சைவ சமய ஆத்திசூடி

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த ஊர் வெட்டுவாணம். இவ்வூரில் ஸ்ரீஅறுபத்து மூவர் சமரச சன்மார்க்க சபை அமைந்துள்ளது.
சைவ சமய ஆத்திசூடி

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த ஊர் வெட்டுவாணம். இவ்வூரில் ஸ்ரீஅறுபத்து மூவர் சமரச சன்மார்க்க சபை அமைந்துள்ளது. இதை 1880-இல் மௌன சுவாமிகள் என்பவர் தோற்றுவித்துள்ளார். இவரைப் பற்றித் "தமிழ்த் தென்றல்' திரு.வி.க., தம் வாழ்க்கைக் குறிப்புகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: 

""மௌன சுவாமிகள் என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஊரில்லார்; பேரில்லார். அவர் எங்கே பிறந்தாரோ? எங்கே வளர்ந்தாரோ? ஒன்றும் தெரியவில்லை. அவர் மௌனமாயிருத்தலால் மக்கள் அவரை மௌன சுவாமிகள் என்று அழைக்கிறார்கள். சுவாமிகள் கை காசைத் தீண்டாது; உண்ணுதற்கு எக்கலனையுந் தீண்டாது. கை ஏந்திக் கவளம் வாங்கிக் கொள்ளும். எவரும் சுவாமிகள் காலில் விழுதல் கூடாது. அவர் படமெடுக்கும் இடங்களில் நிற்பதில்லை. அவர் இரசவாதம் செய்வதில்லை; அற்புதங்கள் நிகழ்த்துவதில்லை; எவ்வித மோச வழியிலும் நுழைவதில்லை; சாதாரண மனிதரைப் போலவே உலவுகிறார்.

வேலூர் வட்டங்களில் சர்க்காவையும், கதரையும் பெருக்கிய பெருமை சுவாமிகளுக்கு உண்டு. சுவாமிகளின் தொண்டு காந்தியடிகள் கருத்தையே கவர்ந்தது. அதனால், அஃது ஒருமுறை "யங்இந்தியா'விலும் இடம் பெற்றது. வேலூரிலிருந்து வெள்ளிமலைக்கு நல்ல பாதை கிடையாது. அவர் முயற்சியால் ஒரு நீண்ட பாதை அமைந்தது. மௌனம், என்ஜினியரைப் போலத் தொழில் புரிந்ததைக் கிராமங்கள் இன்னும் பாராட்டுகின்றன.

எஸ்.ஸ்ரீநிவாச ஐயங்கார் கங்கையையும் காவிரியையும் ஒன்றுபடுத்தக் கால்வாயெடுத்தல் வேண்டுமென்று கூறினார். அக்கூற்று, சில அரசியல் தலைவர்களால் எள்ளப்பட்டது. மௌன சுவாமிகள் அக்கால்வாய் எடுத்தார். எதில்? படத்தில். அப்படத்தைச் சுவாமிகள் எனக்குக் காட்டினார். சுவாமிகளிடத்தில் பூகோள அறிவும், அளவை அறிவும், பொருண்மை அறிவும், பிறவும் எப்படி அமைந்தனவோ? சுவாமிகள் முயற்சியால் கந்தனேரியில்  ஒரு முருகன் கோயில் எழுந்தது; வெட்டுவாணத்தில் ஒரு சன்மார்க்க சங்கம் தோன்றியது; கரிகேரி - கம்மவார்-புதூரில் ஒரு பள்ளி அமைந்தது'' என்று (திரு.வி.க., வாழ்க்கைக் குறிப்புகள், பக். 850-854) குறிப்பிட்டுள்ளார்.

வெட்டுவாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅறுபத்து மூவர் சமரச சன்மார்க்க சபையில் கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து மகாசிவராத்திரியின்போது பன்னிரு திருமுறைகளைக் கொண்டு மகா சிவவேள்வி நிகழ்ந்து வருகிறது. இந்த ஆண்டு  நடந்த வேள்வியின்போது (04.3.2019) சிதம்பரம் குரு நமச்சிவாய தேவர் அருளிய "நமச்சிவாய மாலை' நூல் வெளியிடப்பெற்றது. ஐம்பெரும் புராணப் (பஞ்சபுராணம்) பாடல்களையும், நமச்சிவாய மாலையையும் கொண்ட நூலாக இது விளங்குகிறது.

தமிழ் மக்களுக்கு "ஆத்திசூடி' என்றாலே ஒளவையார்தான் நினைவுக்கு வருவார். தமிழ் உயிர் எழுத்துகளையும் மெய்யெழுத்துகளையும் கொண்டு ஒரே வரியில் பாடியுள்ளார். ஏறக்குறைய இந்த அமைப்பு முறையிலேயே மகாகவி பாரதியாரும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் "புதிய ஆத்திசூடி'யை எழுதியுள்ளனர். இவை மூன்றும், "சமுசாய ஆத்திசூடி'களாகத் திகழ்கின்றன.

ஆனால், சிதம்பரம் குரு நமச்சிவாயர் ஒளவையாரின் ஆத்திசூடி அமைப்பிலேயே "நமச்சிவாய மாலை' என்னும் ஒரு சைவ சமய சிற்றிலக்கிய நூலைச் செய்துள்ளார். ஒளவையாரின் நூலுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள் சிலவே.  அவை: 1. "மாலை' இரண்டு அடிகளாலான காப்புடன் கூடிய 100 கண்ணிகளால் அமைந்தது.

2. கண்ணிகளின் இறுதிச் சீர் "நமச்சிவாய' என்னும் பெயரால் நிறைவடைகிறது. இப்பெயரையே நூலுக்குப் பெயராகச் சூட்டியுள்ளார் ஆசிரியர். இதனை ஒரு சைவ சமய "ஆத்திசூடி' எனலாம். இம்மாலையில், "அ'கரத்தை, "க'கரத்தை முதலாகக்கொண்டு தொடங்கும் பாடல்கள் வருமாறு:

"அறைமறை அயனும் மாலும் அமரரும் முனிவர் தாமும்
முறைமுறை வணங்கி ஏத்தும் முதல்வனே நமச்சிவாய (1)
ஆதியாய் வேதம் நான்காய் அடிமுடி தெரியா வண்ணம்
சோதியாய் நிறைவாய் நின்ற துணைவனே நமச்சிவாய் (2)
அடுத்து, "க'வில் தொடங்கும் பாடல் வருமாறு:
"கம்பம ஆர் களிறு உரித்த கச்சி ஏகம்பா செம்பொன்
அம்பலத்து ஆடுகின்ற அண்ணலே நமச்சிவாய' (14)
ஙகரம்போல் வளைந்து உழன்று நாயினேன் உணவுதேடும்
பகரொணா இன்னல் தீர்க்கும் பரமனே நமச்சிவாய (15)

மேலும்,  சிவபெருமானை நினைந்த அடியார்களுக்கு அச்சத்தைத் தவிர்க்கும் முறையில்,  "நெஞ்சக மலரில்  உன்னை நினைவுற நினைந்தபேருக்கு அஞ்சலென்று அருளிச் செய்யும் அண்ணலே நமச்சிவாய' (71)  என்னும் பாடல் உள்ளது. இந்நூலைக்  குழந்தைகள் மனப்பாடம் செய்தால், தமிழ் எழுத்துகளை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com