ஊழ்வினையும் உய்வினையும்

ஊழ்வினையும் உய்வினையும் பற்றிய வினைக் கொள்கை விளக்கத்தை நற்றமிழ் ஞானசம்பந்தர் ஒரு பதிகத்தில் பதிவு செய்கின்றார். அவர் விளக்கமும், அதை ஒட்டிய திருமூலர்,
ஊழ்வினையும் உய்வினையும்

ஊழ்வினையும் உய்வினையும் பற்றிய வினைக் கொள்கை விளக்கத்தை நற்றமிழ் ஞானசம்பந்தர் ஒரு பதிகத்தில் பதிவு செய்கின்றார். அவர் விளக்கமும், அதை ஒட்டிய திருமூலர், திருவள்ளுவர் கருத்துகளையும் ஆராயலாம்.
 திருஞானசம்பந்தர் திருச்செங்கோடு திருத்தலத்துக்குத் தம் அடியார் கூட்டத்துடன் சென்றபோது மாரிக்காலம் போய் பனிக்காலம் வந்தது. அவ்வூர் மக்கள் கடுமையான குளிர் சுரத்தால் நடுநடுங்கி நோய்வாய்ப்பட்டு வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். உடன்வந்த அடியார்களும் சுர நோயால் அல்லல்பட்டனர். அதனைப் பார்த்த பாலராவாயர் நளிர் சுரம் நீங்க
 ""அவ்வினைக்கு இவ்வினையாம்'' என்ற வினைதீர்க்கும் திருநீலகண்ட திருப்பதிகத்தைப் பாடி அடியவர்கள், ஊரார் உற்ற நோய் தீர்த்ததுமட்டுமன்றி, அவ்வூரில் எக்காலத்தும் அவ்விடச் சுரம் வராமல் திருவருள் புரிந்தார்.
 "அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
 உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே
 கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
 செய்வினை வந்து எம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்'
 முற்பிறப்பில் ஒருவன் செய்த தீவினையின் காரணமாக இப்பிறப்பில் தீராத நோயினாலும், தீராத ஏழ்மையினாலும் பலவாறாகத் துன்பப்படுகிறான். இதை திருவள்ளுவர் "பிறர்க்கு இன்னா' (379)என்று கூறியுள்ளார். இஃது இந்நிலத்தின் இயல்பு. வினையின் அடிப்படை நம் செயலின் விதை. முன்பு செய்த பாவத்தால், அதையே நினைத்து நினைத்துப் பரிதாபப்படுவதில் பயன் ஒன்றுமில்லை. ஒவ்வோர் உயிரும் தன் வினைக்கு ஈடாக மெய் (உடல்) கொண்டு உலகில் பிறக்கின்றது என்கிறது திருமந்திரம்.
 
 "விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு
 தன்நின்ற தாளைத் தலைக் காவல் முன்வைத்து
 உண்ணின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக்
 கண் நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே'
 இவ்வினை மூன்று: (1) ஆகாமியம் - எதிர்வினை, மேல்வினை, வருவினை. இப்பிறப்பில் செய்வது; (2) சஞ்சிதம் (பழவினை), தொல்வினை, கிடைவினை - பல பிறப்புகளில் பற்றி வந்த திரள்; (3) பிரார்த்தம் (ஊழ்வினை, நுகர்வினை - ஒரு பிறப்பில் உடல் மூலம் அனுபவிப்பது). இவற்றிலிருந்து மீள முடியுமா? முடியும், ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் எனினும், அதிலிருந்து உய்யும் வழி - உய்யும் வினை கைத்தொண்டு செய்வதும், எம்பிரான் திருவடிகளைப் போற்றலும் ஆகும்.
 "நஞ்சுண்டு உலகைக் காத்த திருநீலகண்டம் வல்வினையை எளிதில் தீர்ப்பார்' என்று வழியைக் காட்டுகிறார். ஈண்டு "கைவினை' என்பது "ஒழுக்கம்' என்ற பொருளையும் குறிக்கும். கையிலுள்ள ஐந்து விரல்கள்
 "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரம், ஒழுக்கத் தொண்டே உய்வினை. திருநாவுக்கரசர் கைத்தொண்டு.
 அடுத்தப் பாட்டில்
 ""காவினை இட்டும் குளம் பல தொட்டும்.... இரு பொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்ற'' வேண்டுகின்றார். திருநாவுக்கரசர் ஆற்றிய கைத்தொண்டாகிய உழவாரப் பணியையும், தன்னால் முடிந்த தொண்டும், எம்பெருமான் திருவடித் தொழுதலும்தான் வினைதீர்க்கும் - உய்யும் வழியாகும். திருவள்ளுவர் காட்டும் திறம், எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளைப்பற்றி, பற்றைக் கெடுமாறு ஒழுகினான் துன்பங்கள்... திரும்ப வந்தடையா என்பதைக் கீழ்வரும் குறள் விளக்குகிறது.
 சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்
 சார்தரா சார்தரு நோய் (359)
 மற்றும் இம்மை, மறுமையால் விளையும் நல்வினை, தீவினைகளும் சேரா.
 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)
 ஊழ்வினை என்று உடைந்து போய்விடாதே! விடாமுயற்சி
 வெற்றி தரும் என்கிறார் திருவள்ளுவர்.
 ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
 தாழாது உஞற்று பவர் (620)
 ஊழ்வினையை வெல்ல உய்வினையைச் செய்வோம்!
 
 -புலவர் இராமமூர்த்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com