ஆங்கிலம் வாயிலாக இணையத்தில் சங்கத்தமிழ்!

சங்கத் தமிழ் இலக்கியங்களின் பெருமை அறிந்து,  அவற்றை இணைய தளத்தின் வாயிலாக ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கிறார் வைதேகி ஹெர்பர்ட் எனும் பெண்மணி!  
ஆங்கிலம் வாயிலாக இணையத்தில் சங்கத்தமிழ்!

சங்கத் தமிழ் இலக்கியங்களின் பெருமை அறிந்து,  அவற்றை இணைய தளத்தின் வாயிலாக ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கிறார் வைதேகி ஹெர்பர்ட் எனும் பெண்மணி!  
இவரது வலைதளத்தின் மூலம் தொடர்ந்து பலரும் சங்க இலக்கியத்தைத் தவறின்றி இருமொழிகளிலும் பயின்று பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் பிறந்த வைதேகி ஹெர்பர்ட்,  அமெரிக்கா சென்று அங்கேயே கல்வி பயின்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பவர். 2004-ஆம் ஆண்டு "கோலம்' என்ற அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் தமிழ்நாட்டு கிராமங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சியும் அளித்தவர்.
2004-ஆம் ஆண்டு சங்க இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்த இவரின் முதல் முயற்சியாக "முல்லைப்பாட்டு' இலக்கியம் இவரால்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முல்லைப்பாட்டைத் தொடர்ந்து நெடுநல்வாடையை மொழிபெயர்த்துள்ளார்.  2012-ஆம் ஆண்டுக்கான தமிழ்  - ஆங்கில மொழிபெயர்ப்புக்கான  "தமிழ் இலக்கியத் தோட்டம்' அறக்கட்டளை விருதை இவ்விரு நூல்களும் பெற்றுள்ளன. 
"சங்கத் தமிழ் பயில்' - Learn SangamTamil  (https://learnsangamtamil.com)    என்னும் தலைப்பில் இயங்கும் 
இவரது இணைய தளத்தில் சங்கப் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பதிவிடப்பட்டு வருகின்றன.
இதில், தமிழ்ச் செய்யுள்களுக்கான மொழிபெயர்ப்பு நேரிடை மொழியாக்க முறையில் அமைந்து, சங்க இலக்கிய தமிழ்ச் சொற்களுக்குரிய ஆங்கிலச் சொற்களை அறிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.
 "தயவு செய்து சங்க இலக்கியங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்ற வேண்டு
கோளுடன் ஆரம்பிக்கிறது இவரது வலைதளம். 
"சங்கச் செய்யுள்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பண்டைய தமிழ்க் கலாசாரத்தை வெளிப்படுத்துகின்றன.  சங்க இலக்கியங்களில் நம் தமிழ்நாட்டின் 500-600 ஆண்டுகால வரலாறு பதிவாகியிருக்கிறது. சங்கச் செய்யுள்களை எழுதிய நமது முன்னோர்கள்  மிகவும் திறமைசாலிகள். 
அவர்கள் எழுதிய தலைசிறந்த தொகை நூல்கள் 18 உள்ளன.  அவர்கள், நாம் அனைவரும் படித்துச் சுவைத்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய பொக்கிஷத்தை  விட்டுச் சென்றுள்ளனர். சங்கப் பாடல்களை கொஞ்சம் முயற்சி செய்து படித்தோமென்றால்,  அதன் கவி நயத்தை நன்கு அனுபவிக்க முடியும்' என்கிறார்.
சங்கத் தமிழ்ச் செய்யுள்களை மிகவும் எளிமைப்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, மொழி பெயர்ப்புக்குத் தகுந்த - எளிமையாகக் கற்றுக்கொள்வதற்கேற்ற சொற்களுக்கான விளக்கங்களையும் கொடுத்திருக்கிறார். மேலும், சமகால ஆங்கில மொழியில் இவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். இதனால் சங்கச் செய்யுள்களை (இரு மொழிகளில்) எல்லோரும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். 
இவரது, "சங்கத் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்' வலைதளத்தில் "குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை புறநானூறு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை முதலிய  பாடல்களுக்கு எழுதிய "எளிய தமிழ் உரை' மூலம் சங்கத் தமிழ் செய்யுள்களை எளிதாகக் கற்றுக்கொள்ளவும்,  நம் பண்டைய காலத்தை அறிந்து கொள்ளவும் உதவும்' என்று பதிவிட்டிருக்கிறார் வைதேகி ஹெர்பட்.   
நம் செவ்விலக்கியங்களான சங்கத் தமிழ் நூல்களை தமிழர்களே அரிதாகப் பயின்றுவரும் இன்றைய காலகட்டத்தில், அவற்றை இணைய தளத்தின் உதவியோடு ஆங்கிலத்தில் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வைதேகியின் தமிழ்த் தொண்டுக்கு நாம் தலை வணங்கியே ஆகவேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com