மீன் துஞ்சும்பொழுதும் தான் துஞ்சாத் தலைவன்!

தலைவியின் களவொழுக்கத்தைத் தாய் அறிந்தாள். உடனே இல்லத்தினுள் வைத்து இரு கதவையும் தாழிட்டாள்; கடுமையான சிறைக் காவலுக்குள் வைத்து மகளைக் காத்தாள்.
மீன் துஞ்சும்பொழுதும் தான் துஞ்சாத் தலைவன்!

தலைவியின் களவொழுக்கத்தைத் தாய் அறிந்தாள். உடனே இல்லத்தினுள் வைத்து இரு கதவையும் தாழிட்டாள்; கடுமையான சிறைக் காவலுக்குள் வைத்து மகளைக் காத்தாள்.
இரவிலே அவளைக் காணவந்த தலைவனோ, அவளைக் காணாது ஏங்கித் தவித்தான். பாதையெல்லாம் மணல் மலிந்த பழைய ஊர். அகன்ற நீண்ட அந்தத் தெருவிலே அயர்ந்து அமர்ந்துவிட்டான்; பேதுற்ற மனத்திடம் பேசினான்.

"உள்ளமே! ஓங்கிய கடலும் ஒலியடங்கிவிட்டது. மண்டும் ஊதைக் காற்றும் மகரந்தத்தைக் கிண்டிக் கிளப்பும் அலையோசைக் கடற்கரைச் சோலையும் அழகிழந்ததே! பெட்டையும் தானும் வந்திட்ட கூகைச் சேவல் மக்கள் நடமாட்டம் இல்லாத மாபெரும் தெருவில் அச்சம் உண்டாக்குமாறு அலறிக் குழறுகின்றதே. தீண்டி வருத்தும் தெய்வப் பெண்கள் வேண்டியதைப் பெற வெளிவரும் நடுநாளானதே!  தோகைமயில் என் முன்னே தோன்றவில்லையே; தோழியின் உதவியும் தோற்றுவிட்டதோ? மெல்லியலாள் அழகுக்குக் "கொல்லிப்பாவை' அழகும் குறைவாகுமல்லவா? முற்றிய, மென்மை மிகுந்த மூங்கிலன்ன பருத்த தோள்களைப் படைத்தவள்; இளமை நலம் எல்லாமும் கொண்டவள்; அழகு தேமல் படர்ந்த அங்கமெனும் தங்கமதில் மதர்த்து நிற்கும் மார்பகத்தைத் தழுவிஇன்பம் பெறும் வாய்ப்பு தவறிப் போய்விட்டதே!' என்று தனக்குத்தானே பேசிக்கொண்ட தலைவன், உடன் மணம்புரிந்து இல்லறம் இயற்றுவான் என்பது கருத்தாகும். நெய்தல் திணைப் பாடலான இதைப் பாடிய புலவர் வினைத்தொழிற் சோகீரனார் ஆவார். 

"ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்
தாதுஉளர் கானல் தவ்வென் றன்றே
மணல்மலி மூதூர் அகல்நெடுந் தெருவில்
கூகைச் சேவல் குராலொடு ஏறி
ஆரிரும் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்
அணங்குகால் கிளறும் மயங்கிரு நடுநாள்
பாவை யன்ன பலர்ஆய் வனப்பின்
தடமென் பணைத்தோள் மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வனமுலை முயங்கல் உள்ளி
மீன்கண் துஞ்சும் பொழுதும்
யான்கண் துஞ்சேன் "யாதுகொல் நிலையே!'                                         (நற்.319)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com