இந்த வார கலாரசிகன்

வாழ்நாள் அனுபவம் என்று சொல்வார்களே, அப்படி ஓர் அனுபவம் கடந்த வியாழக்கிழமை எனக்குக் கிடைத்தது.
இந்த வார கலாரசிகன்

வாழ்நாள் அனுபவம் என்று சொல்வார்களே, அப்படி ஓர் அனுபவம் கடந்த வியாழக்கிழமை எனக்குக் கிடைத்தது. வழக்கம்போல் இந்த ஆண்டும் சபரிமலையில் புத்தரிசி பூஜை விழாவுக்கான புனித யாத்திரையை முடித்துக்கொண்டு, அதிகாலை 5.30 மணிக்கு சபரிமலையில் இருந்து இறங்கும்போதே பலத்த சூறைக்காற்றுடன் அடைமழை. அடர்ந்த காடுகள் வழியாக அடை மழையில் நனைந்தபடி, இயற்கையின் சீற்றத்தை ரசித்தபடி இறங்கும்போது, எங்களைப் பேராபத்து எதிர்நோக்கிக் காத்திருந்தது தெரியாது.

முந்தைய நாள் பூஜைக்கு வந்திருந்த எல்லா ஐயப்பன்மார்களும்  இரவிலேயே திரும்பிவிட்டனர். அதனால், நாங்கள் மட்டும்தான் கடைசியாகத் திரும்பும் குழுவினர். அடிவாரத்தை நெருங்கும்போது காவல்துறையினர் உடனடியாக இறங்கி, கணபதி கோயில் அருகில் தங்கிவிடும்படி எச்சரித்தபோது திடுக்கிட்டோம்.  பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலங்களெல்லாம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது அப்போதுதான் தெரிந்தது.

ஒருபுறம்  எப்படி ஊர் திரும்பப் போகிறோம் என்கிற அச்சம் இருந்தாலும்கூட, கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்தது மனம்.  இப்படியொரு காட்சியை இதுவரை புகைப்படங்களிலும், திரைப்படங்களிலும்தான் பார்த்திருக்கிறேன்.
இரண்டு பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், கடைசி  மூன்றாவது பாலத்தை வெள்ளப்பெருக்கு இன்னும் முழுமையாக கபளீகரம் செய்திருக்கவில்லை. உடனடியாக அந்தப் பாலம் வழியே ஆற்றைக் கடந்து வெளியேறும்படி காவல்துறையினர் எங்களை எச்சரித்து விரட்டத் தொடங்கினர். 

உயிருக்குப் பயந்து  ஓடுவது என்று அதுவரை கேள்விப்பட்டதை அன்று கண்எதிரே பார்க்க முடிந்தது.  ஈழத்தில் பதுங்குக் குழிகளில் அடைக்கலம் புகுந்தவர்களும் தானே, வர்தா, ஒக்கி, கஜா புயல்களில் சிக்கித் தவித்தவர்களும், சென்னை மழை வெள்ளத்தில் உயிருக்கு பயந்து மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்களும் மனத்திரையில் ஓடி மறைந்தனர். அவர்களது வேதனையை  என்னால் அனுபவித்து உணரமுடிந்தது.

விநாடிக்கு விநாடி அதிகரித்துக் கொண்டிருந்த வெள்ளத்துக்கு நடுவே, பாலத்தைக் கடந்து சாலைக்கு வந்தபோது  ஒரு நைப்பாசை - மீண்டும் போய் பம்பையில் கரைபுண்டோடும் காட்டாற்று வெள்ளத்தைப் பார்த்து ரசிக்க வேண்டுமென்று! 

அடர்ந்த காடுகள், அடைமழை, காட்டாற்று வெள்ளம், இயற்கையின் சீற்றம் என்பதைவிட அழகின் நர்த்தனம் என்றுதான் உரக்கக் கூவத் தோன்றியது எனக்கு. தொடக்கத்தில் சொன்னதுபோல, கடந்தவாரம் எனக்கு ஒரு வாழ்நாள் அனுபவம் கிடைத்தது. 

