இந்த வாரம் கலாரசிகன்

சென்ற வாரத்தில் ஒருநாள், எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராகவும், அவரது இரட்டை வேடத் திரைப்படங்களில் பதிலி (டூப்) நடிகராகவும் நடித்த கே.பி.ராமகிருஷ்ணனின் மகன் ஆர்.கோவிந்தராஜ்
இந்த வாரம் கலாரசிகன்

சென்ற வாரத்தில் ஒருநாள், எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராகவும், அவரது இரட்டை வேடத் திரைப்படங்களில் பதிலி (டூப்) நடிகராகவும் நடித்த கே.பி.ராமகிருஷ்ணனின் மகன் ஆர்.கோவிந்தராஜ் "என்றும் வாழும் எம்.ஜி.ஆர்' என்கிற புத்தகத்தைக் கொண்டு வந்தார். நடிகர் எம்.ஜி.ஆரின் பதிலியாகவும், அரசியல் தலைவர் எம்.ஜி.ஆரின் நிழலாகவும் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்த கே.பி.ராமகிருஷ்ணனைவிட, எம்.ஜி.ஆரைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
 மாதம் தவறினாலும் எம்.ஜி.ஆர். பற்றிய புத்தகம் வெளிவருவது தவறாது போலிருக்கிறது. அவர் மறைந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன என்றாலும், இப்போதும்கூட அவர் குறித்த செய்திகளைப் படிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதிலிருந்து அவர் எப்படிப்பட்ட ஆளுமையாக இருந்திருக்க வேண்டும் என்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. நண்பர் விஜயன் "இதயக்கனி' என்கிற பெயரில் தொடர்ந்து ஒரு மாத இதழை இப்போதும் நடத்துகிறார். அதுவும் விற்பனையாகிறது. இதையெல்லாம் யோசித்தபடியே கே.பி.ராமகிருஷ்ணன் சொல்லச் சொல்ல ஆர். கோவிந்தராஜ் எழுதிய "என்றும் வாழும் எம்.ஜி.ஆர்.' புத்தகத்தைப் புரட்டினேன்.
 அந்தப் புத்தகத்தில் சில செய்திகள் ஏற்கெனவே எனக்குத் தெரிந்தவை. நான் படித்தவை, கேள்விப்பட்டவை. ஆனால் பல செய்திகள் புதியவை. எம்.ஜி.ஆரின் நிழலாக அவரைத் தொடர்ந்த மெய்க்காப்பாளர் என்பதால், பலருக்கும் தெரியாத செய்திகள் கே.பி.ராமகிருஷ்ணனுக்குத் தெரிந்திருப்பதில் வியப்பில்லை.
 40 ஆண்டுகள் அவரது தனிப் பாதுகாவலராக இருந்ததால் அட்சய பாத்திரம் போல எம்.ஜி.ஆர். குறித்த சம்பவங்களும், தகவல்களும் கே.பி. ராமகிருஷ்ணனிடமிருந்து வந்தவண்ணம் இருப்பதில் வியப்படையவும் ஒன்றுமில்லை.
 ஆஸ்திகரா நாத்திகரா, காஞ்சிப் பெரியவரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவுடனான எம்.ஜி.ஆரின் அறிமுகம் போன்ற கட்டுரைகளில் புதிய பல தகவல்களை நான் தெரிந்து கொண்டேன்.
 அகவை 90 கடந்தும் நல்ல நினைவாற்றலுடன் கோபாலபுரத்தில் வசிக்கும் கே.பி.ராமகிருஷ்ணனை சந்திக்க வேண்டும். மனதில் குறித்துக் கொண்டேன்.
 
 இலங்கையிலிருந்து வந்திருந்த பத்திரிகையாளர் எச்.எச்.விக்கிரமசிங்க, தான் தொகுத்த "எஸ்.எம். கார்மேகம் வாழ்வும் பணியும்' என்கிற புத்தகத்தைத் தந்தார். இலங்கையின் மலையகத் தமிழர்களில் ஒருவரான எஸ்.எம். கார்மேகம் இதழியல் துறையில் நிகழ்த்திய சாதனைகள் பல.
 இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் தினசரியான "வீரகேசரி'யில் கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பணியாற்றிய எஸ்.எம்.கார்மேகம், "தினமணி'யிலும் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். மலையகத் தமிழர்களின் தலைவரான தொண்டைமானின் அரசியல் ஆலோசகர்களில் அவரும் ஒருவர்.
 கார்மேகம் பத்திரிகையாளராகச் செயல்பட்ட காலத்தில், மலையகத் தோட்டத் தொழிலாளர்களில் கணிசமானோர் குடியுரிமை அற்றவர்களாக, நாடற்றவர்களாக இருந்த காலம். அவர்களது உரிமைக்காகவும், மலையக இளைஞர்களது உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தவும் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர் கார்மேகம். உரிமைகள் ஏதுமற்று முடங்கிக் கிடந்த மலையக இளைஞர் சமுதாயத்தைத் தனது எழுத்துகளால் விழிப்புறச் செய்தவர். மலையக எழுத்தாளர்களை ஊக்குவிக்க சிறுகதைப் போட்டிகளை நடத்தியவர். 65 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்றாலும், கார்மேகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
 மலையகத் தமிழ் எழுத்தாளர்கள் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்றுத் திகழ்வதற்கான நாற்றங்காலை ஏற்படுத்திக் கொடுத்தவர் கார்மேகம். இலக்கியவாதியாக மட்டுமல்லாமல், மலையக அரசியலில் மிகப்பெரிய பங்கு வகித்த எஸ்.எம். கார்மேகம் குறித்த முழுமையான பதிவுதான் எச்.எச். விக்கிரமசிங்க தொகுத்து வழங்கியிருக்கும் இந்தப் புத்தகம்.
 எஸ்.எம். கார்மேகம் போன்ற அயலகத் தமிழ் ஆளுமைகளை தாயகத் தமிழர்களுக்கு நாம் சரியாக அறிமுகப்படுத்தாமல் இருக்கிறோம். நம்மைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளும் அளவுக்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், தென்னாப்பிரிக்கா முதலிய பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பது தவறு.
 இலங்கையின் மலையக மக்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆவணங்களில் "மலபார் குடிகள்' என்றுதான் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். "இலங்கைவாழ் இந்தியத் தொழிலாளர்கள்' என்று அவர்களை முதன்முதலில் பதிவு செய்தவர் மலையகத் தமிழர்களின் தொழிற்சங்க முன்னோடியும், பத்திரிகையாளருமான கோ.நடேச ஐயர். இந்திய வம்சாவளி மக்கள் என்றுதான் இப்போதும்கூட அரசாங்க ஆவணங்களில் அவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
 மலையக மக்கள் தங்களை "மலையகத் தமிழர்கள்' என அழைத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், இந்திய வம்சாவளியினர் என்பதிலிருந்து விலகிச் செல்ல முயற்சிப்பது அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்காது என்று கருதியவர்களில் தொண்டைமான் மட்டுமல்ல எஸ்.எம். கார்மேகமும் ஒருவர்.
 
 சேலத்தைச் சேர்ந்த கவிஞர் குகை மா.புகழேந்தி எழுதிய கவிதை இது.
 
 பழம் விழுங்கிய
 பறவை ஒன்று
 பறக்கிறது
 ஒரு மரத்தை
 சுமந்துகொண்டு!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com