் சில வகைகளாகப் பகுத்துத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் விரிவாக விளக்குகின்றனர். இடைக்காலத்தில் வாழ்ந்த அவர்கள் கொடுக்கும் சான்றுகளில் ஒன்றை இக்காலத்தோடு பொருத்திப் பார்க்கலாம்.
"கறக்கின்ற எருமை பாலோ? சினையோ?' எனக் கேட்கப்படும் வினாவே வழுவானது என உரையாசிரியர் சேனாவரையர் குறிப்பிடுகின்றார். ஓர் எருமை, பசு அல்லது பால் கொடுக்கும் உயிரினம் கன்று அல்லது குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் காலத்தில் இயல்பாக சினைப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
சினைப் பிடிக்கும் பருவம் அடைந்து, வீட்டில் வளரும் எருமை, பசு போன்றவை அமாவாசை, முழுநிலவுக் காலங்களில் குரல் கொடுக்கத் தொடங்கும். குறிப்பாக எருமை நீண்ட நேரம் கத்தும்போது, "மாட்டுக்குக் கத்துது' என்பார்கள்.
அஃறிணையாகிய விலங்குகளிடமிருந்து உயர்திணையாகிய மானுடம் அறிந்துகொள்ள வேண்டிய முதன்மையான செய்தி, ஒரு பெண் விலங்கு சினைப்பட்டுவிட்டால் ஆண் விலங்கு அதனை நாடுவதில்லை. அதே போன்று பெண் விலங்கும் சினைப்பட்ட பிறகு கத்துவதில்லை. கன்று அல்லது குட்டி ஈன்று பால் கொடுத்து மிகவும் கவனமாக வளர்க்கும். ஈன்ற ஓர் ஆண்டுக்குள் பெண் விலங்கு சினைப்படுவதில்லை. 
எனவே, தொல்காப்பிய உரையாசிரியர்கள் காலம் அல்லது அதற்கு முன்னுள்ள காலத்தின்படி கறக்கின்ற எருமையைச் சினை மாடா? எனக் கேட்பது வினா வழுவாகும். அது பால் மாடுதான்; அதாவது கறக்கும் மாடுதான். "கறக்கத் தெரியாதவனிடம் சினை மாட்டைக் கொடுத்த கதையாக' என்றொரு சொலவடை உண்டு. பால் கறந்து பார்க்க ஆசைப்பட்டவனிடம் இன்னொருவன் சினை மாட்டைக் காட்டிக் கறக்கச் சொன்னானாம்.
ஆனால், இக்காலத்திற்கு இக்கருத்து பொருந்துமாறு இல்லை என்பதை வித்துவான் தி.வே.கோபாலையர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "சினைப்பட்ட எருமையும், சினைப்பட்ட பின் பல திங்கள் பால் வழங்குவதனைக் கண்கூடாகக் காண்கிறோம். ஆதலின், இக்காலத்து இவ்வினா வினா வழுவன்று'.
இக்காலத்தில் கறக்கின்ற மாடு எவ்வாறு சினைப்படுகின்றது? காலமாற்றத்தில் அஃறிணைகளிடமும் மாற்றம் நிகழ்ந்துவிட்டதா? இல்லை! எல்லாமே அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றமே!
பசுமைப் புரட்சியைக் கொண்டுவந்தது போல வெண்மைப் புரட்சியையும் கொண்டு வந்தார்கள். மாடு கன்று ஈன்று மூன்று, நான்கு மாதங்களில் ஊசிவழி சினைப்படுத்தி விடுகின்றார்கள். பால் கறக்கும் காலத்தில் மாடுகளுக்கு நல்ல தீனி கொடுக்கப்படுவதால், வயிற்றில் வளரும் கன்றும் ஆரோக்கியத்துடன் வளருமாம்.
இயற்கை இயல்பை மீறி வளர்ந்துள்ள அறிவியல் வளர்ச்சியால் கறக்கின்ற எருமை பாலோ? சினையோ? எனக் கேட்பதே வழு என்று முற்காலத்தில் கருதப்பட்ட வினா வழுவே, இக்காலத்தில் வலுவிழந்து
விட்டது.
தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், "ஒருவிரற் காட்டி நெடிதோ? குறிதோ? என்பது வினா வழூஉ' எனக் குறிப்பிடுவது இக்காலத்துக்கும் பொருந்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com