இந்த வாரம் கலாரசிகன்

தமிழ் வளர்ச்சித் துறையின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஒன்று "இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை'. ஆண்டுதோறும் கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன
இந்த வாரம் கலாரசிகன்

தமிழ் வளர்ச்சித் துறையின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஒன்று "இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை'. ஆண்டுதோறும் கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 ஏறத்தாழ 200 முதல் 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த இளைஞர்களுக்கு இலக்கியப் பயிற்சிப் பட்டறை கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் 1,420 மாணவர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையின் மூலம் பட்டை தீட்டப்பட்டிருக்கின்றனர்.
 இந்த ஆண்டுக்கான இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற இருக்கிறது என்கிற தகவலை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்தபோது, பெருமகிழ்ச்சியாக இருந்தது. இளந்தமிழர் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற இருக்கும் வருங்கால இலக்கிய ஆளுமைகளைச் சந்திக்க இருக்கும் அந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
 
 கடந்த 44 ஆண்டுகளாக திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் கபிலர் விழாவை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் மூத்த தமிழறிஞர் ஒருவர் "கபிலவாணர் விருது' வழங்கி கெளரவிக்கப்படுகிறார். இந்த ஆண்டு தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் தலைவர் முனைவர் ச. கணபதிராமனுக்கு நீதியரசர் மகாதேவனால் "கபிலவாணர் விருது' வழங்கப்பட்டது.
 இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் டி.எஸ்.தியாகராசன் ஐயாவும் நானும் தென்காசி திருவள்ளுவர் கழக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அப்போது, கணபதிராமன் ஐயா குறித்த தகவல்களை அவரிடம் நான் தெரிவித்தபோது, மிகவும் வியப்படைந்தார்.
 கடையத்தில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்தது மட்டுமல்லாமல், அந்தக் கவிதைகள் எழுதப்பட்ட பின்னணியையும் ஆய்வு செய்து அவர் வெளிக்கொணர்ந்த "கடையத்தில் பாரதி' என்கிற புத்தகம் குறித்துத் தெரிவித்தேன்.
 "சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளையின் இறுதிக் காலத்தில் அவருக்குத் தொண்டு புரிந்தது மட்டுமல்லாமல், மகன் போல இருந்து அவரது இறுதிச் சடங்கையும் நடத்திய பெருமைக்குரியவர் கணபதிராமன் என்பதைக் கேட்டதும் டி.எஸ். தியாகராசனுக்கு அவர் மீதான மரியாதை அதிகரித்தது. ஐயா கணபதிராமனுக்கு "கபிலவாணர் விருது' வழங்கப்பட வேண்டும் என்று அப்போதே தீர்மானித்துவிட்டார்.
 திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம், தென்காசி திருவள்ளுவர் கழகம் போன்ற இலக்கிய அமைப்புகளின் நிகழ்ச்சிகளைக் காட்சி ஊடகங்கள் ஒளிபரப்ப வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
 
 கடந்த ஞாயிற்றுக்கிழமை கபிலர் விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது, ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய "கபிலர்' என்கிற புத்தகத்தை, நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைத்து நடத்தப்போகும் முனைவர் சொ.சேதுபதி, அன்பளிப்பாகத் தந்தார்.
 ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1921-ஆம் ஆண்டில், முதல் பதிப்பு கண்ட புத்தகம் இது.
 கபிலர் குறித்தும், அவருடைய பாடல்கள் குறித்தும் ஆராய முற்படும் எவரும் இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தங்களது ஆய்வை மேற்கொள்ள முடியும் என்கிற அளவிலான மிக முக்கியமான படைப்பு இது.
 நக்கீரர், கபிலர் முதலிய சங்ககாலப் புலவர்கள் குறித்து வெளிவந்த ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் ஆய்வுப்பூர்வமான உரை நூல்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் அப்போது முக்கியப் பங்கு வகித்தன.
 சங்கப் புலவர்களில் கபிலருக்கு சிறப்பும், தனித்துவமுமான ஓர் இடமும் உண்டு. ஏனைய சங்கப் புலவர்களிலிருந்து கபிலரைத் தனித்து அடையாளம் காட்டுவது அவரது கவிதை காட்சிப்படுத்தல்தான்.
 தேர்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளரைப் போல இயற்கைக் காட்சிகளின் பின்னணியில் அவருடைய ஒவ்வொரு பாடலும் அமைந்திருப்பதை நாம் காண முடியும்.
 கபிலரைப் போல இயற்கை வர்ணனைகளையும், சூழலியல் சிந்தனைகளையும் கையாண்டவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
 சங்க இலக்கியத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் கபிலர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 278. அதில் அதிகமான பாடல்கள் ஐங்குறுநூறில் உள்ள நூறு பாடல்கள். புறநானூறில் 30, குறுந்தொகையில் 29, கலித்தொகையில் 29, நற்றிணையில் 20, அகநானூறில் 16, பதிற்றுப்பத்தில் 10, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு என்ற கபிலருடைய பங்களிப்பு அளப்பரியது. 261 அடிகளைக் கொண்ட குறிஞ்சிப் பாட்டுதான் அவரது படைப்புகளிலேயே பெரியது.
 கபிலரையும், அவருடைய படைப்புகளையும் நமக்குத் தேடித்தந்ததற்கு "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையருக்குத் தமிழுலகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் "கபிலர்'
 புத்தகத்தைப் படித்தபோது, கபிலர் குறித்த பிம்பம் பல மடங்கு என்னுள் உயர்ந்து நிற்கிறது.
 
 கவிஞர் வணவை தூரிகாவின் "கறிக் கடைக்காரனின் சைவ மெனு கார்டு' என்கிற வித்தியாசமான தலைப்புடன்கூடிய கவிதைத் தொகுப்பு விமர்சனத்திற்கு வந்திருந்தது.
 கறிக்கடைகாரனுக்குள் கவிஞன் இருக்கக்கூடாது என்று யார் சொன்னது? இதற்கு முன்னால் ராஜபாளையத்தில் கசாப்புக்கடை வைத்திருக்கும் ஒருவருடைய கவிதையை நான் பகிர்ந்துகொண்டபோது, அதற்குக் கிடைத்த வரவேற்பு மலைப்பை ஏற்படுத்தியது என்பது மட்டுமல்ல, அந்தக் கவிஞருக்கு உள்ளூரில் மரியாதையையும் ஏற்படுத்தித் தந்தது. அதனால், பெருமாள் என்கிற இயற்பெயர் கொண்ட கவிஞர் வணவை தூரிகா மாலை நேர அசைவ உணவகம் நடத்துகிறார் என்பதில் வியப்படைய எதுவுமில்லை.
 "தமிழ் போதையைக் கவிதைக்கு ஊட்டி ஊட்டி குடித்து மயங்குபவன்'' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கவிஞர் வணவை தூரிகாவின் தொகுப்புக்குக் கவிஞர் ஜெயபாஸ்கரனும், கவிஞர் யாழன் ஆதியும் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவருடைய கவிதையின் தரமும், வீரியமும் விளங்கும். அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு ஹைக்கூ.
 
 கோர்ட் வாசல்
 செருப்பு தைக்கும் கடை
 நல்ல வருமானம்...
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com