பாரியின் தேரும் குதிரையும்! 

கடையெழு வள்ளல்களுள் ஒருவன் பாரி. பற்றுக்கோடின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தனது தேரினைத் தந்து புகழ்பெற்ற இவனை சங்கப் புலவர்கள் பலர் பாடிச் சிறப்பித்துள்ளனர்.
பாரியின் தேரும் குதிரையும்! 

கடையெழு வள்ளல்களுள் ஒருவன் பாரி. பற்றுக்கோடின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தனது தேரினைத் தந்து புகழ்பெற்ற இவனை சங்கப் புலவர்கள் பலர் பாடிச் சிறப்பித்துள்ளனர்.
 20-ஆம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களுள் ஒருவரான ரா. ராகவையங்கார், பாரியின் புகழைப் போற்றும் வண்ணம், வெண்பாக்களாலான "பாரிகாதை' என்ற வரலாற்றுக் காப்பியம் ஒன்றைப் படைத்தார். அதில் அவனுடைய சிறப்புகளை விரித்துரைக்கின்றார். பாரி ஈந்த தேரின் குதிரை பற்றிய இவரது கண்ணோட்டம் சிந்திக்கத்தக்கது.
 முல்லைக் கொடிக்குப் பாரி தேரினை ஈந்த செய்தியோடு நமது சிந்தனையானது நின்றுவிடுகிறது. ஆனால், காற்றில் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினைக் கொடுத்தபின் அத்தேரின் குதிரை என்னவாயிற்று? பாரி எவ்வாறு பின்பு நாடு திரும்புகிறான்? என்பது குறித்துச் சிந்திக்கிறார் ரா. ராகவையங்கார். அதனை வெளிப்படுத்தவும் செய்கின்றார்.
 முல்லைக் கொடியின் துயரைத் தீர்க்கத் தன்னிடம் இருந்த தேரினைத் தவிர, வேறெதுவும் இல்லையென்பதை அவன் உணர்ந்தான். அடுத்த நொடியே பகைவரை வெல்ல உதவும் தனது வலிய தோளில் அக்கொடியை மெதுவாகத் தாங்கியவாறு, மெல்ல ஏந்திப் பின் தனது தேரின் மீது படருமாறு விடுத்தான். பாரியின் இச்செயலைப் புறநானூற்றுப் பாடலொன்று,
 ஊருட னிரவலர்க் கருளித் தேருடன்
 முல்லைக் கீத்த செல் நல்லிசைப்
 படுமணி யானைப் பறம்பிற் கோமான் (பா.201)
 எனச் சுட்டுகின்றது. இப்பகுதிக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் ஒருவர், "முல்லைக்குத் தேரீந்த பாரி, அத்தேரில் கட்டப்பட்டிருந்த குதிரையையும் சேர்த்தே கொடுத்தான்' என்கிறார். இக்கருத்தை ராகவையங்கார் ஏற்கவில்லை. "குதிரையைத் தேரிலிருந்து அவிழ்த்துவிட்டு, தேரை மட்டுமே ஈந்தான்' என்கிறார் அவர். தனது அக்கருத்தினை வலியுறுத்தி, "பாரிகாதை'யில்,
 கொடிமுல்லைப் பாங்கர்க் குறுகியஃ துற்ற
 மிடியொல்லைத் தீர்க்க விழைந்து -
 படிவெல்லுந் திண்புயத்தாற் றாங்கிமெலத்
 தேர்மெற் செலவிடுத்தான்
 பண்பரிமாப் பூட்டுப் பறித்து (பா.78)
 என்று பாடிப் பதிவு செய்கிறார். இதற்கு உரையெழுதும் அவரே, "புரவியோடு கொடுத்தாற் றேர்நிலைநின்ற அவரே, "புரவியோடு கொடுத்தாற் றேர்நிலைநின்ற பற்றுக் கோடாகாமையும், முல்லைக்கொடி சிதைந்து கெட்டொழிதலும் உணர்ந்து கொள்க' என்கிறார். மேலும், "இரவலர்க்கு ஊருடனருளி எனவும், முல்லைக்குத் தேருடனீந்து எனவும் வந்தவிடத்து, இரவலர்க்கு ஊர்களை அவர் இரந்தவுடன் அருளியென்றும்; முல்லைக்கொடி அவ்விரவல் போல இரவாதாகவும், அதன் வருத்தங் கண்டவுடன் தேரினை விரைந்து ஈத்து என்றும் பொருள் கூறிக் கொள்க' என்றும் எழுதுகின்றார்.
 அருளும் தன்மையுடைய பாரி, பூட்டிய குதிரையை அவிழ்க்காமல் தேரினைக் கொடுத்தான் என்றால், பிணைக்கப்பட்டிருக்கும் அக்குதிரையால் அக்கொடி சிதைக்கப்பட்டு, தான் தேரைக் கொடையாகக் கொடுத்ததற்கே உரிய நோக்கமில்லாமற் போய்விடும் என்று நினைத்திருக்கிறார் ராகவையங்கார். மேலும், அவிழ்க்கப்படாது விட்ட அக்குதிரையின் நிலை என்னவாகும்? என்ற வினா எழ வாய்ப்பும் உருவாகும் என்பதும் அவர் கருத்தாதல் கூடும். ஆதலால்தான், தேரினைக் கொடுக்குமுன், பாரி குதிரையை அவிழ்த்து விட்டான் எனத் தனது காப்பியத்தில் அவர் பாடினார். மேலும், அக்குதிரையின் நிலையை விளக்கும் வகையில் பின்வருமாறு இன்னொரு பாடலையும் தருகிறார் அவர்.
 பாரி கொடையைப் பகரவிரைந் துற்றாங்கு
 மூரி விசைப்புரவி முன்னோட வூரினுளா
 ரொன்றுமே தேறார்சேர்ந் தொல்லென்
 றிரைத்தெழுந்தார்
 துன்றுதேர் காணாது சூழ்ந்து. (பா.82)
 முல்லைக்குத் தேரீந்த பாரியின் அந்த அருளொடுகூடிய கொடைத் தன்மையை மகிழ்ச்சியுடன் உடனே ஊருக்கு அறிவிக்க நினைத்து, பாரி தனது இருப்பிடத்திற்கு வந்து சேரு முன்னமேயே தேர்க்குதிரை விரைந்தோடி வந்தது என்கிறார். குதிரை இவ்வாறு ஓடி வருவதைக் கண்ட அவ்வூர் மக்கள், பாரியையும், பாரியின் தேரினையும் காணாமல், ஒரு செய்தியும் தெரியாமல் திரண்டு வந்து "ஒல்'லென்ற ஒலியுடன் ஆரவாரம் செய்தனர் என்றும் கூறி வியக்கிறார் ஆசிரியர்.
 குதிரையை அவிழ்க்காமலேயே முல்லைக் கொடிக்குத் தேரினைக் கொடையாகத் தந்தான் பாரி என்ற பிறரது கருத்தினை மாற்றி, அவன் கொடுத்த கொடையும் பொருள்படப் புகழப்பட வேண்டும் என எண்ணிய அவர், குதிரையை அவிழ்த்து விட்டுத் தேரினை மட்டும் அளித்தான் எனத் தனது காப்பியத்தில் அமைத்துப் பாடியிருப்பது எண்ணி மகிழத்தக்கது.
 - முனைவர் ச. சுப்புரெத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com