தமிழகத்தின் நீர்நிலைகள்!

நீர்நிலைகள் என்பன, கடல்கள், ஆறுகள், சுனைகள், மடுக்கள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் குறிக்கும்.ஐம்பூதங்களும் (பஞ்சபூதங்கள்)
தமிழகத்தின் நீர்நிலைகள்!

நீர்நிலைகள் என்பன, கடல்கள், ஆறுகள், சுனைகள், மடுக்கள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் குறிக்கும்.ஐம்பூதங்களும் (பஞ்சபூதங்கள்) அடங்கியதுதான் இவ்வுலகம் என்கிறது தொல்காப்பியம். இவ்வைந்தில் எந்த ஒன்று குறைந்தாலும், மிகுந்தாலும் உலக உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும்! அக்காலத்தில் தமிழகத்தில் 47 வகையான நீர்நிலைகள் இருந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. அவை:
 1.அகழி: கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.
 2. அருவி: மலை முகட்டில் தேங்கியநீர் குத்திட்டு விழுதல்.
 3. ஆறு: பெருகி ஓடும் நதி.
 4. இலஞ்சி: பலவற்றுக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.
 5.ஆழிக்கிணறு: கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
 6. உறைகிணறு: மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
 7. ஊருணி: மக்கள் பருகும் நீர்நிலை.
 8.ஊற்று: பூமிக்கு அடியிலிருந்து நீர் ஊறுவது.
 9. ஏரி: பாச நீர்த்தேக்கம்.
 10.ஓடை: அடியிலிருந்த ஊற்று எடுக்கும் நீர்/ எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
 11.கட்டுக் கிணறு: சரளை நிலத்தில் வெட்டி, கல் செங்கல் இவற்றால் சுவர் கட்டிய கிணறு.
 12. கடல்: சமுத்திரம்
 13.கண்மாய் (கம்வாய் - கம்மாய்): பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
 14.கலிங்கு: ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கங்கள் உடைப்பெடுக்காமல் பலகைகளால் / கற்களால் அடைத்துத் திறக்கக்கூடிய அமைப்பு.
 15. கால்: நீரோடும் வழி
 16.கால்வாய்: ஏரி, குளம், ஊருணி இவற்றுக்கு நீரூட்டும் வழி.
 17. குட்டம்: பெருங்குட்டை
 18. குட்டை: சிறிய குட்டம்
 19.குண்டம்: சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை.
 20.குண்டு: குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
 21.குமிழி: நிலத்தில் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடைகிணறு.
 22. குமிழி ஊற்று: அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்குக் கொப்பளித்து வரும் ஊற்று.
 23.குளம்: ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர்நிலை.
 24.கூவம்: ஓர் ஒழுங்கில் அமையாத கிணறு.
 25.கூவல்: ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
 26. வாளி: ஆற்றுநீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால் வழி அதிக நீர் வெளிச்செல்லுமாறு அமைந்த நீர்நிலை.
 27. கேணி: அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.
 28.சிறை: தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை.
 29.சுனை: மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர்நிலை.
 30.சேங்கை: பாசிக்கொடி மண்டிய குளம்.
 31. தடம்: அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம்.
 32.தளிக்குளம்: கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர்நிலை.
 33. தாங்கல்: தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் உள்ள ஏரி.
 34. திருக்குளம்: கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இதற்குப் புட்(ஷ்)கரணி எனப் பெயர்.
 35.தொடுகிணறு: ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத் தோண்டி நீர் எடுக்கும் இடம்.
 36.தெப்பக்குளம்: ஆளோடியுடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம்.
 37. நடைகேணி: இறங்கிச் செல்லுமாறு படிக்கட்டு அமைந்த பெருங்கிணறு.
 38.நீராவி(ழி): மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் சொல்வர்.
 39.பிள்ளைக் கிணறு: குளம் ஏரியின் நடுவில் அமைந்த கிணறு.
 40.பொங்கு கிணறு: ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
 41.பொய்கை: தாமரை முதலியன மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீர்நிலை.
 42.மடு: ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
 43.மடை: ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
 44.மதகு: பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.
 45. மறுகால்: அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
 46. வலயம்: வட்டக் குளம்.
 47.வாய்க்கால்: ஏரி முதலிய நீர் நிலைகள்.
 "நீரின்றி அமையாது உலகு', "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்றெல்லாம் முன்னோரால் போற்றப்பட்ட "தண்ணீர்' திரவத் தங்கமாய்த் திகழ்கிறது. நீர் நிலைகளைக் காப்பதன் மூலமே பார் மக்களைக் காக்க முடியும்!
 -இராம.வேதநாயகம்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com