சுதந்திர இந்திய வரலாற்றில் மகான் அரவிந்தருக்கு ஒரு தனியிடம் உண்டு. அதனால்தான் அவரது பிறந்த நாளில் இந்தியா விடுதலை பெற்றதோ என்னவோ! 

மகான் அரவிந்தரின் இளைய சகோதரர் பரீந்தர் குமார் கோஷும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில்  பரீந்தர் குமார் கோஷ், 1909-ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை பெற்றார்.  தூக்குத்தண்டனை உயர்நீதிமன்றத்தால் அந்தமானுக்கு நாடுகடத்தலாக மாற்றப்பட்டது.   1909 முதல் 1920 வரை பரீந்தர் குமார் கோஷும் அவருடன் தண்டனை பெற்ற ஆறு நண்பர்களும் போர்ட்பிளேரில் உள்ள அந்தமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். கைதி எண்.31549 என்கிற பெயரில் அந்தமான் "செல்லுலர்' சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரீந்தர் குமார் கோஷ் தனது அனுபவத்தை ஒரு வாக்குமூலமாக எழுதி வைத்தார். அந்த வாக்குமூலம்தான் "அந்தமான் சிறையில் ஒரு ஞானி'  என்கிற புத்தகம்.

 இந்தியத் துணைக்கண்டத்தில் விடுதலைக்காகப் பலர் அனுபவித்த கொடும் சித்திரவதைகளும், உயிர்த் தியாகங்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்கள் ஆற்றிய வீரப் போராட்டங்களும், உயிர்த் தியாகங்களும் நமது நாட்டுக்காக அனுபவித்த சொல்லொணாச் சித்திரவதைகளும்  இன்றைய தலைமுறையினருக்கு முறையாகவும், முழுமையாகவும் எடுத்துச் சொல்லப்படவில்லை. வரலாற்று ஆசிரியர்களும் அதை இருட்டடிப்பு செய்துவிட்டனர். முதல் உலகப் போர் காரணமாக வழங்கப்பட்ட பொது மன்னிப்பால் விடுதலையான பரீந்தர் குமார் கோஷ் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருப்பவர்.  பல நாளேடுகளின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவரது சிறை அனுபவத்தை மட்டும் கூறும் "அந்தமான் சிறையில் ஒரு ஞானி', தன் வரலாற்றுக் குறிப்பு மட்டுமல்ல, அந்தமான்  "செல்லுலர்' சிறையின் செயல்பாடுகள் குறித்த ஆவணப் பதிவும் கூட. 

ஈரோடு டாக்டர் வெ.ஜீவா சூழலியல் சிந்தனையாளர். பல சமுதாய, விழிப்புணர்வு நூல்களை எழுதியிருப்பவர்.  ஒரு மொழிபெயர்ப்பு என்கிற எண்ணமே ஏற்படாத வகையில் பரீந்தர் குமார் கோஷின்  "அந்தமான் சிறையில் ஒரு ஞானி' என்கிற நூலை,  தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 

1922-இல் "ஆர்யா' அலுவலகம் சார்பில் புதுச்சேரியில் அச்சிடப்பட்ட இந்த நூல், நமது விடுதலைப் போரின் மறைக்கப்பட்ட வரலாறும், அந்தமான் "செல்லுலர்' சிறையின் சித்திரவதைகளும் புதிய தலைமுறை அறிவதற்காக எளிய தமிழில் டாக்டர் ஜீவாவால் வழங்கப்பட்டிருக்கிறது. பதிப்பாசிரியர் கவிஞர் புவியரசுக்கு நன்றி.

இணையத்தில்  நுழைவோமே என்று தட்டியதும் கொட்டியது ஒரு   கவிதை.  கவிஞரின் பெயர் ஆ.மணவழகன். 

பள்ளிப் பருவத்தில் மயிலிறகு குட்டிபோடக் காத்திருந்தவர்கள் வரிசையில் எனக்கும் இடமுண்டு. உங்களுக்கும்தான். அதனால், இந்தக் கவிதையை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. 

புத்தகத்தின் நடுவில்
புதைத்துவைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்
இறகு கொடுத்த உன் நினைவோ
குட்டிமேல் குட்டி!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com